Thursday, April 16, 2015

ஆந்திரக்கதை-புகார் கொடுத்ததால், குற்றம் பதிவு செய்யப்பட்டது.

 ஆந்திரக்கதை-புகார் கொடுத்ததால், குற்றம் பதிவு செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------
      தமிழ்நாடு பி.யு.சி.எல்.காரர்களான  நான்,பிரான்சிஸ், சரவணன் மூவரும், டில்லி பி.யு.டி.ஆர்.தோழர்கள் சண்டனு,அஜிதா இருவருடனும் திருப்பதி சென்று "ஆல் இந்தியா ரேடியோ பை பாஸ்" சாலையில் உள்ள வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவின் அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அன்று வெள்ளிக்கிழமை.ஏப்ரல் 10 ஆம் நாள்.இரவு 7 மணி இருக்கும். மறுநாள் சனிக்கிழமை "காட்டிற்குள் சென்று கொலைகள் நடந்த இடத்தை"காண்பதுதான்,ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு சார்பாக அவர்  எங்களிடம் கொடுத்திருந்த திட்டம். ஆனால் நாங்கள் சென்ற உடன் அவர் முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.கொலை செய்யப்பட்டவர்கள் 20 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால்,  "தமிழ்நாட்டில் உள்ள தோழர்களிடமும், தொடர்புகளிடமும் தான் பேசி வருவதாகவும்", யாராவது இறந்தவர் ஒருவரின் உறவினர் ஒருவரை கொண்டுவந்த சம்பவம் நடந்த காவல் நிலையமான  "சந்திரகிரி" காவல் நிலையத்தில்  "ஒரு புகாரை பதிவு"செய்யவைததால் அதுவே ஆந்திர உயர்நீதிமன்றம் ஏற்கனவே அன்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தபடி,"உச்சநீதிமன்ற வழிகாட்டலின் படி" நடந்த துப்பாக்கி சூட்டிற்கு "கொலை வழக்கு" பதிவு செய்ய ஏதுவாக இருக்கும் என்பது அவரது முன்வைப்பு. அவருக்கு எங்களுடன் "உண்மை அறியும் குழு"வை கூட்டிச்செல்லும் பணியுடன், இந்த புகார் பதிவு செய்யும் கூடுதல் பணியும் சேர்ந்து கொண்டது என உணர்ந்தோம்.

         அங்கிருந்தே தொலைபேசியில், "தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தலைவி ஷீலுவை" தொடர்பு கொண்டு  அவர்களது அமைப்பினர் "திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில்" தொடர்ந்து பணியாற்றுவதால் அவர்களால் "ஒரு இறந்தவரின் உறவினரை "அழைத்துவர முடியுமா? என வினவினோம். அவரும் அவர்களது பணியாளர் ராஜா அதற்கு "தயார்"என்று கூறியதாக தெரிவித்தார்.பிறகு மீண்டும் ராஜா கூறிய செய்தியை கூறினார். அதாவது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள "கண்ணமங்கலம்" பகுதியில் இருந்து ஆந்திரா சென்ற 7 பேர்தான் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களில் 6 பேர் வன்னியர் சமூகம் என்றும், ஒருவர் போயர் சமூகம் என்றும், "பா.ம.க.அவர்களுடன் தொடர்பில் உள்ளது" என்பதுமே அந்த செய்தி. சரி.பா.ம.க.வால் இந்த பணியை கண்டிப்பாக செய்யமுடியும் என்பதே எனது கணிப்பாகவும் இருந்தது. உடனேயே நான் "பா.ம.க.வழக்கறிஞர் பாலு", மற்றும் "பசுமை தாயகம் அருள்" ஆகிய இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அருள் உடனடியாக கிடைத்துவிட்டார். விவரத்தை எடுத்து கூறியவுடன் "கண்டிப்பாக உடனடியாக செய்துவிடலாம்" என்றும் கூறினார். வழக்கறிஞர் பாலுவும் உடனடியாக தொடர்புக்கு வந்து மறுநாள் "காலையிலேயே" உறுதியாக நிற்கக்கூடிய ஒருவரை கண்டுபிடித்து அழைதது வருகிறோம் என்று கூறினார். மறுநாள் சனிக்கிழமை.பாலு இதே சம்பவத்திற்காக ஒரு"சிறப்பு வழக்கு" போட  சென்னை உயர்நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆகவே அந்த குறிப்பிட்ட வட்டாரத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் "எதிரொலி மணியனை" இந்தப்பணியை செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

               நாங்களும் இந்த செய்தியை ஆந்திரபிரதேச சிவில் உரிமை குழு வின் வழக்கறிஞர்கள் கிராந்தி சைதன்யாவிற்கும் , ஹைதராபாத்தில் உள்ள இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் வாதாடி வரும் வழக்கறிஞர் ரகுனாததிற்கும் தெரிவித்து விட்டோம்.எங்கள் எதிர்பார்ப்பு மறுநாள் சனிக்கிழமை மதியததிற்குள் "புகார் கொடுப்பதர்கான் உறவினர்கள்" வந்துவிடுவார்கள்  எனபதே.ஆனால் உடனடியாக சம்பந்தப்பட்ட மக்களை திரட்ட முடியவில்லை என்ற சூழலில், வழக்கறிஞர் பாலு தொடர்பு கொண்டு "ஞாயிற்றுக் கிழமை" காலை எப்படியும் தானே இருந்து அழைத்துவந்து விடுகிறேன் என்றார். அன்று சனிக்கிழமை அந்த திருவண்ணாமலை பகுதிக்கு பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி எம்.பி.வருகை புரிந்து இந்த பணியில் "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" முழுமையாக ஒத்துழைக்கும்படி கோரினார் என்பதையும் பிறகு அறிந்தோம். 

அன்று சனிக்கிழமை நாங்கள் "காட்டிற்குள் சென்றதும்" அதுவே காட்சி ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதும், மாலையில் 4 மணிக்கு "ஊடகவியலாளர் கூட்டத்தில்" நாங்கள் காவல்துறையின் "பொயகூற்றை"அம்பலப்படுத்தியதும், நாடெங்கிலும் உள்ள குறிப்பாக "ஆந்திரா,தமிழ்நாடு" ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் "தொலைக்காட்சிகள்"மூலம் சென்றுவிட்டது என்பதும்  தெரியமுடிந்தது.அதுவே ஆந்திர காவல்துறைக்கு குறிப்பாக திருப்பதி காவல்துறைக்கு அதிலும் குறிப்பாக "செம்மரக்கடத்தல் எதிர்ப்பு அதிரடிப்படை உயர் அதிகாரிகளுக்கும்,வன இலாககாவின் அதிகாரிகளுக்கும்"பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அதனால்தான் அவர்கள் குறிப்பிட்ட வன இலாக்கா அதிகாரியை சந்தித்து நியாயம் கேட்க சென்ற எங்கள் மீது "அனுமதி இன்றி காட்டிற்குள் நுழைந்தவர்கள் என்று வழக்கு பதிவு" செய்துள்ளார்கள் என்பதை அறிந்தோம்.

         மறுநாள் எங்கள் மீது "வழக்கு பதிவு" செய்திருப்பது, தெலுங்கு, மற்றும் தமிழ், ஆங்கில ஏடுகளுக்கு" ஒரு செய்தியாக ஆகிவிட்டது. அதுவே நேரில் நின்று "பா.ம.க.கொண்டுவரும் புகார்களை" உடன் இருந்து பதிவு செய்வது என்பதில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆந்திர சிவில் உரிமைக் குழு செயலளார் வழக்கறிஞர் சந்திரசேகரும், கிராந்தி சைதன்யாவும், பா.ம.க.வழக்கறிஞர் பாலு,அருள்,எதிரொலி மணியன் ஆகியோருடன் இணைந்து  "புகார்களை தயார் செய்வதும்,அதை படி எடுப்பதும்" என்ற பணிகளில்  ஈடுபட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட "சந்திரகிரி காவல் நிலையத்திலேயே நேரில் சென்று சந்திரசேகரும், மும்பையிலிருந்து வந்திருந்த சி.பி.டி.ஆர்.[ ஜனநாயக உரிமைக்கான பாதுகாப்பு குழு} அஜ்மல் என்ற இளைஞரும் உடன் இருந்து, அந்த புகார்களை பதிவு செய்ய உதவினர். பா.ம.க. அருளும்,பாலுவும் முக்கிய பங்கு வகித்தார்கள். அவர்கள் காவல் நிலையம் வருவதற்குள் "35 தெலுங்கு தொலைக் காட்சிகளும்,10 தமிழ் தொலைக் காட்சிகளும்,15 அச்சு ஊடகங்களும்" சந்திரகிரி காவல்நிலையம் முன்பு நின்று கொண்டு பொறுமை இழந்து எனக்கு தொலை பேசிக் கொண்டே இருந்தார்கள்.அந்த கூட்டமே காவல்துறையை "மிரட்டி" இருக்கவேண்டும். அங்கு வந்த டி.எஸ்.பி.அருளிடம் "இந்த காவல்நிலயமே இப்போது உங்கள் கட்டுப்பாட்டில்தான்" என்று கூறினாராம்.

        நம்மவர்களும், கொலை செய்யப்பட "சசிகுமார் என்பவரின் மனைவி முனியம்மாள்" கொடுக்கும் "புகாரை" முதலில் விரிவாக எழுதி, மரணம் அடைந்த "20 பேரின் சார்பாக" என்று எழுதி, அதில் "பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள்" என்பதையும், "கொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்" என்றும் எழுதி புகாரை கொடுத்துள்ளார்கள். பா.ம.க.வினர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தின் கண்ணமங்கலம் பகுதியின் கொல்லப்பட்ட 6 பேரின் உறவினர்களையும்,திருவண்ணாமலை மாவட்ட ஜவ்வாது மலையின் கொலை செய்யப்பட 5 பழங்குடி மக்களின் உறவினர்களையும், தருமபுரி மாவட்டம் அரூர்  வட்டம் கொலை செய்யப்பட 7 பேரின் உறவினர்களையும் அழைத்து வந்திருந்தனர். அதனால் அதுவே கொலை செய்யப்பட 20 தமிழர்களில்,18 பேரின் உறவினர்களை அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.இதுவே ஆந்திரத்து ஊடகங்களுக்கும், காவல்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக போய் விட்டது. அதனால் அவர்கள் "ஆடிப்போய் விட்டார்கள்".

      நேற்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் "புகார் கொடுத்த முனியம்மாளை   " நேரில் அழைத்து சென்று "சித்திரவதை செய்து தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றும், அதனால் மீண்டும் "பிணக்கூறு ஆய்வு" செய்யவேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலு தொடுத்திருந்த "மறு பிரேத பரிசோதனை" வழக்கில், ஆந்திர உயர்நீதிமன்றத்தை அணுகவும் என்று நீதியரசர் கொடுத்த தீர்ப்பினால் அவர் அங்கே செவ்வாய்கிழமை அணுக வேண்டி வந்தது.அதேசமயம் ஏற்கனவே ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் "ஆந்திர சிவில் உரிமைக் குழு" போட்ட வழக்கு இருப்பதால் அதில் "முனியம்மாளின் புகாரை" அடிப்படையாக வைத்து " 302 வது பிரிவின் கீழ்" வழக்கு பதிவு செய் என நீதிமன்றம் காவல்துறைக்கு "கட்டளை" இட்டிருந்தது. அதையொட்டி இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

                     இன்று[15-04-2015] சந்திரகிரி காவல் நிலையம் சார்பாக ஆந்திர உயர்நீதிமன்றம் முன்பு முன்வைக்கப்பட்ட "முதல் தகவல் அறிக்கையில்" "கொலைகளும், கடத்தல்களும்" நடைபெற்றதற்கான "குற்றப் பிரிவுகளை" பதிவு செய்து முன்வைத்தனர். அதாவது "பிரிவு எண் 302, பிரிவு எண் 364-இந்திய தண்டனை சட்டம்-341 இன்கீழ் " என்று  "குற்ற வழக்கு" பதிவு செய்யப்பட்டதை  அறிவித்துள்ளனர். இது "ஆந்திர காவல்துறையினர் மீது அதாவது செமம்ரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் மீது" என்பதாக வழக்காக பதிவு ஆகியுள்ளது.இதுவரை ஆந்திரா "எத்தனையோ போலி மோதல் சாவு வழக்குகளை கண்டுள்ளது" என்றும் ஆனால் இதுவரை "இப்படி காவல்துறையின் மீதே கொலை,மற்றும்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதில்லை" என்றும் ஆந்திர சிவில் உரிமைக் குழு செயலாளர் தோழர் வழக்கறிஞர் சந்திரசேகர் நம்மிடம் தொலைபேசியில் கூறினார்.

     இது மனித உரிமை போராளிகளுக்கு கிடைத்த முதல் "வெற்றி" என்றால், பா.ம.க.வினர் முனியமமாள்  மூலம் தொடுத்துள்ள வழக்கு நாளை வருகிறது.. அது "இரண்டாவது உடற்கூறு ஆய்வு" கோரிக்கையைக் கொண்டது. அதுவும் தர்மபுரியை சேர்ந்த கொலை செய்யப்பட 7 பழங்குடிமக்களின் உடல்கள் ஏற்கனவே"எரிக்கப்பட்ட நிலையில்" மற்றும் சேலத்தை ஒருவரின் உடலும் எரிக்கப்பட்ட நிலையில்,மீதமுள்ள திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேரின் உடல்களாவது அந்த "மறு உடற்கூறு ஆய்வுக்கு" உட்பட வேண்டும் என எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment