தடுக்கி விழுந்தாலும்,மீசையில் மண் ஒட்டவில்லை.
சென்னைக்கு பிரதமர் மன்மோகன் வந்தார். புது ஆண்டின் இரண்டாம் நாள் இரவு ஏழு நாற்பத்தைந்திற்கு சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். மரபுப்படி முதல்வர் கருணாநிதி வரவேற்க வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அது ஏன், மன்மொகனிடமே இருந்தது. விமான நிலையத்தில் மன்மோகனை வரவேற்க வந்திருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், தனக்கு டில்லியில் அடிக்கடி பரிச்சயமான கனிமொழியிடமும், பிரதமர் முதல்வர் வருகிறாரா என்று வினவினார். அதற்கு கனிமொழி, ஆங்கிலத்தில் வந்துவிடுவார் என்று மட்டும் கூறினார். நிதி அமைச்சர் பேராசிரியரை விமான நிலையத்திற்கு கலைஞர் அனுப்பி இருந்தார். ஆனால் கருணாநிதி விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்க செல்லக்கூடாது என்று முடிவு செய்து விட்டார். அதேநேரத்தில் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வெளியீட்டு விழாவில், லீ மெரிடியன் ஓட்டலில் முதல்வர் இருந்தார். சென்னையில் இருந்து லீ மெரிடியன் ஓட்டலுக்கு சென்ற முதல்வர் அந்த இடமான கத்திப்பாரா சந்திப்பிலிருந்து விமான நிலையம் செல்ல அதிக நேரம் பிடிக்காது. முதல்வரின் வாகன வரிசை ஐந்தே நிமிடத்தில் விமான நிலையம் அடைந்துவிட முடியும். வேண்டுமென்றே பிரதமரை வரவேற்க கருணாநிதி வரவில்லை என்று காங்கிரசு தலைவர்கள் முணு,முணுத்தார்கள். எல்லா காங்கிரசு தலவர்களும் விமான நிலையத்தில் தங்கள் வருகையை பதிவு செய்திருந்தார்கள். அதனால்தான் அந்த முணு முணுப்பையும் வெளியிட்டார்கள். முதல்வர் விமான நிலையம் வருவாரா, மாட்டாரா என்றே தெரியாத நிலையில் காவல்துறையிலிருந்து, அரசியல் தலைவர்களிலிருந்து, அமைச்சர்களிலிருந்து, ஊடவியலாலர்களிளிருந்து அனைவருக்குமே அதிர்ச்சி தரும் செய்தியாக கலைஞர் வரவில்லை என்பது அங்கே தெரியவந்தது. அதைப்பற்றி பேசிய முதல்வர், மரபை மீறி தமிழுக்காக வந்துள்ளேன் என்று லீ மெரிடியன் விழாவில் கூறினார். உண்மையில் தமிழுக்காகத்தான் மரபை முதல்வர் மீறினாரா? அல்லது காங்கிரசுடன் உள்ள உறவில் வந்த விரிசலால் மரபை மீறி எதிர்ப்பு கொடுத்தாரா? இந்த கேள்விதான் அனைவர் மத்தியிலும் சுற்றி வந்தது. வட இந்திய அதிகாரிகளான பிரதமர் அலுவலக ஆட்கள் தமிழக முதல்வரின் சந்திப்புக்கு அதிக அல்லது போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கருணாநிதி காதுகளில் சிலர் போட்டுவிட்டார்கள். அதுவும் அடையாறு பூங்கா திறப்பு விழாவை ரத்து செய்த பிரதமரின் அலுவலகம், அதேநாளில் வருகை தரும் பிரதமரை வரவேற்க முதல்வர் வரவேண்டும் என்பதற்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தார்கள் எனபது முதல்வரின் அலுவலகத்தில் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது. அதன்விளைவே முதல்வர் இப்படி மரப்பு மீறி பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை என்பதே அவர்கள் வட்டாரத்தில் பேசப்பட்ட செய்தி. அடுத்து ஒரு அதிர்ச்சி செய்தி அனைவரையும் திகைக்கவைத்தது. ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு எட்டு பதினைந்து முதல் எட்டு நாற்பத்தைந்து வரை முதல்வர், பிரதமரை சந்திப்பதாக இருந்தது. ஆனால் முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு செல்லவில்லை. இதுவே பிரதமரை அவமதித்ததாக டில்லி அதிகாரிகள் கருதினார்கள். அதேநேரத்தில் புதிய தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க அதிகாரிகள் ஓடுவதை ஊடகத்தார் கண்டனர். அதையொட்டி முதல்வர் புதிய தலைமை செயலகம் வந்திருக்கிறார் என்ற செய்தி தீயென பரவியது. எதற்காக பிரதமருடன் உள்ள சந்திப்பை முதல்வர் ரத்து செய்தார் என்பது ஒரு புதிராகவே ஆகிவிட்டது. மத்திய அரசின் சில நடவடிக்கைகள், தி.மு.க.வை திக்குமுக்காட செய்துவருவதை தாங்கமுடியாத முதல்வர் எது வந்தாலும் பரவாயில்லை என்று பிரதமரை அவரது வருகையை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டார் என்று ஆளும் வட்டாரங்கள் கூறின. ஆனால் அதிகாரிகளோ இது நல்லதொரு முன்னுதாரணம் அல்ல என்றும், இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மிகவும் வருத்தப்பட்டனர். தங்கள் வருத்தத்தை தங்கள் சொல் கேட்டு வழக்கமாக நடக்கும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கூறினர். அவரும் உடனே அதன் எதிர்விளைவுகளை உணர்ந்தார். உடனடியாக தனது அன்பிற்குரிய மருமகன் இளைய அமைச்சர் தயாநிதியையும் வரச்சொல்லி, இருவரும் புதிய தலைமை செயலகம் சென்றனர். அங்கே கலைஞரை தளபதி சமாதானப்படுத்த தொடங்கினார். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு வாங்கியதும் முதல்வரின் அலுவலகம்தான் எனும்போது, அதை செயல்படுத்தாமல் இருப்பது என்பது பிரதமரையே பெரிதும் அவமானப்படுத்துவது என்று ஆகிவிடும் என்பதாக பக்குவமாக தளபதி தந்தைக்கு அறிவுரை கூறினார். அதன்பிறகு இப்போது என்ன செய்யலாம் என்று கோபம் தணிந்த முதல்வர் கேட்க, பிரதமர் சென்னையில்தான் மறுநாளும் இருப்பதால், மறுநாள் காலையில்கூட முதல்வர் பிரதமரை சந்திக்கலாம் என ஸ்டாலினும், தயாநிதியும் ஆலோசனை கூறினர்.அதையொட்டி சரி என்று முதல்வர் கூற, உடனே தயா பிரதமரின் அந்தரங்க செயலாளரை தொடர்பு கொண்டு மறுநாள் காலை அதே ஆளுநர் மாளிகையில் முதல்வர், பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டினார். அதற்குள் இந்த அதிர்ச்சியால் தாக்கப்பட்ட மன்மோகன் அதிலிருந்து விடுபடாத நிலையில், உடனடி தொலைபேசியில் அடுத்த நேர ஒதுக்கீடு கேட்டு வந்த செய்தியால் ஆறுதலடைந்தார். டில்லியிலிருந்து தனக்கு திட்டு வந்துவிடக்கூடாதே எனபதில் அவர் கவனமாக இருந்திருப்பாரோ என்னவோ.மறுநாள் ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகையில் காலை எட்டு முப்பது மணிக்கு, பிரதமரை முதல்வர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி பற்றி பேசி, தனது கோரிக்கைக்கு வெற்றி என்று கருணாநிதி அறிவித்தார். எப்படியோ தடுக்கி விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல கருணாநிதி நடந்துகொண்டார்.
தந்தைக்கு, மகன் செய்த உபதேசம் காங்கிரசுடன் சண்டை போட தயாரான கருணாநிதியின் இரண்டாம் தேதி இரவு செயல்பாட்டை மாற்றி அவரை மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்த, தனையனான துணை முதல்வரின் முயற்சியை, தந்தைக்கு மகன் செய்த உபதேசம் என்று சத்தியமூர்த்தி பவனில் நக்கலடித்தார்களாம். அந்த நக்கல் அறிவாலயம் வரை தெரிந்து ஏற்கனவே காங்கிரசு மீது கோபமாக இருக்கும் தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில், கலைஞர் எடுத்த முதல் முடிவு வரவேற்க்கத்தக்கது என்றும் கூறத்தொடங்கிவிட்டார்கள்.
தெருநாடகம்முதலில் மரபு மீறி விமான நிலையம் செல்லாமல் தவிர்த்தது, பிறகு தலைமை அமைச்சரிடம் கேட்டு வாங்கி பெற்ற நேரத்தை புறக்கணித்து அவரை சென்று சந்திக்காமல் இருந்தது, பிறகு மனம் மாறி மீண்டும் பிரதமரிடம் நேரம் கேட்டு மறுநாள் சந்தித்து, ஆகிய எல்லாமே காங்கிரசு தலைமையை ஏமாற்ற செய்த நாடகம் என்றும், அதை தெருவில் நடந்த நிகழ்ச்ச்சி என்பதால் தெருநாடகம் என்றும் காங்கிரசார் விமர்சிக்கத்தொடங்கி உள்ளார்கள்.
