Friday, January 7, 2011
தெருமுனை கூட்டங்கள் போடுவோம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறப்பு பயங்கர சட்டத்தின் அடிப்படையில், ராய்பூர் நீதிமன்றம் டாக்டர். பினாயக் சென்னிற்கு, ராஜதுரோக குற்றச்சாட்டு வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கியதை கண்டித்தும், பினாயக்கை விடுதலை செய்யகோரியும், சென்னை மக்கள் சிவில் உரிமை கழகம் தியாகராயநகரில் கூட்டம் நடத்தியது. அதில் வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்களும், மருத்துக ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டது சிறப்பு நிகழ்ச்சி. பினாயக்கின் ஆசிரியரான டாக்டர்.சகாரியா பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு மருத்துவர் எப்படி மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று பலரும் ஆச்சரியப்படலாம்; அதுவும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து களப்பணிக்கு செல்லலாம் என்று கேட்பார்கள் என்று தொடங்கினார். மருத்துவ சேவையில்கூட அடிப்படையான கேள்விகளை பினாயக் கேட்டுக்கொண்டே இருப்பார். அதுதான் அடிப்படையான அறிவாளியின் அணுகுமுறை. அதனால்தான் பினாயக் சென்னிற்கு, 3000 பேர் விண்ணப்பிக்கும்போது 15 பேருக்கே கிடைக்கும் எம்.டி.படிக்கும் வாய்ப்பு டில்லியில் கிடைத்தது. இவ்வாறு தனது மாணவன் பினாயக்கை ஆசிரியர் புகழ்ந்தார். எடைகுறைவு, சத்துக்குறைவு என்று மனிதர்கள் பாதிக்கப்படுவது, ஒரு ரசாயன பிரச்சனை அல்ல; அதன் தொடர்பு மருத்துவ விசயமல்ல; ஆனால் சமூக விஷயம் என்றார் டாக்டர்.சகாரியா. அது உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று ஒரு பெரிய அரசியல் பொருளாதாரத்தையே அப்போது சுட்டிக்காட்டிவிட்டார். தேவையான சத்துணவு மக்களுக்கு கிடைப்பதை ஒட்டியே சத்தீஸ்கரில் வறுமைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது முழுமையாக அரசாங்க நிர்வாகத்தின் செயல்பாடு பற்றிய பிரச்சனை. அதனால்தான் ஒரு மனித உரிமை ஆர்வலர் இதில் அதிக கவலையை காட்டினார்; அதுவே அதிக அளவில் செழிப்பான மூலப்பொருள்கள் கொண்ட ஒரு மாநிலமான சத்தீஸ்கரில் அதிகமான அளவில் ஏழ்மை இருப்பதால் இயல்பாகவே ஒரு மனித உரிமை ஆர்வலருக்கு அங்குள்ள மனித உரிமை பிரச்சனைகளில் ஈடுபட மட்டும்தான் உணர்வு வரும் என்று பினாயக்கின் ஆசிரியரான சகாரியா கூறினார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பினாயக்கை பிணையெடுக்க வேண்டும் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டு நீக்கப்படவேண்டும் என்றும், அதற்கான உயர்மட்ட விரைவு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாம் குரல் கொடுக்கவேண்டும் என்றார். தான் பினாயக் விடுதலைக்காக ஒரு நிதியை சட்ட ரீதியாக தொடங்கியிருப்பதாக கூறினார். அமர்வு நீதிமன்ற விசாரணைக்காக மட்டுமே, தாங்கள் திரட்டிய நிதியில் ரூ.23 லட்சம் செலவழிந்ததாகவும், மீண்டும் அதற்கான அதிக திரட்டுதல் செய்யப்படவேண்டும் என்றும் கூறினார். பொதுமக்கள் அபிப்ராயம் ஊடகங்கள் மூலமாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக ஊடகங்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுவதை பழக்கமாக கொள்ளவேண்டும் என்றும் அந்த மருத்துவர் கூறினார். பினாயக் சென்னின் மனைவி இலினா, ஆங்கில காட்சி ஊடகத்தில் பேசும்போது, தங்கள் குடும்பம் வேதனைப்படுகிறது என்றாலும், இந்த நாடு எந்த அளவிற்கு வேதனைகளை கொண்டுள்ளது என்பதுதான் முக்கியம் என்று கூறியதை மருத்துவர் சகாரியா சுட்டிக்காட்டினார். தான் சிறையில் இருந்தாலும், தனக்காக குரல் கொடுக்க வெளியே ஆட்கள் இருக்கிறது என்றும், ஆனால் சிறையில் இருக்கும் பல அப்பாவிகளுக்கு அதுபோல இல்லையே என்று பினாயக் கூறியதாகவும், அவரது ஆசிரியர் கூறினார். பினாயக் போன்று இன்றைய இளைஞர்கள் தங்களை மிகவும் பின்தங்கியுள்ள ஆதிவாசி மக்களின் பிரச்சனைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போது மருத்துவர் தெரிவித்தார். அடுத்து பேசிய வேலூர் சிஎம்சியைச் சேர்ந்த மருத்துவர் சாரா பட்டாச்சாரியா, 1968ல் தான் கல்லூரியில் சேரும்போது, பினாயக் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவன் என்று தொடங்கினார். ஆண்கள் மட்டுமே நடத்திய விடுதி நாடகங்களில், பெண்கள் பங்குகொள்ள விதிகள் தடுத்தபோது பினாயக் பெண் வேடமிட்டு, பெண்களுக்காக பேசி, நடித்ததை அவர் நினைவு கூர்ந்தார். அப்போது கிறித்துவ மாணவர்கள் இயக்கம் இருந்தது. பினாயக் கிறித்துவராக இல்லாவிட்டாலும், அந்தக் கூட்டங்களுக்கு வந்து செவிமடுப்பார். மிகவும் நுணுக்கமான தன்மையைக் கொண்டவர் பினாயக். ஒருமுறை ஒரு நோயாளிக்கு இதய நோய்க்காக டெஜாக்சின் கொடுக்கும்போது, உடன்கொடுக்கவேண்டிய பொட்டாசின் மருந்தை கொடுக்க பினாயக் மறந்துவிட்டார். நினைவு வந்தவுடன், அந்த நோயாளி வீட்டிற்கு ஓடிச்சென்று மீதமுள்ள மருந்தையும், கொடுத்துவிட்டுத்தான் திரும்பினார். அந்த அளவிற்கு நுண்ணிய ரீதியில் தன்மைகள் கொண்டவர். எம்.டி. முடித்தபிறகு, டெல்லி அருகேயுள்ள ஒசங்காபாத்தில் வன்முறையற்ற மக்கள் இயக்கங்களுடன் இறங்கி செயல்பட்டார். சத்தீஸ்கர் பகுதியில் ஆதிவாசிகளான, தொழிலாளர்கள் மத்தியில் ஷங்கர் குஹா நியோகி என்ற தொழிற்சங்கத் தலைவர், செயல்பட்டு வந்தார். அவர் முக்கியமாக சுரங்கத் தொழிலாளர்களை அமைப்பாக்கி செயல்பட்டார். நியோகியுடன் சேர்ந்து அந்த சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பினாயக் பணி செய்ய தொடங்கினார். அங்கே சாகித் மருத்துவமனை என்ற இடத்தில் 300 ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு, நியோகியின் தொழிலாளர்கள் மத்தியில் மருத்துவ சேவை செய்து வந்தார். இப்போது அந்த மருத்துவமனை நூறு படுக்கைகள் கொண்டதாக வளர்ந்துவிட்டது. சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமைதியாக நடந்து வந்தன. அப்போது தொழிலதிபர்களும், அரசும், குண்டர்களும் சேர்ந்து நியோகியை சுட்டுக்கொன்றனர். பஹ்ரூ நல்லா என்ற கிராமத்தில் ஆதிவாசி மக்கள், ஆற்றோர விவசாயம் செய்து வந்தவர்கள் அணைக்கட்டிற்காக கட்டாய இடம்பெயர்ப்புக்கு உள்ளானார்கள். அத்தகைய சூழலில் அந்த வட்டாரத்தில், காசநோய், மலேரியா ஆகியவற்றிற்காக சுகாதாரப் பணியாளர்களை பயிற்சி கொடுத்து உருவாக்கியவர் பினாயக் சென். அதனால், அங்குள்ள ஆதிவாசி மக்கள் அவரை “பகவான்” என்று அழைப்பார்கள். மாநில அரசாங்கம் தனது சுகாதார மையத்தில் பினாயக்கையும், இலினாவையும் உறுப்பினர்களாக ஆக்கியது. மாநிலத்தின் கனிமவள வளர்ச்சி ஆணையம், பன்னாட்டு மூலதன நிறுவனங்ககளை உள்ளே கொண்டுவந்தது. அதன் மூலம் 6070 கிராமங்கள் முழுமையாக காலி செய்யப்பட்டன. வீடுகளெல்லாம் உடைக்கப்பட்டன. அந்த சூழ்நிலை பற்றி ஆய்வு செய்து, பினாயக் பேசினார். அதுவே அரசுக்கு கோபத்தை உருவாக்கியது. மாநிலத்தில் ஊட்டச்சத்து குறையுள்ளோர் அதிகமாக இருந்தனர். மருத்துவமனையில் நோயாளிகள் உட்கார்ந்திருக்கக் கூட இடமில்லாமல் இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளையும் பினாயக் எடுத்துக் கூறினார். மேற்கண்ட விவரங்களை மருத்துவர் சாரா விளக்கி கூறினார். அடுத்து பேசிய வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் ஆனந்த் சகாரியா, வேலூர் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து பினாயக் சென்னின் விடுதலைக்காக ஓர் அறிக்கை தயார் செய்திருப்பதாக அதை ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிப்படுத்தினார். அடுத்து பேசிய பியுசிஎல் மாநில தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், பினாயக் வழக்கில் அரசும், காவல்துறையும் எந்த அளவிற்கு தவறாகவும், கோமாளித்தனமாகவும், நடந்துகொண்டனர் என்பதை விளக்கினார். அதாவது, இலினாசென் எழுதிய ஒரு இணைய அஞ்சல் பிரதியில் ஐ.எஸ்.ஐ. என்ற எழுத்துக்களை வைத்துக்கொண்டு, தம்பதியர் இருவருக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதாடினார் என்று கூறிவிட்டு, பினாயக் குடும்பத்தினர் எழுதிய கடிதம் டெல்லியில் உள்ள ஐஎஸ்ஐ என்ற இன்டியன் சோசியல் இன்ஸ்டியூட் என்ற உண்மையை அவ்வாறு திரித்து கூறியதை அம்பலப்படுத்தினார். சிறையில் இருக்கும் 74 வயதுடைய நாராயண் சன்யால் என்ற மாவோயிஸ்ட் கைதியுடன் தொடர்புகொண்டதாக பியுஷ் குஹாவும், பினாயக்கும் குற்றம் சாட்டப்பட்டனர். பினாயக் வீட்டில் சோதனையிடப்பட்டு எடுக்கப்பட்ட 33 தாள்களிலும், பினாயக், சோதனையிட்ட அதிகாரி, சாட்சி ஆகியோருடைய மூன்று கையெழுத்துக்களும் பெறப்பட்டிருந்தன என்றும், அவ்வாறு கையெழுத்துக்கள் பெறப்படாத மூன்று கடிதங்களை, பினாயக் சன்யாலிடம் பரிமாறிகொண்டதாக காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது என்றார். அதுமட்டுமின்றி, கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஆவணம் எந்தவொரு கையெழுத்தும் இல்லாமல் இருந்தது என்றும், அதை அடிப்படையõக வைத்து நீதியரசர்கள் தண்டனை வழங்கியுள்ளார்கள் என்றும், கண்டன குரல் எழுப்பினார். பியுசிஎல் சார்பாக பினாயக் சென்னின் விடுதலைக்காக தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அங்கே அறிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment