Thursday, April 16, 2015

திருப்பதி கொலைகள்-நியாயம் கேட்டோம். வழக்கு போட்டார்கள்.

திருப்பதி கொலைகள்-நியாயம் கேட்டோம். வழக்கு போட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------
     தமிழ் தொழிலாளர்களை "காக்கை,குருவி" போல சுட்டுக் கொன்ற  ஆந்திர காவல்துறையினரையும், வனத்துரையையும்  நேரில் சந்தித்து "கேள்விகள்" கேட்க "உண்மை அறியும் குழு" முடிவு செய்தது. ஏப்ரல் 11 ஆம் நாள் சனிக்கிழமை திருப்பதியில் உள்ள "சேஷாசலம் ரிசர்வ் காடுகளில்" ஏப்ரல் 7ஆம் நாள் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழ்தொழிலாளர்கள் கிடந்த இடத்தை "பார்வையிட்டு" குறிப்புகளுடன் அன்று மதியம் திரும்பிய "உண்மையறியும் குழு"வினர் மாலை நாலு மணிக்கு "ஊடகவியலாளர் சந்திப்பு" இருக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் கூறியவுடனேயே, வன்முறையை செலுத்திய தரப்பினரான "காவல்துறை,மற்றும் வனத்துறை"அதிகாரிகளை சந்தித்து அவர்களது தரப்பு செய்திகளை எடுப்பது முக்கியமாயிற்றே? என்ற வினா அந்த குழுவின் "திட்டமிடல் கூட்டத்தில்"எழுந்தது. அதை ஒட்டி "ஒவ்வொரு மனித உரிமை அமைப்பிலிருந்தும்,அல்லது மாநிலங்களிலிருந்தும்" ஒரு பிரதிநிதி கொண்ட ஒரு குழு "அரசாங்க அதிகாரிகளை" சந்தித்து பேசிவிட்டு, கருத்து எடுத்துக் கொண்டு வருவது என்று முடிவு செய்தோம்.அதுநேரம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த "மக்கள் சிவில் உரிமைக்கழகம்", " மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்" தவிர, " சி.பி.சி.எல். என்ற சிவில் உரிமை பாதுகாப்பு குழு" தோழர்கள் வழக்கறிஞர் கேசவனும்,முருகனும் வந்துவிட்டார்கள்.

             எல்லோரும் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் "வைஷ்ணவ நிவாசம்" என்ற பக்தர்கள் பெரும் அளவில் வந்து தங்கும்,விடுதியில்,ஒரு "டார்மன்றி என்ற பலர் ஓய்வெடுக்கும் பொது அறை" யில் கூடினோம். அங்குதான் திட்டமிடலுக்காக விவாதித்தோம்.   குழுவை வழிநடத்திய வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா, தங்களது "ஆந்திரபிரதேச சிவில் லிபர்டி குழு"சார்பாக அதன் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், டில்லி பி.யு.டி.ஆர். சார்பாக அஜிதா, ஆந்திர மாநில எச்.ஆர்.எப். என்ற மனித உரிமை மன்றம் சார்பாக கிருஷ்ணா, தமிழ்நாடு பி.யு.சி.எல்.சார்பாக டி.எஸ்.எஸ்.மணி [நான்] மற்றும் மும்பை டாடா இன்ஸ்டிடுட் சட்டக் கல்லூரி மாணவிகள் இருவர், மற்றும் தெலுங்கானா,ஆந்திரா சிவில் லிபர்டி கம்மிடீ தோழர்கள் என சிலரை அரசாங்க அதிகாரிகளை சந்திக்க தனி வாகனத்தில் அனுப்பி வைத்தார்.நாங்கள் வனத்துறை அலுவலகம் தேடிச் சென்றோம்.அங்கே அந்த வளாகத்திற்குள்ளேயே "செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை" டி.ஐ.ஜி.அலுவலகமும் இருந்தது. அந்த டி.ஐ.ஜி. பெயர் காந்தா ராவ். அவர்தான் "20 தமிழ் தொழிலாளர்களை"சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி, ஊடகங்களுக்கு அறிக்கையும், நேர்காணலும் கொடுத்தவர்.

            அந்த டி.ஐ.ஜி.காந்தாராவை சந்திக்க அவரது அலுவலகம் சென்றோம்.அதன் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த "காக்கி உடுப்பு போடாத காவலர்கள்" டி.ஐ.ஜி. அங்கே இல்லை எனவும், நீங்கள் யார் என்றும் கேட்டு முறையாக உளவு கூற குறித்துக் கொண்டனர். அந்த வளாகத்திற்குள் இருந்த அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆராய்ந்ததில், அனைத்தும் "தமிழ்நாட்டு எண்களை " கொண்டவையாக இருந்தன. அதாவது "செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்ததில்,எஞ்சி நிற்பது தமிழ்நாட்டு வாகனங்கள மட்டுமே" என்று எண்ணத் தோன்றியது. .அதற்குள் எங்களுக்கு "வன இலாக்கா அதிகாரி"இருக்கும் அலுவலகத்தை டி.ஐ.ஜி.அலுவலக காவலர்கள் காட்டினார்கள்.அந்த அலுவலகம் " ஆராய்ச்சி நிலையம்" என்ற பெயருடன் நின்றது.அதற்குள் செல்வதற்கு முன்பே பலகையில் "வன இலாக்கா அதிகாரிகளின் பெயர்களை பொறித்திருந்தார்கள்.அதில் "ரவிக் குமார் ஐ.எப்.எஸ். என்றும் பொது தகவல் அதிகாரி- ஸ்ரீனிவாசலு எஸ்.எப்.எஸ். என்றும்" எழுதியிருந்தது. அதில் உள்ள ஸ்ரீனிவாசலு மட்டுமே எண்கள் குழு தலைவர் சந்திரசேகருக்கு  தொலைபேசியில் கிடைத்தார். அவரிடம் கேட்டுக் கொண்டு, இரண்டு நிமிடத்தில் வாருங்கள் என்றதால் அலுவலகம் உள்ளே சென்றோம்.

       அங்கே வன இலாக்கா அதிகாரி ஸ்ரீனிவாசலு வந்தார்.நாங்கள் அனைவரும் அமர " நீண்ட வடிவில் பெரிய மேசை" இருந்தது. இருக்கைகளும் இருந்தன.அனைவரும் அமர்ந்தோம். எடுத்த உடனேயே ஸ்ரீனிவாசலு  தெலுங்கிலேயே பேசினார்.நீங்கள் எல்லோருமே "வன இலாக்காவின் விதிகளை மீறி அனுமதி இன்றி காட்டிற்குள் சென்றுள்ளீர்கள் " என்று எங்கள் மீதே "பழியை" சுமத்தினார். "ரிசர்வ் காடுகளில் அனுமதி இன்றி சென்றால் பிணையுடன் கூடிய வழக்கு, சரணாலயத்தில் அனுமதி இன்றி நுழைந்தால் பிணை கொடுக்காத வழக்கு,தேசிய பூங்காவில் அதைவிட கடுமையான வழக்கு" என்று பட்டியல் போட்டு "மிரட்ட" பார்த்தார்."தமிழ்நாட்டிலிருந்து நேற்று வந்த சிவகாமி ஐ.எ.எஸ். அனுமதி கேட்டார்.கிடைக்கவில்லை. அதனால் அவர் வனத்திற்குள் செல்லவில்லை" என்று கூறினார். அவருக்கு தோழர்கள் சந்திரசேகரும், கிருஷ்ணாவும்" தெலுங்கிலேயே பதில் கூறிக் கொண்டிருந்தனர். டில்லி அஜிதாவும் தெலுங்கில் பதில் கூறினார். தெலுங்கு தெரியாத நாங்கள் முழித்துக் கொண்டிருந்தோம்.

             அடுத்து அவர் "நீங்கள் வந்த விவகாரத்திற்கு வாருங்கள்" என்றார்.அதாவது இதுவரை பேசியது "உங்களை சும்மா மிரட்ட" என்று அர்த்தமா? நம்மவர்கள் 20 தமிழ் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது பற்றி கேள்விகளை தொடுத்தனர். அவர் அது "அதிரடிப் படையின் பணி" என்றார். வன இலாக்காவிற்கு இணைந்து செயல்படும் தன்மை உண்டு அல்லவா?" என்றனர். அதை அவர் மறுக்க முடியவில்லை. உடனேயே தான் 2011 ஆகஸ்ட் மாதம்தான் இங்கு பணிக்கு வந்ததாக கூறினார். அடுத்து "2013 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் சிறீதரன் உட்பட இரண்டு வன அதிகாரிகள் கல்லால் அடித்து கொல்லப்பட்டபோது" மனித உரிமை ஆர்வலர்களான நீங்கள் ஏன் வரவில்லை? என்று வினா எழுப்பினார். அதற்கு சந்திரசேகரும், கிருஷ்ணாவும் நல்ல பதிலடி கொடுத்தனர்." 2013 டிசம்பரில் வன அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களிலேயே 430 பேரை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து சிறையில் இருந்த 340 பேரில் தமிழக தொழிலலார்கலான 310 பேர் இன்னமும் "பிணை கிடைக்காமல்" சிறையிலேயே உள்ளனர்.தெலுங்கு தொழிலாளர்கள் 30 பேருக்கு மட்டும் பிணை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த 20 தமிழ் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு யாராவது இதுவரை காது செய்யப்பட்டுல்லார்களா? இதுபோன்ற அந்நியாயம் நடப்பதால் இப்போது மனித உரிமை ஆர்வலர்கள் வரவேண்டிய தேவை உள்ளது".என்றனர். அதற்குள் ஒரு தொலைபேசி வர ஸ்ரீனிவாசலு அதில் எதிர்ப்புறம் உள்ளவரிடம் "சார்....சார்,....சார்," என்றே பேசினார். அதாவது எதிர்புறமிருந்து, யாரோ உயர் அதிகாரி சில கட்டளைகளை இடுகிறார்  என்று புரிய முடிந்தது. எல்லோரிடமும் தாள்களை கொடுத்து உங்கள் பெயர் மற்றும் முகவரிகளை கொடுங்கள் என்று அவர் கேட்டார். நாங்களும் எழுதிக் கொடுத்தோம்.அதில் 9 நகரங்களில் இருந்து வந்துள்ள ஆண்களும், பெண்களும் இருக்கிறோம் என்றும்,"இப்படி படித்தவர்கள் அனுமதி பெறாமல் வனத்திற்குள் செல்வது குற்றமில்லையா?" என்றும் அவர் பொடி வைத்து பேசினார்.

         இப்படி பதில்களை கூறி வரும்போதே சந்திரசேகரையும், கிருஷ்ணாவையும் "ஊடகவியலாளர் கூட்டத்திற்கு" உடனடியாக வரச் சொல்லி, தொலைபேசி அழைப்புகள் வந்தன.அவர்களும் தெலுங்கில் விளக்கம் கூறிக் கொண்டே எழுந்திருக்க, நாங்கள் எல்லோரும் கிளம்ப எழுந்தோம். அப்போது ஸ்ரீனிவாசலு "அமருங்கள். உங்களுக்கெல்லாம் தேநீர் வருகிறது" என்று கூறி எங்களது பயணத்திற்கு தடை போட்டார். நாங்கள் எல்லோரும்  புறப்பட்டு எங்கள் வாகனத்திற்கு வந்துவிட்டோம். வெளியே வரும்போது, நாங்கள் வரும்போது "ஒ" வென திறந்திருந்த வளாக நுழைவில் உள்ள  பெரிய இரும்பு கதவு, இப்போது "மூடப்பட்டு மூன்று காவலர்கள்" நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் வாகனம் வெளியே செல்ல "திறவுங்கள்" என்று நாங்கள் குரல் கொடுத்த பின்னால் "யோசித்துக் கொண்டே திறந்தார்கள்".நாங்களும் "ஊடகவியலாளர்கள் கூட்டம்" நடக்கும் ஊடகவியலாளர் சங்க அரங்கத்திற்கு வந்தடைந்தோம். வந்த உடனேயே ஊடகக்காரர்கள் எங்களிடம்"உங்கள் மீது அத்துமீறி நுழைந்த வழக்கு போட்டிருக்கிறார்களாமே ?" என வினவினர். அதாவது அத்தகைய செய்தியை அதற்குள் பரப்பி,"ஊடகவியலாளர் கூட்டத்தின் பொருளையே மாற்றிவிடலாம்" என அவர்கள் எண்ணியிருக்கலாம்.

              ஊடககாரர்களும் நாங்கள் கொடுத்த செய்திகளைத் தாண்டி சில கேள்விகளை கேட்டார்கள். அதில் 2013 ஆம் ஆண்டு வன அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதும் அடங்கும். அதற்கு வன அதிகாரியிடம் கூறிய பதிலையே கடும் கோபத்தில் சந்திரசேகர் கூறினார். .அதன்பிறகு "இது இரண்டு மாநிலத்திற்கும் உள்ள பிரச்சனையா? எதற்காக தமிழ்நாட்டில் ஆந்திர பவனையும், ஆந்திர பேருந்துகளையும் தாக்குகிறார்கள்?" என்று கோபமாக சிலர் கேட்டனர்.அவர்களுக்கு வேறு சக்திகளின் செல்வாக்கு கூட இருந்திருக்கலாம். ஆனாலும் பொறுமையாக நம்மவர்கள் பதில் கூறினர்." சந்திரசேகர், கிருஷ்ணா,டி.எஸ்.எஸ்.மணி,அஜிதா,ராஜு,முருகன்".ஆகியோர் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளாக அமர்ந்து அந்த கூட்டத்தை நடத்தினோம்.நாங்கள் விடுதிக்கு திரும்பி "டார்மன்ரியில்"அமரும்போது, விடுதியின் "கண்காணிப்பு துறை" மேலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், நாங்கள் உடனடியாக அறையை காலி செய்யவேண்டும் என்றும் கேட்டுள்ளனர் என கிராந்தி சைதன்யா கூறினார். அதுவே "அரசுத்துறை உண்மையறியும் குழு" மீது நெருக்கடியை கொடுக்கத் தொடங்கி விட்டது என்று புரிந்துகொள்ள எதுவாக இருந்தது  அன்று இரவே எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதை அறிந்தோம்.

     இத்தனையும் ஏன் நடந்தது? என்று உணரும்போது, "காட்டிற்குள் சனிக் கிழமை சென்று ஆய்வு செய்ததை, பலப்பல ஊடகங்கள் குறிப்பாக பல தெலுங்கு, தமிழ் தொலைக் காட்சிகள்" பிரபலப்படுத்தி விட்டனர். அதில் எங்களது நேர்காணல்களும் இருந்தன.20 அப்பாவி தொழிலாளர்களை கொன்றதில் கிளம்பிய அனுதாபம், உண்மையறியும் குழு மூலம், மனித உரிமை ஆர்வலர்கள், அதுவும் பிரபலமாக  அறிந்தவர்கள்  சென்று ஆய்வு செய்து, சம்பவ இடத்தில நின்று கொண்டே பேசி, அம்பலப்படுதுகிரார்களே? என்ற ஆதங்கமும், ஹைதராபாத் உயர்நீதிமன்ற வழக்கில்,காவல்துறைக்கு நீதியரசர் கொடுத்த உத்தரவும், அவர்களை எரிச்சலடைய செய்திருக்கும்.  அதன்விளைவே இந்த "அறையை காலி செய்ய சொல்வதும், வழக்கு போடுவதும்" என்பதை அறிய முடிந்தது.

           அதுமட்டுமின்றி, மீண்டும் மாலை 4 மணிக்கு ஊடகவியலாளர் கூட்டத்திற்கு, 30 க்கு மேற்பட்ட காட்சி ஊடகங்களும், பல அச்சு ஊடகங்களும் திரண்டு வந்து நிற்பதை கேள்விப்பட்ட டி.ஐ.ஜி. யின் உத்தரவே  எங்களுடன் பேசிக் கொண்டிருந்த வன அதிகாரி ஸ்ரீனிவாசலுவிற்கு தொலைபேசி மூலம் வந்தது என்பதையும், அதை ஒட்டியே எங்களை ஊடகவியலாளர் கூட்டத்திற்கு செல்லவிடாமல் தடுக்க "தேநீர் கொடுத்தல், வெளிக் கதவை மூடுதல்" ஆகிய தந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பதையும் நாங்கள் உணர முடிந்தது. அதை நிருபிக்கும் வகையில் மறுநாள் எங்கள் 12 பேர் மீது மட்டும், அதாவது வன அதிகாரியை சந்தித்து பெயர் கொடுதோர் மீது மட்டமே போடப்பட்ட வழக்கு பற்றி ஊடகங்களுக்கு செய்தி கொடுத்த அதிகாரிகள்,ஸ்ரீனிவாசலு,ரவிகுமார்,ஆகியோர் டி.ஐ.ஜி.காந்தாராவ் பெயரை கூறியிருந்தார்கள்.

      வழக்குகள் நமது "திருப்பதி பயணத்தை அரசு ஆவணமாக்க  உதவும்" என்ற புரிதலை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். வாகன ஓட்டுனர் கூட தங்களது வாகனம் மாறி,மாறி,படம் எடுக்கப்பட்டது பற்றி சிறிது கலக்கமடைந்தார். ஆனாலும் மறுநாள் காலை ஞாயிறு அன்று 18 இறந்தோரின் உறவினர்களை அழைத்து வந்த பா.ம.கவினருக்கும், அங்கே காவல்நிலையம் முன்பு கூடி இருந்த ஊடகவியலாளர்களுக்கும் இணைப்பை ஏற்படுத்துவதிலும், அவர்களுக்கு உதவுவதிலும், ஆந்திர சிவில் லிபர்டி குழ தலைவர்களையும், பா.ம.க.தோழர்களையும் அறிமுகம் செய்விப்பதிலும் எங்களது பணியை செவ்வனே முடித்து விட்டு திரும்பினோம்.

No comments:

Post a Comment