Monday, November 16, 2015

உலக சகிப்புத்தன்மை நாள்--ஐ.நா.அறிவித்துள்ளது சரிதானா?.

உலக சகிப்புத்தன்மை நாள்--ஐ.நா.அறிவித்துள்ளது சரிதானா?.
--------------------------------------------------------------------------------------------------
        ஐ.நா.சபை, நவம்பர் 16 ஆம் நாளை, "உலக சகிப்புத்தன்மை நாள்" என அறிவித்துள்ளது. "சகிப்புத்தன்மையின்மை " இப்போது நமது நாட்டில் அதிகரித்து விட்டது என்றும், அதனால்தான் "தாத்திரி என்ற இடத்தில உத்திரப்பிரதேசத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வந்த செய்தியை ஒட்டி, ஒரு முசுலிம் பெரியவர்  அடித்து கொல்லப்பட்டார்" என்பதும், கர்நாடகாவில், முற்போக்கு எழுத்தாளர் குல்பர்கி கொலை செய்யப்பட்டார் என்றும், மகாராஷ்ட்ராவில் நடந்த பகுத்தறிவாளர் கொலையும் அதேபோல்தான் என்றும், இவையெல்லாமே "சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் தான்" என்றும், இத்தகைய "சகிப்புதன்மையின்மைக்கு"  சங்க பரிவாரமும், பா.ஜ.க. அரசுமே காரணம் என்றும் கூறி, பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் நாடு முழுக்க தாங்கள் அரசிடம் பெற்ற " பல்வேறு விருதுகளை" திரும்பக் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், உலக சகிப்புத்தன்மை நாள் என்று வருவது "சாலப்பொருத்தமே"  என்றாலும், அது என்ன என்று அலச வேண்டும்.

        அதாவது உங்களுக்கு ஒருவரை அல்லது ஒரு பொருளை அல்லது ஒரு செயலை  "பிடிக்கவில்லை" என்றால், அந்த மனிதரை அல்லது அந்த பொருளை அல்லது அந்த செயலை எதிர்த்து நீங்கள் "வெறுப்பு அரசியலை" கட்டவிழ்த்துவிடுவது என்பதுதான் இங்கே "சகிப்புத்தன்மையின்மை" என்று கூறப்படுகிறது. உங்களுக்கு ஒன்றை பிடிக்காவிட்டால் அது இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாதா? இது என்ன அய்யா "அநியாயம்?" பல்முனை பண்பாடுகளையும், பல்முனை குணங்களையும், பல்வேறு வகை உணவுகளையும், பல்வேறு வகை பழக்க,வழக்கங்களையும், பலவேறு மொழிகளையும், பல்வேறு வரலாறுகளையும், பல்வேறு பிரிவுகளையும், இன்னமும் சொல்லப்போனால், பல்வேறு சாதிகளையும், பல்வேறு மதங்களையும், பல்வேறு நம்பிக்கைகளையும், பல்வேறு பாலினங்களையும், பல்வேறு தலைமுறைகளையும் கொண்ட ஒரு "சூழலில் தானே" நாமெல்லாம் வாழ்ந்து வ்ருகிறோம்?. இந்த உலகம் உழன்று வருகிறது? அப்புறம் என்ன வெங்காயம்? நான் நினைப்பது மட்டுமே, நான் விரும்புவது மாத்திரமே, எனக்கு பிடித்தது மட்டுமே, இருக்க வேண்டும் என்று எப்படி நினைக்க முடியும்?

      இதுதான் அடிப்படையிலேயே இங்கு "கேள்வி கேட்கப்படுகிறது".  சகிப்புத்தன்மை வேண்டும் என்ற குரல் எழுகிறது  சகிப்புத்தன்மை என்று இதை கூறலாமா? சமூக அவலங்களைக் கண்டு,அநீதிகளை கேள்விப்பட்டு, அக்கிரமங்களை பார்த்து, அநியாயங்களை தட்டிக் கேட்காமல், "சகிப்புத்தன்மையுடன்" இருங்கள் என்று நாம் சொல்ல வருகிறோமா?  நிச்சயமாக இல்லை. அப்[படியானால், "சகிப்புத்தன்மை" என்பது,"தவறுதான்" என்றாலும், "வெறுப்பு வருகிறது" என்றாலும், "பிடிக்கவில்லை" என்றாலும் நீ அதை "சகித்துக் கொள்" என்று கூறுவதாகும். ஆனால் "ரவுத்திரம் பழகு" என்று பாரதியார் கற்றுக் கொடுத்ததை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தவறுகளைக் கண்டு சகித்துக் கொண்டு இருக்காதே எனபதுதான் நமது உண்மையான் நியாயமாகும்.

       இங்கே கூறவருவது யாதெனில், "மாறுபட்ட, வேறுபட்ட, உனக்கு பழக்கமில்லாத, உனக்கு ஒத்துவராத, நீ விரும்பாத" எதையும் உலகில் யாருமே கைக்கொள்ளக் கூடாது எனபது தவறு என்பதுதான்.அதாவது உன்னிடமிருந்து "வேறுபட்ட" எதுவும், இந்த உலகில் இருக்குமானால் அதை "அங்கீகரித்துக் கொள்ள" கற்றுக் கொள் என்பதுதான். அதாவது, உன்னிடமிருந்து வேறுபட்ட, "நம்பிக்கை, உணவு பழக்கம், பண்பாடு, மொழி, இனம்,பாலினம், தலைமுறை, சாதி, மதம்" எதுவாக இருந்தாலும்,  அதுவும் இந்த உலகில் "இருக்க, வாழ, உயிர்பிழைக்க, நடமாட, செயல்பட, வளர, செழிக்க," உரிமை கொண்டது என்பதே. உண்மை. அதுவே, "ஜனநாயகம்". அதவே, "சமத்துவம்".அதுவே "உரிமை". அதுவே "உலகம்".அதுவே "மனித உரிமை". அத்தகைய உலகத்தை நீ ஏற்காவிட்டால், நீ இந்த பூவுலகில் வாழ "தகுதியற்றவன்".நீ தகுதியற்றவனாக் இருந்துகொண்டு, அடுத்தவனைப் பார்த்து, அவனது "தகுதி" பற்றி பேச உரிமையில்லை".  இப்படி கூறவேண்டுமானால், நாம் "சகிப்புத்தன்மை" என்ற சொல்லை நீக்கிவிட்டு, "வெறுப்பு அரசியலை" எதிர்ப்போம் என்று கூறலாம்.

      இந்த விளக்கம், கடந்த சனிக்கிழமை, கோவையில் நடந்த "பி.யு.சி.எல்." என்ற " மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்" மாநிலக் குழு கூட்டத்தில் வந்தது. காஞ்சி மாவட்ட பி.யு.சி.எல். தலைவர் தோழர் தமிழினியன் இது பற்றிய சர்ச்சையை கிளப்பியதால் இப்படிப்பட்ட விளக்கத்தை விவாதத்தில் பெற முடிந்தது.   . 

No comments:

Post a Comment