Sunday, February 10, 2013

அப்சல் குரு படுகொலை தரும் பாடங்கள்.


     காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு,  "மரண தனடனைகளை" கூட தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறது என்றால், அது இந்திய சூழலின் பரிதாபம். 2001 இல் நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதல் இன்னமும் "மர்மமாகவே" இருக்க, அவர்கள் அன்றைய பா.ஜ.க.அரசை காப்பாற்ற உதவி இருக்கலாம். அது அவர்களது அரசியல் கள்ள கூட்டு. ஆனால் ஞாயிறு காலை "தி ஹிந்து" ஆங்கில ஏடு வெளியிட்டுள்ள, நடுப்பக்க கட்டுரையும், தலையங்கமும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. அஞ்சலி மோடி தனது கட்டுரையில், "நியாயமான சந்தேகங்களை தாண்டி,ஒரு மனிதன் தூக்கிலடப்பட்டான்" என்று நடந்த நீதிமன்ற விசாரணை எப்படி "நேர்மையற்றது" என்பதை தெளிவு படுத்தியுள்ளார் தனக்கு முறையான வழக்கறிஞரை நீதிமன்ற விசாரணையில் வைத்துக் கொள்ள முடியாத நிலையில், வாய்த்த வழக்கறிஞர்களும் இடையிலேயே ஓடிவிட,[ கசாபிற்கு ஏற்பட்டதை போல} வந்த வழக்கறிஞரும் ஊசி போட்டு கொலை செய்வதை ஆதரிக்க, சாட்சிகள் இல்லாமலேயே, அப்சல் குருவிற்கு மரண தண்டனை பரிசாக வழங்கப்பட்டது.[ இந்திய உளவு துறை இப்படித்தான் நீதிமன்ற விசாரணையை வழக்கறிஞர் வைக்க விடாமல் கூட சதி செய்து நீதியையே குலைப்பார்களோ?"} நாடாளுமன்ற கட்டிட தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கொலை செய்யப்பட்ட நிலையில்,சாட்சிகளை யாரையுமே அரசப்படை உயிரோடு இருக்க விடாத நிலையில், அப்சல் கருவுடன், தண்டனை வழங்கப்பட்டது. அவரது கூட்டாளிகளாக வர்ணிக்கப்பட்ட கிலானியும், அபசன் என்பவரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட நிலையில், அப்சல் குரு தண்டனை மட்டும் எப்படி மறு உறுதிக்கு உள்ளாகும்? 

     ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற நேற்றைய கால ஆயுதம் தாங்கிய படையில் இருந்த அப்சல் குரு 1991 இலேயே சரணடைந்துவிட்டார்?  அதன்பிறகு உங்களது, மத்திய சிறப்பு காவல் படையின் முகாம்களில், வழமையாக கையெழுத்து போட்டு வந்தாரே? எப்படி அவர் டில்லி கட்டிட தாக்குதலில் " மூளையாக" உங்கள் கண்காணிப்பில் இருக்கும்போதே ஈடுபட முடியும்? அதுவும் அவரது முந்தைய "ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி" இப்போது ஆயுதம் தாங்கிய போரை நடத்த வில்லையே?  அதனால்தான் அவரை வேறு ஒரு புதிய போராளி அமைப்பான "ஜெய் -சே-முகமது" போராளி என்று குற்றம் சாட்டியுள்ளிர்க்ளா? அப்படியானால் அந்த தாக்குதல் உட்பட எல்லாமே அரசின் "திட்டமிட்ட நாடகமா?" அதைதான் ஞாயிறு "தி ஹிந்து" ஏட்டில், 12 ஆம் பக்க கட்டுரையில் "அருந்ததி ராய்" கேட்கிறார். நாடாளுமன்ற தாக்குதல் பற்றி உண்மைகளை தேடுபவர்கள், அப்சல் குருவின் வழக்கு விசாரணை குளறுபடிகளை காண வேண்டும் என்கிறார்.பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இவர்களுக்கு என்ன அவசரம்? இந்த "தி ஹிந்து"ஏட்டு தலையங்கத்தில், "பழிவாங்குதல்  நீதி தருவதல்ல" என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்கள்.அப்படியானால் இது "பழிவாங்குதல்" தானா?

     இந்த அப்சல் குருவின் உயிரை வைத்துக் கொண்டு இந்திய அரசு எத்தனை ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக "சதுரங்கம்" விளையாடி வந்தது? இந்திய உளவு துறை "ரா" ஒற்றன் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி, "சர்பாஜன் சிங்" என்பவரை, குண்டு வைத்ததற்காக  மரண தண்டனை கொடுத்து பாக் சிறையில் வைத்திருக்கிறது. அவர் மீது கருணை மனு நிராகரிக்கப்ப்படும் போதேல்லாம், முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உடனேயே, அப்சல் குரு மீது நாங்களும் கருணை மனுவை நிராகரிக்க போகிறோம் என்று மிரட்டல் விட்டு, "அரசியல் சதுரங்கம்" ஆடியது நமக்கு மறந்து விடுமா? ஐ.நா. சபை "மரண தணடனையை" சட்டத்திளிருந்தே நீக்குங்கள் என்று ஆலோசனையை, ஒரு "தீர்மானம்" மூலம் கூறிய பிற்பாடும், இங்கே மரண தண்டனையை "நாடுகள் இடையே உள்ள அரசியலுக்கு" பயன்படுத்தி வந்தார்களே? இப்போது, தேர்தலில் காங்கிரஸ் கட்சி சரியும் என்று "ஜெய்பூர் காங்கிரஸ் மாநாட்டில்" பேசிய பிறகு, சரிவை சரிக்கட்ட, பா.ஜ.க.வாக்குகளை பறிக்க இப்படி ஒரு உயிரை கொலை செய்ய வேண்டுமா?  இது அரசியல் கொலை என்பதை உலகம் கைகொட்டி சிரிக்காதா?  

  காஷ்மீர் சுய நிர்ணய உரிமைக்கு போராடிய, "ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்" தலைவர்  "மக்புல் பட்" என்ற விடுதலை வீரரை, இதே திகார் சிறையில் இந்திரா காந்தி தூக்கிலிட்டார். ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கு போராடிய "மதச்சார்பற்ற இயக்க தலைவரை" அவ்வாறு படுகொலை செய்தார்கள். அதற்கு பிறகு அந்த விடுதலை போராட்டத்திற்கு "மதசசாயம்" குத்த முடிந்தது. அதேபோல ஒரு திரைப்படம் மூலம் தமிழர்கள் இடையே "மத வேறுபாட்டை" தூண்ட முயன்றவர்கள் "இவர்கள்" என்று சமீபத்திய வரலாறு கூட கூறுகிறது. இங்கே உள்ள "ராஜீவ் கொலை கைதிகளை" மூன்று தமிழர்களை இதேபோல காங்கிரஸ் கொலை செய்யுமா? என்று கேட்கிறார்கள்.நீதிமன்ற தடை பற்றியும் பேசுகிறர்கள். ஆனால் இந்திய நாடாளுமன்ற வராற்றிலேயே இல்லாத அளவுக்கு, ஒரு சட்டமன்றம் தீர்மானம் போட்டு, "மூன்று தமிழர்களின் மரண தணடனையை ஆயுள் தண்டனையாக குறைக்க" வலியுறுத்தியுள்ள போது , நாடாளும்னற பாதையை நம்புவதாக கூறிக்கொள்ளும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் தலைமையும், மூன்று தமிழரை கொலை செய்துவிட்டு, இந்த உலகில் நடமாட முடியுமா? நாம் ஒன்று செய்யலாம். தமிழக சட்டமன்றம், 2011, ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றிய , "மூன்று தமிழர் மரண தண்டனையை குறைக்க சொல்லும் தீர்மானத்தை" நகல் எடுத்து, லட்ச்சக்கணக்கில், மக்கள் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும்,  ஒரு "பரப்புரையை" செய்யலாம். அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களின், குரலை தில்லிக்கு உரைக்கலாம்.
      

            

No comments:

Post a Comment