Friday, January 7, 2011
ஆண்டையும், அரசும் சேர்ந்தால்
42 ஆண்டுகளுக்குப் பிறகு, கீழவெண்மணியில் எரிந்த நெருப்பின் தீப்பொறிகள் பல்வேறாக அன்று வெடித்தன. டிசம்பர் 25ம் நாள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, குக்கிராமங்களைச் சேர்ந்த கூலி விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோர்களும், அன்றைய தஞ்சையும், இன்றைய நாகையுமான மாவட்டத்தில், கீவளூர் வட்டத்தில் தேவூர் அருகேயுள்ள வெண்மணி கிராமத்திற்குள் அணி திரண்டனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கிராமத்திற்குள் நுழையும் பாதையில், பல கடைகள் அமைத்திருந்தார்கள். சடங்காகவும், விழாவாகவும் ஆக்காமல் ஆண்டையும், அரசும் சேர்ந்து செய்த படுகொலைக்கு எதிராக, நெருப்பாறு ஓடவேண்டும் என்ற புரட்சியாளர்களது பயணமும் அங்கே தென்பட்டது. பல பத்தாண்டுகளாக விவசாயத் தொழிலாளர்களது கூலி உயர்வுக்கானப் போராட்டத்தை கட்டமைத்து நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கின் கீழ், வெண்மணி தியாகிகள் நினைவிடமும், தியாக தீபத்தை நினைவுச் சுடராக வடித்ததும், அந்தக் கிராமத்தில் நடுநாயகமாக திகழ்ந்தது. சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வந்து கொண்டிருந்தனர். சிபிஎம் தலைமையிலான சிஐடியூவினர் தங்களது நீதி திரட்டலின் மூலம் கட்டப்பட்டு வரும் மாபெரும் நினைவுக் கூடத்தைத் தோழர்கள் வெளியூர்காரர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர். புதிய தமிழகம் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார். தொண்டர்கள் மண்ணுரிமை மீட்க தன்னுயிரை தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று முழக்கமிட்டனர். டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் நிலமற்ற ஏழைகளாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு விவசாயம் செய்ய 2 ஏக்கர் நிலம் வழங்கி, கொடுத்த வாக்குறுதியை கருணாநிதி அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது டாக்டர் கூறினார். அதற்காக, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி மண்ணுரிமை மாநாடு என்றும் அறிவித்தார். சிபிஎம் தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2 புத்தக வெளியீடுகளும், அதை வெளியிடுவதற்கான மேடையும் வெண்மணியில் அமைக்கப்பட்டிருந்தது. சிபிஎம் மாநிலச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வெளியிட, இமானுவேல் பேரவை சந்திரபோஸ் அதை பெற்றுக்கொண்டார். மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக்கின் மூலம் பேச்சாளர்கள் பேசுவார்கள் என்று தோழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிபிஎம் எடுத்த அரசியல் நிலைப்பாட்டிற்கு மாறுபட்டு சந்திரபோஸ் பேசி விடுவாரோ என்ற அச்சத்தில் மேடை நிகழ்ச்சியில் யாரும் பேசாமலேயே நன்றி கூறி முடித்துக் கொண்டனர். அதுபற்றி நான் சந்திரபோஸிடம் கேட்டபோது, வர்க்கப் போராட்டமாக கூலி உயர்வுப் போராட்டத்தை சிபிஎம் நடத்தி வரும்போது, அதில் அனைத்து சாதிகளைச் சேர்ந்த கூலி விவசாயிகளும் இருந்தனர். ஆனால் பண்ணையார்களோ, இது சாதி கட்டுமானம் கொண்ட சமூகம் என்பதை உணர்த்தும் வகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் மட்டுமே தாக்கப்பட்டு, அவர்கள் மட்டுமே எரிக்கப்பட்டனர். அதனால், சாதியும் வர்க்கமும் இணைந்தே இந்த இடத்தில் ஆதிக்கவாதிகளால் தாக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கருத்தை நம்மிடம் கூறிய தோழர் சந்திரபோஸ், வாய்ப்பு கொடுத்திருந்தால் இதே கருத்தை அங்கே வலியுறுத்துவதாக இருந்தேன் என்று கூறினார். பேச்சாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் திடீரென்று தவிர்த்த சிபிஎம்யின் நடைமுறையைக் கண்டித்து தோழர்களிடம் பேசிவிட்டு வந்ததாகவும் கூறினார். அஞ்சலி செலுத்த வந்திருந்த புரட்சியாளர்கள் சிலர், சிபிஎம் கட்சிக்கு லாபகரமாக, “ராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படத்தை எடுத்து, அதில் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட தண்டனையை புரட்சியாளர்கள் கொடுத்த உண்மையை கொச்சப்படுத்திவிட்டார்கள் என்றும் கோபப்பட்டார்கள். அதையெடுத்த இயக்குநரை பாரதி கிசும்புக்குமார் என்று நக்கலடித்தார்கள். 1968ம் ஆண்டு கீழவெண்மணியில் நெருப்பில் இடப்பட்ட 44 உயிர்களும், ஒரு உண்மையை உலகிற்கு உரத்து கூவின. ஆண்டையும், அரசும் சேர்ந்துதான் கூலி விவசாயியை எதிர்த்து நிற்கிறது. கூலி உயர்வு போராட்டத்தை நடத்தியவர்கள், அதில் ஆண்டையைப் பார்த்துவிட்டு, அரசை விட்டுவிட்டால் வர்க்கப் போராட்டத்தில் உழைப்பவர் பக்கத்தில் சாம்பலே மிஞ்சி நிற்கும். எதிரி எடுக்கின்ற ஆயுதத்தை, உழைப்பவர்கள் கையிலெடுத்தால் கூலி போராட்டமும், விடுதலை போராட்டமாக வீறுகொண்டு எழும். மேற்கண்ட வகையில் பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்களுடனும், வெண்மணி தியாகிகளின் நினைவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நூறு பூக்கள் மலரட்டும்; நூறு விதமான கருத்துக்கள் உதிக்கட்டும் என்ற மாசேதுங்கின் மேற்கோள் தான் நமக்கு நினைவுக்கு வந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment