Sunday, April 24, 2011

எஸ்.பொ.விற்கு இயல் விருது, இயல்பானது.

எஸ்.பொ. இந்த பெயர் ஈழத்தமிழ் எழுத்தாளர்களிடையே ஒரு எழுத்து போராளியை, ஒரு சமரசமற்ற கருத்தாளியை, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்கிறது. எஸ்.பொன்னுத்துரை அவரது பெயர். இப்போது வயது எண்பதை
தாண்டுகிறது. மட்டகிளப்பு நகரில் பிறந்து வளர்ந்தவர். பொதுவுடைமை இயக்கத்தில் ஆசிரியர் பணியில் இருக்கும்போதே ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். தமிழின உணர்வுகளில் ஈடுபாட்டுடன் அவர் செயல்பட்டதால், பொதுவுடைமை இயக்கத்திற்குள் கருத்து போராட்டத்தை நடத்தியவர்.

எஸ்.பொ. தனது எழுத்துக்களால் தமிழினத்தின் மீது பகைமை கொண்ட, இந்திய அமைதிப்படையின் முகமூடியை கிழிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா நாட்டில் குடியுரிமை பெற்றவராக இப்போது இருக்கும் எஸ்,பொ.விற்கு அவரது எழுத்துகளுக்காக கனடா நாட்டு தமிழர்கள் அறிவித்துள்ள விருதுதான், " இயல் விருது". அது 2010 ஆம் ஆண்டிற்கானது. அறிவிக்கப்பட்ட அந்த விருதை அவர் விரைவில் பெற்றுக்கொள்ள இருக்கிறார். அதற்குள் அந்த விருது பெற்றமைக்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தலாம் என்றுதான் சென்னையில், கன்னிமரா நூல் நிலையத்தில் ஒரு பாராட்டு விழாவை, படைப்பாளிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சூரியதீபனின் முயற்சி அது. உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன்,பழ.நெடுமாறன், சீ.பி.ஐ.மகேந்தரன், பேரா.சரஸ்வதி,பண்ஜாங்கம், பாமரன் ஆகியோர் பேசினர். மகேந்தரன் தான் எஸ்.பொ.பற்றி கொண்டிருந்த பழைய கருத்துக்களை மாற்றிக் கொண்டதை குறிப்பிட்டார். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இங்கு போலவே அங்கம் பொதுவுடைமை கட்சியின் புரிதலுக்கு உட்பட்டே இருந்திருக்கிறது. அவர்கள் தமிழின தேசியத்தின் இருத்தலையோ, விடுதலையையோ வர்க்க போராட்டத்திற்கு எதிரானதாக பார்த்திருக்கிறார்கள். அதுவும் இங்குள்ள மாதிரியே என்கிறீர்களா?

அந்த இயக்கத்தில் இருந்த எஸ்.பொ. அதில் முரண்பட்டிருக்கிறார். "நற்போக்கு எழுத்தாளர் சங்கம்" என்று ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். அதன்மூலம் வர்க்க போராட்டத்தை காணும் மார்க்சிசம் எப்படி இன விடுதலையையும் கறாராக பார்க்கிறது என்று எடுத்து சொல்லியிருக்கிறார். அங்குள்ள் கம்யுனிஸ்டுகள் அதை புரிந்து கொள்ள சக்தியற்று இருந்திருக்கிறார்கள். எஸ்.பொ. தனது ஆசிரியர் பணிக்கு இடையே தமிழினம் அடக்கப்படுவதை உணர்ந்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டிருந்திருக்கிறார். கவிஞர் காசி அனந்தன் எஸ்.பொ.வுடன் ஒரே அறையில் தங்கி கல்வி கற்றலை தொடர்ந்திருக்கிறார்.அதே பள்ளியில் அவரும் மாணவர்.ஆனால் எஸ்.பொ. இவருக்கு நேரடியாக ஆசிரியர் அல்ல.

மட்டகிளப்பில் எஸ்.பொ., காசி அனந்தன், பாலு மகேந்த்ரா எல்லோருமே ஒரே பகுதியில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்ந்தவர்கள். காசி அனந்தன் தமிழரசு கட்சியிலும், எஸ்.பொ. பொதுவுடைமை இயக்கத்திலும் இருந்திருக்கிறார்கள். அதை காசி அனந்தன் அந்த 23 ஆம் நாள் சனிக்கிழமை கூட்டத்தில் விளக்கினார். தமிழரசு கட்சியில் இருந்துகொண்டே சாதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், பேசும் வித்தியாசமான வராக காசி அனந்தனும்,பொதுவுடைமை இயக்கத்தில் இருந்துகொண்டே தமிழின விடுதலையை பேசும் வித்தியாசமானவராக எஸ்.பொ.வும் இருந்ததை குறிப்பிட்டார்.

மூன்றாம் உலகம் பற்றி அதாவது மண்ணுக்கு நெருக்கமான உலகம் பற்றி, வளராத நாடுகளின் நிலைமை பற்றி எஸ்.பொ. எழுதியுள்ளார் என்பது எல்லோர் பேச்சிலும் வெளிப்பட்டது. மூன்றாம் உலகம் என்பது ஒரு தத்துவமாக மாவோவால் வழிநடத்தப்பட்ட கொள்கை.அதாவது அமெரிக்காவும், சோவியத் யூனியனும், உலகை பங்கு போடும் வல்லரசுகளாக மாவோவால் வர்ணிக்கப்பட்ட போது, அதை முதல் உலகம் என்று மாவோ கூறினார். அதற்கு அடுத்து வளர்ந்த நாடுகளான முதலாளித்துவ நாடுகளை இரண்டாம் உலகம் என்றார். வளராத அல்லது வளர்ந்துவரும் நாடுகளை, சோஷலிச நாடுகள் உட்பட மூன்றாம் உலகம் என்று மாவோ கூறினார். அன்றைய மார்க்சிசவாதிகளுக்கு,அதிலும் மாவோவை பின்பற்றி மார்க்சிசத்தை கற்றவர்களுக்கு இதில் பரிச்ச்சயம் உண்டு.அதுவே
எஸ்.பொ. எழுத்தில் தொநித்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.


எஸ்.பொ.அவர்களது மகன் போருக்கு புலிகளுடன் சென்றவர். நெடுமாறன் தனது ரகசிய ஈழப்பயனத்தில் காணொளி எடுத்தவர் எஸ்.பொ. மகன்தான் என்பதை அங்கே பதிவு செய்தார். அந்த புலி தம்பி இப்போது நம்மிடையே இல்லை. அவர் தனது தாய் நாட்டிற்காக வீரச்சாவை தழுவிவிட்டார். இதுவே எஸ்.பொ.வை மேலும் ஒரு போராளியாக படம் பிடித்து காட்டியது. பேராசிரியர் சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் அமைப்பாளர். அவர் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிககையை சுட்டிக்காட்டி வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவு பற்றி விளக்கினார்.இன்குலாப் தனக்கு கருணாநிதி அரசு அளித்த கலைமாமணி விருதை, எப்படி முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒட்டி அரசுக்கே திருப்பி கொடுத்தார் என்று சரஸ்வதி சுட்டி காட்டினார். அவ்வாறு எழுத்தாளர்கள் முதுகெலும்புடன் இருப்பது அரிது என்றாலும், அதில் ஒருவர் எஸ்.பொ. என்றார்.


எஸ்.பொ. ஒரு இலக்கியம் என்றால், அவரது மகன் ஒரு வரலாறு என்று காசி அனந்தன் கூறும்போது அவையே அமைதியானது. சென்னை இப்படி ஒரு போராளி எழுத்தாளருக்கு பாராட்டு நடத்தியதை எண்ணி பெருமை கொண்டது.

No comments:

Post a Comment