டி.ஆர்.பாலு ஏன் போனார்?
ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகை சென்று தலைமை அமைச்சரை சந்திக்க சென்ற முதல்வர் கருணாநிதி, முக்கியமாக தனது சந்திப்பு தமிழக மக்களுக்கான நலன்களுக்காக மத்திய அரசின் உதவி கேட்கும் சந்திப்பு என்று தமிழக மக்களிடம் காட்டிக்கொள்ள விரும்பினார். அதனாலேயே அதை வெள்ள நிவாரண நிதி கேட்கும் சந்திப்பு என்பது போல சித்தரிக்க விரும்பினார். அதுபோலவே சித்தரிக்கவும் செய்தார். அப்போது டி.ஆர்.பாலுவையும், உள்துறை செயலாளர் மாலதியையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துசென்றார். எதற்காக பாலுவை அழைத்து செல்லவேண்டும்? இந்த கேள்வி தயாநிதி ஆதரவாளர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. முந்திய நாள் இரவில் தயாநிதிதான் ஸ்டாலினுடன் சேர்ந்துகொண்டு முதல்வரையும் இணங்க வைத்து, பிரதமரின் சந்திப்பை மறு உறுதி செய்தவர். என்றும் ஆனால் அவரை அழைத்துச்செல்லாமல் தலைவர் எப்படி டி.ஆர்.பாலுவை அழைத்து செல்லலாம் என்றும் அவர்கள் கோபம் கொண்டனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, மத்திய அரசின் நிதி என்பது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை நாளை பெறவேண்டிய ஒன்று என்றும், அதனால் நாடாளுமன்ற கட்சியின் தலைவரரான டி.ஆர்.பாலுவை அழைத்துசென்ற தலைவரின் முடிவுதான் சரியானது என்றும் கூறினர்.
பொய் சொன்னார் முதல்வர்? முழு பூசணிக்காயை சோற்றில் மறுத்தார் முதல்வர்
பிரதமரை சந்தித்து விட்டு வந்த கருணாநிதியை சந்தித்த ஊடகத்தாரை அவர் எப்படி ஏமாற்றினார் என்பது ஒரு பெரிய கதை. ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகையில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த முதல்வர் கருணாநிதி, தான் முந்திய நாள் ஏன் பிரதமருடன் ஒப்புக்கொண்ட சந்திப்பை ரத்து செய்தார் என்ற கேள்விக்கு, தான் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், அதில் பேச்சாளர்கள் பட்டியல் அதிக நீளமாக இருந்ததாகவும் அதனால் தான் அங்கிருந்து பிரதமரை வரவேற்கவும் சரி, அவரை சந்தித்து பேசவும் சரி செல்லமுடியவில்லை என்று ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். வைரமுத்துவின் ஆயிரம் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பேசி முடிக்கும்போது ஆண்டின் இரண்டாம் நாள் இரவு ஏழரை மணி. விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க முதல்வர் செல்ல வேண்டிய மரபுவழி பணி என்பது இரவு ஏழே முக்காலுக்கு. வைரமுத்து விழா நடந்த லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து விமான நிலையம் செல்ல முதல்வரின் வாகன வரிசைக்கு ஐந்து நிமிடம்தான் எடுக்கும். அதன்பிறகு பிரதமர் ஆளுநர் மாளிகைக்கு வந்தபிறகு முதல்வர் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்ப்பட்ட நேரம் எட்டே காலில் இருந்து எட்டே முக்கால் வரை. அந்த ஆளுநர் மாளிகைக்கும் லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து செல்ல ஐந்து நிமிடம் கூட எடுக்காது. ஆகவே கருணாநிதி திட்டமிட்டு இரண்டு சந்திப்புகளையும் தவிர்த்திருப்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.ஆனாலும் தனது திடீர் முடிவால் கூட்டணியும் பாதிக்கும், ஆட்சியையும் பாதிக்கும் என்று அறிவுரை கூறிய மகனின் கருத்தை ஏற்று தனது முடிவை மறுபரிசீலனை செய்த கருணாநிதிதான் அடுத்த நாள் அதாவது ஆண்டின் மூன்றாம் நாள் பிரதமரை ஆளுநர் மாளிகையில் சந்தித்திருக்கிறார். அதை அப்படியே ஊடகத்தாரிடம் மறைக்க முயன்று தோற்றுப்போனார் என்பதுதான் அன்று நடந்த கூத்து. இரவு முழுவதும் தெருக்கூத்து நடக்கும் என்று சென்னை சங்கமம் பற்றி அறிவித்த மகளின் சொல்லை, அன்று இரவே ஒரு சிறிய தெருக்கூத்தை நடத்தி கான்பித்திவிட்டார் போலிருக்கிறது அவரது தந்தை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment