Thursday, September 10, 2015

"ஜெ", நிர்மலா சிதாரமானுக்கு பதில்

உலகமுதலீட்டாளர் சந்திப்பில்,"ஜெ",  நிர்மலா சிதாரமானுக்கு பதில் சொன்னாரா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
   முதல் நாள் சந்திப்பில், முதல்வர் ஜெயலலிதா தனது தொடக்க உரையில்,நடுவண் அமைச்சர்  நிர்மலா கூறிய செய்தியான " மகாராஷ்டிரா, டில்லிக்கு பிறகு மூன்றாவதாக அந்நிய நேரடி மூலதனம் பெற்றதில், தமிழ்நாடு இருக்கிறது" என்ற பேச்சிற்கு, பதிலுரையாக," உண்மையில் அந்நிய மூலதனம் தமிழ்நாட்டிற்கு இதைவிட அதிகம் வருகிறது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றின் தலைமையகங்கள்,இருக்கும் மாநிலங்களை,தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்நிய மூலதனத்துடன் ஒப்பிடுகிறார்கள்." என்று தனது உரையின் இரண்டாவது பாராவிலேயே கூறியுள்ளார்கள். அதாவது  நாம் குறிப்பிட்டு காட்டுவது போல,"வைப்ரன்ட் குஜராத்தை" தமிழ்நாட்டின் மூலதன இறக்குமதியுடன் ஒப்பிடாமல், இந்தியாவிலேயே "யார் அதிக வெளிநாட்டு மூலதனத்தை" ஈர்ததுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

     அதாவது மூன்றாவது இடத்தில தமிழ்நாடு என்ற மதிப்பீடே தவறு என்பதையும், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையும், டில்லியின் தலைநகர் டில்லியும், வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை கொண்டுள்ளது என்பதே அவர்களின் இடங்களில், பல்வேறு வகைகளில் வெளிநாட்டு மூலதனங்கள் வருவது அதிசயமல்ல. ஆனால் தமிழ்நாடு அதையே "தன்னிச்சையாக " சாதித்துள்ளது என்பதை முன்வைக்கிறார். அதன்மூலம் "இந்தியாவை  வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல" யாரால் முடியும் என்பதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய சூழலில் கூறிய, "குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டின் லேடியா?' என்ற சொல்லாடலை கூறாமல் கூறுகிறார்.,

               அதன்மூலம் நமக்கு புரியவேண்டிய செய்தியே, " அ.இ.அ.தி.மு.க விற்கும் பா.ஜ.க.விற்கும், இடையே வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், நேரடி போட்டி இருக்கும் என்பதுதான்..இதில் பா.ஜ.க.விற்கு வேண்டுமானால் "தான் தி.மு.க.வை விட " அதிகமான இடங்களை வெல்லவேண்டும் என்றும், வெல்ல முடியும் எனவும் எண்ணம் இருக்கலாம். அதாவது "தான்தான் அ.இ.அ.தி.மு.க.விற்கு போட்டியாளராக இருக்கவேண்டும்" என்று பா.ஜ.க. எண்ணுகிறது. அதற்கான பெரிய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்கள் அதிகம் சார்ந்து இருப்பது, "சங்க பரிவாரத்தின்" ஊரகப் பணிகளைத்தான். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சாதிகளை ஒவ்வொன்றாக  தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளை" பா.ஜ.க.கணக்கு போட்டு செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அ.இ.அ.தி.மு.க.வோ, தனக்கு எதிரியாக தி.மு.க.தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.

     ஆகையால் நடுவண் அரசுக்கும், மாநில ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவை, "ஒற்றையாட்சிக்கும், கூட்டமைப்புக்கும்" இடையே உள்ள முரண்பாடான உறவுதான் என்பதை பலரும் புரிந்துகொள்ளவில்லை. தவிரவும், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடுவண் அரசுக்கு எதிராக,"கூட்டமைப்பு அரசியலை" இன்றைய அ.இ.அ.தி.மு.க. தலைமையான செல்வி.ஜெயலலிதா எடுத்துக் கூறிய அளவுக்கு யாரும் செய்யவில்லை.2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே, "கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு" என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி, உச்சரித்து வருவது, செல்வி.ஜெயலலிதா மட்டும்தான் என்பதையும் காணத் தவறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான், ஒவ்வொரு நடுவண் அரசின் செயல்களுக்கும், பதில் கொடுத்து,மாநில உரிமைகளை முன் நிறுத்தி வருகிறார்.

        ஆகவே அ.இ.அ.தி.மு.கவுடன், பா.ஜ.க.வை முடிச்சு போட்டு பேசி வருவது, "தற்காலிகமாக முஸ்லிம், கிருத்துவ வாக்குகளை"  அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக மாற்றவும், தி.மு.க.விற்கு சாதகமாக திருப்பவும்  உதவலாமே தவிர , தேர்தல் நேரத்தில் அதுவும் தோற்றுப்போகும். அத்தகைய "பரப்புதல்" அறிவாலயத்திற்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். உண்மையில் அதற்கான நியாயங்களே இல்லை.

Tuesday, September 8, 2015

உலக முதலீட்டாளர் சந்திப்பு- எதிர்க்கட்சிகளுக்கு விளங்கவில்லையா?


       திமுக வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்த உலக முதலீட்டாளர் சந்திப்பு பற்றி ஒரு குண்டை எடுத்து போட்டுள்ளார். அதிமுக ஆட்சியாளர்கள் "சிறிய தொழிலதிபர்களை மிரட்டி, 100 கோடி முதலீடு செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். எனக்கு தகவல் உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பது அடுத்த விஷயம். ஆனால் இதில் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது "உலக அளவிலான பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு மூலதனமிட வருகிறார்கள்"என்றும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் "அந்நிய மூலதனம்" வந்திறங்கினால் ஏன்னாகும்? என்றும் சில சர்ச்சைகள் உள்ளன. வருகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்பது " ஊடகச் செய்தியாக " ஆகிவிட்டது.  அதுவும் எந்த எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதும் செய்தியாகி விட்டது. அதனால் அதை " விவாதிப்பது" நமது நோக்கமல்ல. 


        ஆனால், வருகின்ற மூலதனம், இங்கும் "கார்போறேட்களின்" செல்வாக்கை கூட்ட வருகிறதா? இங்குள்ள "உள்கட்டுமானங்களையும் பயன்படுத்தி,தேங்கி கிடக்கும் தொழில்களை எழுப்பி நிறுத்த வருகிறதா?" அதற்கான "பதில்" தளபதி ஸ்டாலினுக்கு  தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் யாரும் பேசாத " சிறிய தொழிலதிபர்களை" பற்றி பேசியிருக்கிறார். அந்த சிறிய தொழிலதிபர்களின் "நிலை" என்ன? தமிழ்நாட்டிலுள்ள "சிறு,குறு, தொழிலதிபர்கள்" தங்களது தொழில்கள் சமீபகாலமாக "தேங்கி" இருப்பதாக உணர்கிறார்கள் அல்லவா? அவர்களையும் இந்த "உலக முதலீட்டாள்ர்கள் சந்திப்பில்" இறக்கி விடுகிறது தமிழக அரசு என்ற ஒரு செய்தியை தளபதி ஸ்டாலின் கூறுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அது மிகவும் நல்ல செய்திதானே? என்று அதுபற்றி ஆய்வு செய்தோம். ஸ்டாலின் ஏன் திடீரென அந்த "சிறிய தொழிலதிபர்கள்" பற்றி பேசுகிறார்? அவர் திடீரென பேசவில்லை. கடந்த மே மாதம் தளபதி ஸ்டாலின் கோவை சென்று, அத்தகைய "சிறு,குறு தொழிலதிபர்களின் சந்திப்பு" ஒன்றை கூட்டினார். அதில் அரசியல் எதுவும் பேசாமல், அவர்களது "கடினங்களையும், பிரச்சனைகளையும்" பற்றி கேட்டறிந்தார். அவர் ஏற்கனவே " ஊரக வளர்ச்சிக்கான உள்ளாட்சித் துறையில்" அமைச்சராக இருந்தவர். அந்த தொடர்புகள் மூலம் அவருக்கு சில செய்திகள் கிடைத்துள்ளன. அவை என்ன என்ற ஆர்வத்தில் நாமும் விசாரித்தோம்.

       "எம்.எஸ்.எம்.ஈ".என்ற " மத்தியதர,சிறிய, மிகச்சிறிய,தொழில் முனைவோர்"[ Medium,Small,Micro Enterpneors} இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறார்கள் என்ற உண்மை இப்போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்துள்ளது. சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகள் கழித்து, அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் முதல் முறையாக "சிறிய தொழில்களுக்கான ஒரு தனி அமைச்சரவை"எஸ்.எஸ்.ஐ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு அப்போது, வசுந்தரராவ் சிந்தியா அமைச்சராக இருந்தார். அதுபோல மாநிலங்களின் அரசுகளும் "பெரிய தொழில்களுக்கு ஒரு அமைச்சகம், சிறிய தொழில்களுக்கு ஒரு தனி அமைச்சகம்" என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய தொழிலகங்களை நடத்துவோர்கள் "இரண்டு ரகங்களாக" பிரிகின்றனர். ஒரு வகையினர்  "பெரிய தொழிலகங்களுக்கு தேவையான சிறிய உறுப்புகளை உற்பத்தி செய்து கொடுப்பது" என்ற "சார்பு தன்மை" கொண்டவர்கள். இன்னொரு வகையினர், "தாங்களாகவே, ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்வதும், அதை சந்தையாக்கும்போது, பெருமுதலாளிகளின் சரக்குகளை சந்தைப் போட்டியில் சந்திப்பதும்" என்ற நடைமுறையை கொண்டவர்கள். இவர்கள் அதாவது இந்த இரண்டாவது வகையினர் இன்று "பெரு முதலாளிகளையே சந்தையில் சவாலுக்கு இழுக்கும் நிலையில்" உள்ளனர். இப்படிப்பட்ட சிறு,குறு முதலாளிகள் இப்போது என்ன நிலையில் உள்ளனர்? 

       ஊரக மற்றும் சிறு தொழில்கள் என்ற ஒரு அமைச்சகம் தமிழ்நாட்டிலும் உள்ளது.இப்போது மோகன் அதன் அமைச்சர். முன்பு பொங்கலூர் பழனிசாமி அதன் அமைச்சர்.எஸ்.எஸ்.ஐ. என்ற அந்த நாடு தழுவிய  நிலையில் அழைக்கப்படும் இத்தகைய தொழிற்சாலைகள், குறிப்பாக, ராஜ்காட், லூதியானா, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாக் இருக்கின்றன. இன்னமும் கூறப்போனால், பல லட்சம் சிறு தொழிலகங்கள் இந்த இடங்களில் இருககின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் இத்தகைய சிறிய ஆலைகள்,தற்காலிகமாக "மூலதனக் குறைவினாலும், ஊக்குவிக்க வாய்ப்புகள் இல்லாமையாலும்" உணர்வு இழந்து வருகின்றனர். அவர்களின் " மன ஊக்கம் தளர்ந்துள்ளது" இந்த நிலையை கவனித்த தமிழ்நாடு அரசும், இத்தகைய சிறிய தொழிலகங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் "முதுகெலும்புகள்" என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிக்க இந்த சந்திப்பில் ஒரு ஏற்பாடு செய்துள்ளனர். 

     அது என்ன? தமிழ்நாட்டில் சிறிய தொழில்களை ஊக்குவிக்க ஏற்கனவே, இயங்கும் "டி.ஐ.சி." என்ற "மாவட்ட தொழிலக மையம்" மூலம் சில பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக,7 பிராந்தியங்களாக தமிழ்நாட்டை பிரித்து, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சேலம், சென்னை, கோவை,திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள "டி.ஐ.சி." மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமும், " மத்தியதர,சிறு,மிகச்சிறு,தொழில் முனைவோர்" அனைவரையும் கூட்டி, அவர்களது, " ஆலோசனைகளை, குறிப்பாக அவர்களது சொந்த முன்வைப்புகளை" கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அத்தகைய சிறு தொழில் முனைவோரது,"தேக்கங்களை" உடைக்க உதவுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் தமிழக அரசின் பங்கு என்பது வெறும்," சந்திப்புகளையும்,ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ள, அந்த மூலதன்மிடுவோரையும், அனுபவத்தையும், திறமையையும், கொண்டுள்ள சிறு தொழில் முனைவோரையும் சேர்த்து வைப்பது மட்டுமே". தங்கள் கைகளில் மூலதனம் இல்லாத நிலையில், இந்த சிறு தொழில் அதிபர்கள், வெளியிலிருந்து வரும் பெரும் மூலதனமிடுவோருடன் இணைந்து அத்தகைய ஆலைகளை உருவாக்க " வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற முதலீட்டாளர்கள், உள்நாட்டு பங்காளிகளை இணைத்துக் கொள்ளாமல், அத்தகைய ஆலைகளை உருவாக்க முடியாது என்பதால் அத்தகைய ஏற்பாட்டை தமிழ்நாடு ஆரசு செய்துள்ளது. உதாரணமாக , கோவையில் கூடிய  அத்தகைய கலந்தாலோசனை கூட்டத்தில், ரூ.3000 கோடிக்கு "முன்வைப்புகளை" சிறு தொழிலதிபர்கள்,கொடுத்தள்ளனர். அவற்றுக்கு உடனடியாக " புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்" போடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகளைத்தான் தளபதி ஸ்டாலின் "வற்புறுத்தி சிறு தொழிலதிபர்களிடம் ரூ 100 கோடியை போட வைத்துள்ளனர்" என்பதாக ஒரு "தவறான செய்தியை" தெரிவித்துள்ளார். 

        பெரும் தொழிலதிபர்களின் பெரும் மூலதனங்களையும், அதேசமயம் குறைந்த மூலதனமிட வரும் வெளிநாட்டு மூலதனத்துடன், மூலதனம் இல்லாத அல்லது மூலதனத்தை போட விரும்பாத சிறு தொழிலதிபர்களுடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துகொள்ள தமிழக அரசு இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது, மாவட்டங்களிலிருந்து வருகின்ற இனிய செய்தியாக இருக்கின்றது.

Tuesday, August 18, 2015

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?

எது எப்படியோ.புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?
---------------------------------------------------------------------------------------
      புலம் பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் சிறந்த "விமர்சகர்கள்" என்று எண்ணிக்கொண்டு,ஈழத்திற்குள் நுழையாமல், ஈழத்தில் உள்ள மக்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல், அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அறியாமல், "இணையம் மூலம்" அரசியல் "அறிவு" பெரும் பெரிய "ஆப்பாட்டக்காரர்களாக" இருப்பதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு "விமர்சனம்" இருக்கிறது என்பதை மட்டுமே தெரிந்துகொண்டு, இலங்கையில் வாழும் மக்கள் தங்களது "வாழ்க்கைக்கு தகுந்தாற்போல" எதை தேர்வு செய்வார்கள் என்றும் அறியாமல், அங்குள்ள அரசியலைப் புரியும் "திறன்" இல்லாமல், "மேட்டுக் குடி வாழ்நிலையில்" வெளிநாடுகளில் இருந்துகொண்டு, "கடும் விமர்சனங்களை" தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது எடுத்து "எறிந்தார்கள்">

       அவர்களது "இணையம்" மூலமான கருத்துகளை தமிழ் மக்கள் "கண்டு கொள்ளவில்லை". த.தே.கூ.பை "செமையாக" திட்டித் தீர்த்த "கஜேந்திரகுமார்" குழுவை, புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்பவர்களும், இந்தியாவில் வாழ்பவர்களும், எத்தனை "கானோளிகளில்" பாடல்களையும், இசையையும், இணைத்து "பாடுபட்டு" உழைத்தார்கள். ஆனால் ஈழ மக்கள் அவர்களது அனைத்து முய்ரசிகளையும், கண்டுகொள்ளவில்லை. கஜேந்திரகுமார் குழுவை, ஒரு "கட்சியாக" அங்கீகரிக்கவில்லை. இப்போதாவது "அறிவுஜீவிகள்" திருத்திக் கொள்வார்களா? யதார்த்தத்தை புரிந்துகொண்டு "தமிழ் மக்களுக்கு" பாடுபடுங்கள். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களது நிலைமையையும், "இணையம் புகழ்" ஆப்பாட்டக்காரர் களிடமிருந்து கற்றுக் கொள்ளாதீர்கள்.  

இலங்கை தேர்தல்முடிவுகளும்,அதற்கு பின்னாலிருக்கும் தந்திரங்களும்

இலங்கை தேர்தல்முடிவுகளும்,அதற்கு பின்னாலிருக்கும் தந்திரங்களும்
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் தென்னிலங்கையில் உள்ள சிங்களப் பகுதியின் வாக்குகளில், "ஐக்கிய தேசியக் கட்சி" இன் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு  ஆதரவாக  அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றபோதும், "ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி" இன் பெருவாரியான எம்.பி.க்கள் ராஜபக்சே ஆதரவாளர்கள் என்பது உண்மைதான். ஆகவே ரணில் தனக்கு அதிகமான் எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக, தவிர்க்கமுடியாமல், வடக்கு,கிழக்கு மாகாணங்களின்,எம்.பி.க்களான "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" ஆதரவை பெறுவார் என்றும், தமிழ் எம்.பி.க்களை சார்ந்து நிற்பார் எனவும், அதனால் தமிழ் எம்.பி.க்கள் "பேரம்" பேசலாம் என்றும்,அதன்மூலம், "சமஷ்டி அரசு","சர்வ தேச விசாரணை" ஆகியவற்றை "வற்புறுத்த" முடியும் என்றும், "வற்புறுத்த வேண்டும்" எனவும் பலரும் கருதது தெரிவித்து வருகிறார்கள். ஆனால் "சிங்களத்தின் தந்திரம்" என்பது "சீரிய சிந்தனையுடன்" செயல்படுகிறது.அதாவது ராஜபக்சே ஆதரவுடன் வெற்றிபெற்ற "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி" இன் எம்.பி.க்கள் ஒவ்வொருவராக, ரணில் தலைமையிலான "ஐக்கிய தேசியக் கட்சி" க்கு "தாவ" தயாராகி வருகிறார்கள். அதற்கு அந்த " ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி" இன் தலைவரும், "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி"இன் அமைப்பாளருமான இன்றைய "அதிபர் மைத்திரிபால சிரிசேனா"வும், சந்திரிகா குமாரதுங்கா"வும் ஏற்பாடுகள் செய்வார்கள் என்பது நாடறிந்த செய்தி. இததகைய முயற்சி, "ராஜபக்சே"விற்கு எதிரான செயல் என்று "பலரும்" ஏமாறலாம். ஆனால்,உண்மை அப்படி இல்லை.

 ராஜபக்சே அணியினர் "சர்வதேச விசாரணையை" எதிரகொள்ளும் நேரத்தில், "அவர்களை" காப்பாற்ற "சிங்களம்" அதாவது, மைதிரிபாலா சிரிசேனா, ரணில், ராஜபக்சே ஆகியோர் ஒரே கருத்தின் அடிப்படையில், அதாவது," சர்வதேச விசாரணையிலிருந்து" அனைத்து சிங்கள தலைவர்களையும்" காப்பாற்றும் முயற்சியில், "ரணிலுக்கு ஆதரவாக அனைத்து சிங்கள எம்.பி.க்களையும்" சேர்த்து, அதன்மூலம், "தமிழ் தேசிய கூட்டமைபினர்" ஆதரவின்றியே, அதாவது "பேரம் பேசக் கூட" தமிழர்களுக்கு, "வாய்ப்பு" கொடுக்காத நிலையில், ஒரு "தேசிய அரசை" [ தமிழர் கட்சிகள் இல்லாத} நிறுவி, அதன்மூலம், ரணில் மூலம் அமெரிக்காவை செல்வாக்கு செலுத்தி , உலக சமூகத்தை "சரிக்கட்டி" வருகிற செப்டம்பர் வெளியீடான,"ஐ.நா. மனித உரிமை கவுன்சில்" அறிக்கையில், புதிய ஆட்சி என்பது, "போர்குற்ற விசாரணைக்கு" தயார் என்பதால், அவர்கள் கையிலேயே கொடுத்துவிடுகிறோம் என்று,"உள் நாட்டு விசாரணைக்கு" கொடுப்பது என்ற "நாடகத்தை"முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்., அத்தகைய திட்டத்திற்கு, "சிங்களத்துடன்" சேர்ந்து, இந்திய வெளிவிவகார அமைச்சகமும், அமெரிக்க அரசும் இணைந்தே திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.

Friday, July 31, 2015

சசிபெருமாளின் மரணமும், மதுவிலக்கும்??


     என்ன இது?  அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறதே? மதுவிலக்கு பற்றி தொடர்ந்து "செய்திகள்" வருவதற்கு உதவியாக இருந்த ஒரு சசிபெருமாள் குமரி மாவட்டத்தில் "செல்போன் டவரின்" மேலிருந்து விழுந்து இறந்துவிட்டாரே? இதை எப்படி எடுத்துக் கொள்ள?  மதுவிலக்கு மட்டுமே பேசிவந்த ஒருவர் இப்படி சாகவேண்டுமா? தாங்க முடியவில்லையே? அந்த வயதான சசிபெருமாள்,தொடர்ந்து "சாகும்வரை பட்டினிப்போர்  மறியல், சத்தியாக்கிரகம், முக்கிய இடங்களில் அமர்வது, சேலத்திலிருந்து சென்னை வந்து செய்தியாக ஆவது, பல தலைவர்களைப் பார்த்து மதுவிலக்கை எடுத்துரைப்பது, அரசியல் தலைவர்கள் மதுவிலக்கு அறிவித்தால்,அவர்களை சென்று பார்த்து நன்றி கூறுவது, இப்படி தொடர்ந்து விடாப்பிடியாக செயல்பட்டவர் திடீரென மரணம் அடைந்துவிட்டாரே? என்று நமக்கும் அதிர்ச்சிதான். ஊடகங்கள் உடனடியாக  அவரது மரணத்தின் மீது , தலைவர்களிடம்  கருத்துக் கேட்டு, அவற்றை வெளியிடுகின்றன. அவை வேண்டுமானால் ஊடகங்களின் வேலை அல்லது கடமை அல்லது ஊடகங்கள் மீதான "தாக்கம்" என்று சொல்லலாம். ஆனால் சசிபெருமாள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக  ஊடகங்களில் கூறுவது உண்மைதானா? மக்கள் மத்தியில் அப்படி ஒரு "தாக்கத்தை" அவரால் ஏற்படுத்த முடிந்ததா?என்ற கேள்வி எழுகிறது. 

           பொதுமக்கள் மத்தியில் எல்லோருக்கும் சசிபெருமாளை தெரிகிறதா? நமக்கு அப்படி புலப்படவில்லை. ஒரு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன் சேர்ந்து இதேபோல அவ்வப்போது மதுரையிலிருந்து புறப்பட்டு, சென்னை வரை பல ஊர்களிலும் மதுவிலக்குக்காக பட்டினிப்போர் நடத்திவருகிறார். அதேபோல நெல்லையிலிருந்து ஒரு விவேகானந்தன் சென்னை வந்து ஒரு பெரும் பட்டினிப்போராட்டம் நடத்தி, மதுவிலக்கை பரப்பினார். நெல்லையிலேயே 1000 குழந்தைகளுக்கு "மகாத்மா காந்தி" வேடம் போட்டு மதுவிலக்கை வலியுறுத்தி  நிகழ்ச்சி நடத்தினார். அடுத்து சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, மதுவிலக்கு அறிவித்ததற்காக "நன்றி" கூறினார். இப்படியாக ஊடக செய்திகளில் வந்துகொண்டிருக்கிறார். இவர்கள் "தனிநபர்களாக" இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பரப்பும் கொள்கைதான் அவர்களை "அடையாளம்" காட்டுகிறது. அதேபோல சசிபெருமாள் இன்று நம்முடன் இல்லை. அது நமக்கு வருத்தமே. ஆனால் அவர் ஏன் "செல்போன்" டவர் மீது ஏற வேண்டும்?".  "முழுமையான மதுவிலக்கு" மட்டுமல்ல , கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை என்ற ஊரில்,ஒரு குறிப்பிட்ட "டாச்க்மாக் கடையை" அகற்றவேண்டும் என்ற கோரிக்கையையும்  சசிபெருமாள் வைத்ததாக தெரிகிறது.   ஐந்து மணிநேரம் சசிபெருமாள் அந்த "செல்போன் டவர்" மீது ஏறி நின்று  போராட்டம் நடத்தியுள்ளார். அத்தகைய போராட்டத்தை அவரது "நண்பர்கள்" ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

                   சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அவர்கள் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சாட்டலாம்.அதை பொதுமக்கள் "பெரிதாக"  எடுதுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மதுவிலக்கு கொள்கையை தொடர்ந்து பரப்பி வரும் "தமிழருவி மணியன்" சசிபெருமாளின் மரணம் பற்றி கூறும் போது "தனது கோரிக்கை  தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கவில்லையே" ,என்ற "ஆதங்கத்தில்" செல்போன் டவர்" ஏறியிருக்கிறார் என்று கூறுகிறார். அவரும் "செல்போன் டவர்" ஏறியதை ஆதரிக்கவில்லை. இப்படி விரக்தியில் போராட்டங்களை செய்யலாமா? சிறைக்குள் இருக்கும் சிறைவாசிகள் "வேறு வழியே" இல்லாமல், "செல்போன் டவரின் மீது ஏறுதல்" போன்ற போராட்டங்களை நடத்தும்போது,"புரிந்தகொள்ள" முடியும். அதை அண்ணன் சசிபெருமாள் செய்யலாமா? அவரது உயிர் அவருக்கு பெரிதாக தோன்றாமல் இருக்கலாம். நமக்கு அது "ஒரு உயிர்" என்பதும், அனாவசியமாக ஒரு உயிர் சாககூடாது என்பதும் தெரியுமே? நாம் "பயங்கரவாதி" ஆனாலும் ஒரு உயிரை எடுக்க "அரசுக்கு" உரிமை இல்லை என்றுதானே "மரண தனடனையையே" எதிர்த்து வருகிறோம். தனது உயிரை போக்கிக்கொள்ளவும் யாருக்கும் உரிமை கிடையாது என்பதுதான் நமது வாதமும். எந்தவகையிலும் சசிபெருமாளின் இத்தகைய "போராட்ட வடிவத்தை" நாம் ஏற்க முடியாதல்லவா?

                      நம்மவர்கள் "தனிநபர்கள்" ஒரு சமூக பிரச்சனைக்காக, மக்களின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்க்க, சில நேரங்களில் சிலவகை போராட்டங்களை நடத்துகிறார்கள்.யாரும் நல்ல கோரிக்கைகளை "கவனிக்கவில்லையே" என்ற ஆதங்கத்தில்தான், சில நேரங்களில் "விரக்தியில்தான்" சில "தனிநபர்" போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் அவை எலலாவற்றையும் "காந்திய முறை போராட்டங்கள்" என்று கூறி விடலாமா?  காந்திய வழி என்றால் "தொடர்ந்து மக்கள் மத்தியில் அறவழியில்" ஒரு கோரிக்கையை கொண்டு  செல்வதும், அதன்மூலம் பொதுமக்களின் ஆதரவை பெருவாரியாக பெறுவதும் என்பதுதானே? மறைந்த அப்துல் கலாம் அவர்கள் தொடர்ந்து "மாணவர்களிடையே" தனது கொள்கைகளை கூறி,ஒரு "தொலைநோக்கிய" பார்வையில் அத்தகைய கொள்கைகளில் வெற்றி பெற முயன்றதால்தானே மதிக்கப் பட்டார்? நாம் என்று கோரிக்கையை வைத்துக் கொண்டு தெருவில்,இறங்கினோமோ அதை "மூன்றே ஆண்டுகளில்" வெற்றி பெற துடித்து, அதற்காக விரக்தி மனம் கொண்டு "விபரீதங்களில்" ஈடுபடலாமா? 

                       செல்போன் டவரில் ஏறி நின்றுகொண்டு, மதுக் கடையை மூடசொல்வது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை,மிரட்டி, பணியவைப்பது" என்றுதானே பொருள்? அது எப்படி "காந்திய நடைமுறை" ஆகும்? ஆனாலும் சசிபெருமாள் தனது "நலனுக்காக" போராடவில்லை என்பதால், நாம் வேதனைப்படுகிறோம். சமூகத்தில் பொதுவாகவே "போராட்ட உணர்வு " குறைந்துவரும் காலத்தில், சசிபெருமாள் போன்றவர்களின் மரணம்,போராட்டமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. பல பத்து ஆண்டுகளாக பேசப்படும்" மதுவிலக்கு" என்ற முழக்கம்,மூன்று ஆண்டுகளாக சசிபெருமாள் அவர்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது என்று நாம் கூறவில்லை. ஆனால், ஊடகங்களின் தொடர்ந்த உதவியால், அவரது போராட்டம் "வெளியே" தெரிகிறது.இது "ஊடகங்களின் காலம்".

                     குமரி மாவட்டத்தில், உன்னாமலைக் கடை என்ற இடத்தில, பள்ளிக்கூடங்கள், தேவாலயம், ஆகியவற்றின் அருகே "டாச்க்மாக்" கடை அகற்றப்படவேண்டும் என்று, 1000 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள். அங்கே குறிப்பாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் "தீவிரமான" போராட்டங்களை நடத்த உணர்வு கொண்டவர்கள். அவர்களிடம் "மக்கள் திரள் போராட்டங்களை" நடத்த தொடர்ந்து முயலவேண்டியது அவசியம். அங்கேபோய், இவ்வாறு, "தனிநபர்" போராட்டமோ, "வீரசாகச மிரட்டல்" போராட்டமோ, அவசியமில்லை. அது சரியான வழியும் அல்ல, என்ற கருத்தும் இருக்கிறது.  ஆனால் நமது வட்டாரங்களில், "இலங்கை போரை நிறுத்த முத்துகுமாரின் உயிர் தியாகம்" என்ற "போராட்ட வடிவமோ", " ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியுள்ள "மூன்று தமிழர்களின் உயிர் காக்க, மக்கள் மன்றத்தின் செங்கொடியின் நெருப்பிட்டு எரிந்த மரணமோ" நம்மால் ஏற்கககூடியவை அல்ல. நாம் அவர்களது "கோரிக்கை நியாயத்தை" ஏற்றுக் கொண்டாலும், அவர்களது "போராட்ட வடிவத்தை" ஏற்றக் கொள்ள முடியாது.

                     இந்த நாட்டில் எந்த ஒரு "அறவழியோ","அமைதிவழியோ",அரசையும், நிர்வாகத்தையும்,  அசைத்துவிடும் என்று நாம் "மூட நம்பிக்கை" கொண்டிருக்க வில்லை. மக்களை திரட்டி போராடுவது என்பது ஒரு "கடினமாக,விடாப்பிடியாக" செய்யவேண்டிய ஒன்று. அதற்கு நமக்கு "பொறுமை" வேண்டும். ஆனால் பொறுமையாக, ஆழமாகக் கடுமையாக மக்கள் மத்தியில் உழைத்து, மக்களை திரட்டுவது என்பது ஒரு வழிமுறை. உணர்ச்சிவசப்பட்டு, அவசரமாக, வீரசாகசத்தோடு, "போராட்ட முறைகளை" திட்டமிடுவது எப்படி சரி?  நாம் சசிபெருமாளுடைய மரணத்திலிருந்து, நிறைய "கற்றுக்கொள்ள"வேண்டும். அவரது உறுதி, தொடர் முயற்சிகள், விடாப்பிடியாக, மதுவிலக்கு கொள்கையை வெற்றிபெற வைக்க முயல்வது ஆகியவற்றை நாம் போற்றவேண்டும். அதேநேரம், "ஊடகங்கள்" கொடுக்கும் உற்சாகத்தை மட்டுமே நம்பி, மக்களை திரட்டும் "கடின முயற்சியை" எடுக்காமல், முன்செல்ல முயல்வது தவிர்க்கப்பட 
வேண்டும்.

                உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் பகுதி, நிறைய "குடிகாரர்களை" கொண்ட பகுதிதான். அங்கு வாழும் அடிப்படை மக்கள் மத்தியில், "நொச்சிக்  குப்பம்"  பகுதியில், சாந்தோம் சாலையான "காமராஜர் சாலையில்" இருந்த  மதுக் கடை, அந்த வழி செல்லும், "உயர்நீதிமன்ற நீதியரசர்களால்" ஒரு நாள் கோபத்தோடு தடுக்கப்பட்டது. உடனே அந்த கடை, "அம்பேத்கர் பாலம்" என்ற அடிப்படை மக்கள் வாழும் அருகாமை பகுதிக்கு, மாற்றப்பட்டது. அங்கும்,வசிக்கும் மக்களால்,"கடையை அடை" என்ற போராட்டம் நடந்தது. அங்கிருந்தும் அந்த கடை அகற்றப்பட்டு, அருகே உள்ள,"தண்ணீர்தொட்டி மார்கெட்" என்ற இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கும் சில காலம் கழித்து, மக்கள் கடையை அகற்ற கோரி, போராடினார்கள். அதற்குப்பிறகு அங்கிருந்தும் அந்த கடை  அகற்றப்பட்டது. ஆகவே, சென்னை மயிலாப்பூரில் மக்கள் போராட்டம் மூலம் மதுக் கடை மூடப்பட முடியும் என்றால், ஏன் கன்யாகுமரி மாவட்டத்தில் "விடாபிடியான மக்கள் போராட்டத்தினால்" மதுக் கடை மூடப்பட முடியாது? அதற்கு பொறுமையுடன் கூடிய மக்கள் திரள் போராட்ட அணுகுமுறை தேவை..

Thursday, July 30, 2015

டைகர் ஆதரவாளர்கள், யாகுப் மேமனை தூக்கிலிட்டார்கள்?.

டைகர் மேமனின் ஆதரவாளர்கள், யாகுப் மேமனை தூக்கிலிட்டார்கள்?.
-------------------------------------------------------------------------------------------------------------
     யார் அந்த டைகர் மேமனின் ஆதரவாளர்கள்?
     யாகுப் மேமனை தூக்கிளிட்டவர்கள்?
     ஜூலை 30.யாகுப் மேமனின் பிறந்த நாள்.
     அன்று காலை அவரை கொலை செய்தால்,
      மன்னிக்கணும்.சட்டப்படி, தூக்கிலிட்டால்,
     அவரது குடும்பமே ஆடிப்போகும். அதுதான்
     டைகர் மேமன் எனும் யாகுபின் அண்ணனை
     அதிரவைக்க நல்ல திட்டமா? இது என்ன அரசியலாக
      இருக்கிறதே? சரி.யாகுப் மேனனை தூக்கிலிட்டது யார்?


      பிரதமரும், உள்துறையும், நீதிபதிக்களும்தானே
      யாகுப் மேமனை தூக்கிலிட்டனர்?,
       பிரதமர் மோடி எப்படி குண்டு வைத்த டைகரின்
       ஆதரவாளராக ஆக முடியும்? அடுத்து உள்துறை
        அமைச்சர் ராஜ்நாத்சிங் எப்படி 1993 இன் குண்டுவெடிப்பில்
        குற்றம் சாட்டப்பட்ட டைகரின் ஆதரவாளராகுவார்?
        யாகுபை தூக்கிலிட செய்த நீதிபதிகள் எப்படி குற்றவாளி
        டைகருக்கு ஆதரவாளர்களாக இருக்க முடியும்?
         டைகரிடம் இதில் யாருமே "காசு" வாங்க வில்லை.
         சார்பாக இல்லை.பிறகு எப்படி ஆதரவாளர்கள்?

          டைகரின் "சொற்களை" உண்மையாக்கியவர்கள்,
          டைகரின் "ஆதரவாளர்கள்" தானே?
          இந்தியாவிடம் சரணடைய வந்த யாகுபிடம்,
          " நீ காந்தி போல செல்கிறாய். உன்னை கோட்சேயை போல
          இந்தியா "தூக்கிலிட்டுவிடும்" என்றாராம்.
           டைகரின் "வார்த்தைகளை" உண்மையாக்கியவர்கள் யார்?
          அவர்கள் டைகரின் ஆதரவாளர்கள்தானே?
       

Wednesday, July 29, 2015

கலாம் உங்கள் சொல்லின் பொருளை புரிந்துகொண்டார்களா?

கலாம் உங்கள் சொல்லின் பொருளை புரிந்துகொண்டார்களா?
-------------------------------------------------------------------------------------- மணி.
         " மரண தண்டனை"யை சுட்டெரிக்கும் உனது
           "கதிர்வீச்சு" சொற்கள், உனது உடலைப்
           " புதைப்பதற்கு" நான்கு மணிநேரம் முன்பே,
           " நாகபுரியில்" அரசால் திட்டமிட்டு,மரணிக்கப்பட்டது.
           ' நாகபுரியின்" உருவாக்கம் அதிகாரத்தில் அமர்ந்தால்,
           ஓரங்கட்டப்பட்டவர்கள்தான்  மீண்டும், மீண்டும்,
           தூக்கில் ஏறுவார்கள் என்ற உனது " சுடு சொற்கள்"
           மக்களை வந்து "தொடுவதற்கு" முன்பே,
           "பொய்களை" சுட்டெரிததுவிடுமோ என
            அவர்கள் எண்ணினார்களோ? அதனால்தான்
            இந்த அவசரமோ? டைகர் கிடைக்காவிட்டால் என்ன?
            " தம்பி" கிடைத்தானே, என்ற உள்ளூர் காவல்துறையின்
             "தறுதலை" உணர்வின் "தவறுதலையா",காண்கிறோம்?
              உச்சகட்ட நீதி தரும் நிலையம் என்றார்களே?
              பி.ராமன் எழுதிய தரவுகள் எல்லாம்கூட, அவர்களை
              அசைக்க வில்லையே? ஏன்? ஏன் இந்த அவசரம்?

              ஓகோ, இவர்கள் "பயங்கரவாதத்தை" இல்லாமல்
               ஆக்க  இறங்கவில்லை. அப்படி இறங்கினால்
                இவர்களும் சேர்ந்து மூழ்கவேண்டுமே?
                "பயங்கரவாதத்துடன்" பேரம் பேசவே முயல்கின்றனர்.
                 ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட  விமானம் கதை
                 நினைவுக்கு வரவில்லையா?
                ஒருபுறம் "தேர்தல் வெற்றியுடன்" எல்லைக்கு அப்பாலுள்ள
                " தேர்தல் வெற்றி" பேசிப் பார்த்தும், "முடிவு" வரவில்லை.
                "எங்களை விட்டுவிட்டு" நவாசுடனா?" என்று "ஆக்கிரமிப்பு"
                 கொரில்லாக்கள் "தலைப்பாகை" நிலத்திலேயே நுழைந்தார்கள்.
                 "இனி மிரட்டித்தான்" பேரம் என்று இவர்கள் முடிவுக்கு வந்தார்களோ?
                  நம்மூர் சிறையில் " அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள்"
                  அதிகாரிகளால் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகமாட்டார்கள்.
                  " ஒரு லுனாடிக்" சிறைவாசி அப்போது கிடைப்பான்.
                   சம்பந்தப்பட்டவர்களின் "கண்களுக்கு"  முன்னாலேயே,
                  அவரை "அடித்து,உதைப்பார்கள்". அதுவே "தொடமுடியாதவர்களுக்கு"
                  அனுப்பப்படும் "மிரட்டல்". இங்கே அந்த மிரட்டல்
                  "டைகருக்கும், தாவூதுக்கும்" போய் சேர, யாகூப்தான் "லுனாடிக்கா?"
                  உண்மைதான். சிறை மருத்துவரின் "சான்றிதழும்" அதுதான்.
                  "பலியாடுகளை" பலி போட, எந்த ஒரு சட்ட விதியும் தடுக்காதே?
                  அதுதானே இங்கேயும்................... ஆனால்

                  இந்த நிகழ்வுகள், சட்டத்தின் மீதும், ஆட்சிகள் மீதும்,
                  "நேர்மை" கோருவோரின் நம்பிக்கையை வலுப்படுதாதே?
                  "பயங்கரவாதத்தை" வலுப்படுத்த, இப்படி ஒரு முயற்சியை
                  கட்டவிழ்த்து விடுபவர்கள், மக்கள் பிரச்னைகளை
                  தீர்க்க முடியாததால், "தப்பிக்க" வழி, பயங்கரவாதத்தை
                  "நீரூற்றி வளர்ப்பதுதானோ?"  அதனால்தான் கலாம் அவர்களே,
                  உங்களை மண்ணில் புதைக்கும் முன்பே  உங்கள் சொற்களை
                  அவர்கள் "புதைத்து" விட்டார்கள்"