Monday, November 16, 2015

ஒதுக்கப்பட்ட தொகையிலேயே "ஆட்டையப்போடும்" அதிகாரிகள்?

ஒதுக்கப்பட்ட தொகையிலேயே "ஆட்டையப்போடும்" அதிகாரிகள்?
--------------------------------------------------------------------------------------------------
    ஊழல் என்பது ஊறிப்போயிருக்கும் நமது இன்றைய உலகில், "ஊழல் முகமே தேசத்தின் முகம்" என்று பெயர் பெற்ற நமது நாட்டில், வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டுகின்ற அரசியல்வாதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், இப்போது நமக்கு "புதிய கணக்கு" கிடைத்துள்ளது. அதாவது அரசுத் துறைகளுக்குள்ளேயே இப்படி நடக்குமா? ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட "தொகையை" அடுத்த துறை " ஆட்டையப் போட" முடியுமா? அதுவும் முடியும், அதைத் தாண்டியும் முடியும் என்று நமது அதிகாரிகள் நிரூபிக்கிறார்கள்.அது எப்படி என்றா கேட்கிறீர்கள்?

      இருபது ஆண்டுகளுக்கு முன்பு, "எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்ற தமிழ்நாடு அரசின் "திரைப்பட நகரம்" தரமணியில், சென்னையில், தொடங்கப்பட்டு முதலில் சிறப்பாக செயல்பட்டது. அதன் பின் அதன் நிலங்களில் ஒரு பெரும் பகுதியை, அடுத்து, அடுத்து, "தனியார்  நிறுவனங்களுக்கு"  விற்று விட்டார்கள். இதைக் கேட்பார் கிடையாது என்ற நிலையில், "சென்னை நகருக்குள், "திரைப்பட படப்பிடிப்புக்கு" ஏற்ற இடங்களே இல்லை என்ற நிலை. இந்த அரசு திரைப்பட நகரிலாவது அவ்வாறு வாய்ப்பு இருக்கிறதா? என்றால் கேள்விக்குறியே. திரைப்பட தயாரிப்பார்களின், இயக்குனர்களின், கலைஞர்களின், தொழிலாளர்களின், இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் பாணியில், முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, இந்த திரைப்பட நகருக்காக, அதன் வளர்ச்சிக்காக, புதிய படப்பிடிப்புகளை நடத்த ஏதுவாக, " ஒரு தியேட்டர்", "ஒரு எலக்ட்ரானிக் கருவிகள் கொண்ட அரங்கம்" என்பதாக பல புதிய ஏற்பாடுகளை, "திரைப்பட நகர நிர்வாகம்" கொடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிட்டத்தட்ட, ரூ.100 கோடியை ஒதுக்கினார்.அந்த அறிவிப்பை, "திரைப்படத் துறையே" வரவேற்றது,பாராட்டியது.  அந்த தொகையை, "செய்தி,விளம்பரத் துறை" ஒதுக்கி கொடுத்து விட்டது.

    அந்த தொகைக்கு "எலக்ட்ரானிக் கருவிகளும், மற்ற சாதனங்களும்"  வாங்கப்பட்டன. "தியேட்டரும் " கட்டப்பட்டது. அதற்கான "கட்டிடங்களும், சுவர்களும், பாதைகளும்" கட்ட, அதற்கான "பணிகள்" "பொதுப்பணித் துறை" வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட பணிகளை செய்ய "பொதுப்பணித் துறைக்கு" கை வலித்துவிட்டது. அதனால் அவர்கள் "திரைப்பட நகரின்" நிர்வாகத்திடம், "ஒதுக்கப்பட்ட அத்தகைய பங்களுக்கான பணத்தில், 40 விழுக்காட்டை"  தங்கள் துறைக்கு, "தனியாக " ஒதுக்கினால்தான், வேலைகளை செய்யமுடியும் என்று நிபந்தனை விதிக்க, "திரைப்பட நகர நிர்வாகம்" திணறி விட்டது.அப்படி,"லஞ்சம்" கொடுத்தால், செல்வி.ஜெயலலிதாவின் "கனவான" வளர்ச்சி பெற்ற "திரைப்பட நகரம்" எழ முடியாதே என்ற கவலை அவர்களுக்கு. ஆனால் "பொதுப்பணித் துறை" தனது கோரிக்கையில் "கறாராக" இருந்தார்கள். தங்களுக்கான் லஞ்சத் தொகையை "கணிசமாக" கொடுக்காவிட்டால், "திரைப்பட நகரில் மண் சரியில்லை, இடம் சரியில்லை" என்று ஏதாவது "காரணம்" கண்டுபிடித்து அதைக் கூறி, திரைப்பட நகருக்கு ஒதுக்கப்பட்ட நிதியையே "திரும்ப எடுத்துக் கொள்ள செய்துவிடுவோம்" என்ற மிரட்டல் அளவுக்கு சென்ற பின், வேறு வழி இல்லாமல், அவர்களுக்கு "25%" ஒதுக்கப்பட்டது. அதை மாத்திரம் பெற்றுக் கொண்டு விட்டுவிடுவார்களா நமது அதிகாரிகள்? இதே கணக்கை "ஒப்பந்தக்காரர்களிடமும்" வைத்து வெற்றி கண்டுள்ளார்கள்.

          அதன் விளைவு, ஒப்பந்தக்காரர்கள், "ஒப்பேததக்காரர்களாக" மாறி விட்டார்கள். அவர்கள் கட்டிய "சுவர்களும், கட்டிடங்களும், கான்கிரீட்களும்"தான் அந்த கதையை கூறவேண்டும். தேவையான சிமண்டை பயன்படுத்தாமலும் , கற்களை பயன்படுத்தாமலும், கட்டப்பட்ட கட்டிடங்களும், சுவர்களும், இப்போது பெய்துவரும், "கன மழையால்" உடனடியாக "பல்லைக் காட்டத்" தொடக்கி விட்டன.இப்போது பல லட்சம் ரூபாய்க்கு வாங்கிய "எலக்ட்ரானிக் பொருள்களை " வைத்துள்ள "கட்டிட ம்" கீறல் விழுந்து, "கசியத்" தொடக்கி விட்டது. ஏனய்யா, அதிகாரிகளே, சம்பந்தப்பட்ட அமைச்சர்களே, நீங்கள்,"ஒப்பந்தக்காரர்களிடம்"  லஞ்சம் பெறுவீர்கள் என்பது நாடறிந்த செய்தி. அது எப்படி அய்யா, ஒரு அரசுத் துறையே, அடுத்த அரசுத் துறையிடம் "லஞ்சம்" கேட்டு, மிரட்டி, வாங்கி, கொடுமை செய்கிறீர்கள்?  அப்படியானால் முதல்வரின் "கனவுத் திட்டம் " என்னாகும்? நாசமாகக்ப்போகட்டும், எங்களுக்கு "பை நிறிய வேண்டும்" என்கிறீர்களா?  ஓகோ, உங்கள் வீட்டுக்கு, நிலங்களும், கட்டிடங்களும், நல;ல முறையில் கட்டிக் கொள்ள "நிதி" தேவையோ? இப்போ புரியுது.

No comments:

Post a Comment