Monday, February 25, 2013

சேது சமுத்திர கால்வாய் திட்டம் தமிழர்களின் பெருமை அல்ல.வெறுமையே?



     நீண்ட காலமாக தமிழ்நாட்டில் ஒரு தவறான செய்தியை மீண்டும், மீண்டும் கூறி அதையே உண்மை போல ஒரு உணர்வை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள் அதுதான் சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் பெருமை என்பது. ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் ஒரு கால்வாய் அமைத்து, அதில் கப்பல் விடலாம் எனபது அவர்களது திட்டம். ஆப்பிரிக்கா காண்டத்திலிருந்து, வருகின்ற கப்பல்கள் இலங்கை தீவை சுற்றி செல்கின்றன அப்படி செல்லும்போது கொழும்பு துறைமுகத்தில் தங்கி செல்கிறன. அவ்வாறு செல்வதால் கொழும்பு  துறைமுகம் அதிக லாபம் ஈட்டுகிறது. அதையே நாம் " சேது கால்வாயை" தோண்டி விட்டால், வருகின்ற கப்பல்கள் எல்லாம், இலங்கையை சுற்றி செல்லும், அதிக தூரத்தை குறைக்க எண்ணி தங்கள் பயண நேரத்தையும், பயண செலவையும், குறைக்க சேது கால்வாயை நாடுவார்கள் என்பது அவர்களது வாதம்.  அதன்மூலம் தமிழ்நாடு செழிக்கும். அதிக வணிகம் பெருகும். அதிக லாபம் ஈட்டலாம். அதனால அது தமிழர்களின் பெருமை.  இதுதான் அவர்களின் வாதம்.

            முதலில் சேது கால்வாய் தோண்ட வேண்டிய இடம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் அது இந்துமகா சமுத்திரம் என்ற வங்காள விரிகுடா பகுதி. அங்கு 21 சிறு தீவுகள் உள்ளன. அவற்றில் "பவளப் பாறைகள்" உள்ளன. அந்த தீவுகள் தூத்துக்குடிக்கும், ராமேஸ்வரத்திற்கும் மத்தியில் உள்ளன. அந்த பவளப் பாறைகள் தடுத்து நிறுத்திய காரணத்தினால் தான், 2004 ஆம் ஆண்டு அடித்த சுனாமி பேரலை தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்தை "தாக்க"வில்லை. அத்தகைய பவளப் பாறைகள் சேது கால்வாய் திட்டம் வந்தால் என்ன ஆகும்?  கால்வாயில் செல்லும் கப்பல்கள் கசியும் எண்ணை பொருள்கள், கடலிலே பரவி, சிறிது, சிறிதாக, பவளப் பாறைகளை அழித்து விடும். அப்போது எந்த பேரலை கடலிலே வந்தாலும், அது தூத்துக்குடியையும்,  ராமேஸ்வரத்தையும் கடுமையாக பாதிக்கும். இதைத்தான் சுற்று சூழலை அழிக்காதீர்கள் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

       அடுத்து அந்த கடலில்,அரிய மிருகமான "கடல் குதிரைகள்" இருக்கின்றன. அவை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் தட்ப, வெப்ப சூழலுக்கு ஒப்ப, இடம் பெயர்ந்து செல்லும். அவை எங்குமே உலகில் கிடைக்காத "அரிய வகை மிருகங்கள்". கால்வாய் தோண்டும் இடத்தில் அந்த கடல் குதிரைகள், ஒரு புறத்திலிருந்து , இன்னொரு புறத்திற்கு கடந்து செல்லும். கால்வாய் தோண்டி விட்டால் அவை  தட்ப வெப்பம் தாங்காமல் அழிந்து விடும். ஆகவே அவற்றை பாதுகாக்கவும், பவளப் பாறைகளை பாதுகாக்கவும்,  ஐ.நா. தலையிட்டு செயல்பட்டு வருகிறது. யுனெஸ்கோ என்ற ஐ.நா. அமைப்பு,  உலகில் முக்கியமாக பாதுகாக்கப்படவேண்டிய சுற்று சூழல் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் வங்காள விரிகுடா பகுதி "தேசிய பூங்கா" என்று  அறிவிக்கப்பட்டுள்ளது  அதை பாதுகாக்க ஐ.நா.வின் வளர்ச்சி திட்டமான யு.என்.டி.பி. பல இலட்ச்சங்களை செலவு செய்துள்ளது. அதற்கு எதிராக ஐ.முகூ. அரசாங்கம், சேதுகால்வாய் திட்டத்தை கொண்டுவந்து அதற்கு 1500 கோடி என்று ஒதுக்குகிறது.உலக அதிசியமாக தமிழ்நாட்டில் "ஒரு சுற்று சூழல் பகுதி" இருப்பதைக்கூட, அவர்களால் தாங்க முடியவில்லை. 

      அதேபோல சேது கால்வாய் வந்துவிட்டால் அந்த பகுதி முழுமைக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாது. அதன் விளைவாக ஐந்து லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் இததனை செய்திகளையும் மறைந்த  பேராசிரியரும், மெட்ராஸ் பலகலை க் கழக "மானுடவியல் துறை" தலைவருமாக இருந்த சுதர்ஷன் தனது ஆராய்ச்சியில் தெளிவு படுத்தியுள்ளார்.  அந்த சுதர்ஷன் சி.பி.எம்.இன் "தமிழ்நாடு அறிவியல் கழக" தலைவராகவும் இருந்தார். அப்போது அதே அமைப்பினர் இந்த "சேது கால்வாய்  எதிர்ப்பு" கருத்தை சென்னை "நொச்சி குப்பத்தில் தொடக்கி தமிழக கடற்கரையெங்கும் "எடுத்து சென்றனர். இப்போது அரசியல் காரணங்களுக்காக மாற்றி பேசுகின்றனர்

அடுத்து சேது கால்வாய் திட்டம் லாபம் த்ருமா? என்ற கேள்வி. பெங்களூரில் உள்ள ஜேகப் என்ற பொருளாதார நிபுணர் ஒரு ஆராய்ச்சி செய்தார். அதில்   வரும் கப்பல்கள், சேது கால்வாய் வழி வரவேண்டும் என்றால், தனகளது கப்பலின் வேகத்தை குறைத்து, உள்ளே  வர "பைலட் கப்பலுக்கும்" வாடகை கட்டி, சேது கால்வாயில் தங்கி செல்லவும் வாடகை கொடுத்து செல்ல வேண்டும் என்பதால், அதற்கு செலவாகும் பணம், இலங்கையை சுற்றி செல்லும் செலவை விட கூடுதலாக ஆகும் என்று கணித்துள்ளனர்.ஆகவே அவர்கள் வராமல் சேது கால்வாய் திட்டம் "லாபம்" ஈட்ட முடியாது. இவ்வாறு கணித்துள்ளார். அதனால்  சேது கால்வாய் க்காக "ஆக்சிஸ் வங்கி" உலகம் எங்கும் போய்  கடன் கேட்டும், உலகின் பெரிய வங்கிகள் கொடுக்க மறுத்து விட்டன. 

   இந்த அளவுக்கு "பொருளாதாரத்திலும் நட்டம். சுற்று சூழலை காப்பாற்றுவதிலும் நட்டம்" என்ற கருத்தை சமீபத்திய நடுவணசின் பச்சவுரி நிபுணர் குழு கூறி இருந்தாலும், திமுக  தலைமையை சரிக்கட்ட, இப்போது ஐ.முகூ.அரசு சேது கால்வாய் கொண்டுவர "பச்சை கொடி" காட்டியுள்ளது. இந்த "பச்சை கொடி" கு பின்னால், சேது கால்வாய் மூலம், அந்த தெற்கு வட்டாரத்தில் " இந்திய ராணுவ தளத்தை"உருவாக்க நடுவணரசு "சதி" செய்கிறது.  ஏறகனவே அமெரிக்காவுடன் 2005 ஆண்டில் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்து மகா சமுத்திரத்தை, இரு நாடுகளும் சேர்ந்து, கண்காணிப்பது என்ற  திட்டத்திற்கு ஒத்துழைப்பாக, "சேது" வை அவர்கள் காண்கிறார்கள். அதன்மூலம் தமிழன் நடமாடும் பகுதிகள், அமேரிக்கா-இந்தியா என்ற வல்லரசுகளின் "கட்டுப்பாட்டிஉல்" இருக்கும். இதை ராமனதாபுரம் "பொது விசாரணையில் நாம் கூறும்போது  "லாபம் இலை" என்ற வாதத்தை வைத்த மறுநாளே, டி.ஆர்.பாலு என்ற அன்றைய கப்பல் துறை அமைச்சர் தூத்துக்குடி கூட்டத்தில் "லாபம் இல்லைதான். ஆனால் இந்தியாவின்  ராணுவ தேவைக்கு அவசியம்" என்று கூறினார். அதனால் அது தமிழர்களின் பெருமை அல்ல. மாறாக வெறுமையே.

   இந்த நேரத்தில் "சுற்று சூழல் ஆபத்துகளையும் , மீனவர் வாழ்வாதார அழிவையும்" எடுத்து கூறும் நமக்கு,  பதில் கொடுக்க மதவாத சக்திகள், அதை "ராமர் பலம்" என்று  திசை திருப்பி அந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்ய முனைகிறார்கள்.  ஆகவே அவர்களின் வாதமும், "சேது கால்வாய் ஆதரவு" வாதம்தான்.இவர்கள் நமது ஆரோக்கியமான விவாதத்தை இல்லாமல் செய்ய வந்த எதிரிகள்.

No comments:

Post a Comment