Friday, January 7, 2011

பணியிடத்தில் பாலியல் வன்முறை!

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒரு சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் சில விஷயங்கள் உரிய முறையில் எழுதப்படவில்லையெனவும் அவை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் மேலும் சில விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டுமெனவும் பெண்கள் அமைப்பினர் கருதுகின்றனர். இல்லையெனில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். இச்சட்டத்தின் 14வது பிரிவு தவறான, தீயநோக்கம் கொண்ட புகார் அளிக்கும் பெண்களைத் தண்டிப்பது பற்றிக் கூறுகிறது. இந்த நாட்டில், பாலியல் வன்கொடுமைக்கெதிராகப் புகார் செய்வதென்பதே அரிதினும் அரிது. அச்சத்தினாலும் சில தவறான கருத்துக்களினாலும் பாதிக்கப்படும் பெண்களில் மிகச்சிலர் தான் புகார் கொடுக்க முன்வருகின்றனர். சமூக யதார்த்தம் இவ்வாறிருக்கையில் பெண்களைப் பாதுகாப்பதற்கு என்று சொல்லி கொண்டுவரப்படும் இந்தச் சட்டத்தை பெண்களுக்கு எதிரானதாக இந்த 14வது பிரிவு ஆக்கிவிடுகிறது. மேலும் தவறான புகார் அளிப்பவரைத் தண்டிப்பதற்கு தான் வேறு சட்டம் ஏற்கனவே இருக்கிறதே. எனவே இப்பிரிவினை நீக்கிவிட வேண்டும். இந்தச் சட்டம், அமைப்பாக்கப்படாத பெண் தொழிலாளர்களைக் கவனத்தில் கொள்கிறது. ஆனால் வீட்டுப்பணிகள் செய்யும் பெண்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வீட்டுப்பணி செய்யும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் பற்றி ஷைனி அஹுஜா வழக்கு நன்றாக உணர்த்துகிறது. எனவே ‘பணியிடம்’ என்பதில் ‘வீடு’ என்பதும் ‘வசிப்பிடம்’ என்பதும் சேர்க்கப்பட வேண்டும். மாணவியர் மற்றும் நோயாளிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டால் அவர்களும் புகார் அளிக்கும் விதத்தில் ‘பணியிடம்’ என்பது வரையறை செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 15, இழப்பீடு பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால் இழப்பீட்டை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. குற்றவாளிக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என்று பிரிவு 25 கூறுகிறது. அபராதம் மட்டும் போதுமானதல்ல, சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வருங்காலத்தில் நேரக்கூடிய பணியிழப்பு, பணிநிலை உயர்வு இழப்பு போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் சட்டப்பிரிவு இச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மேலும் சேர்த்தல்களும் செழுமைப்படுத்தல்களும் இச்சட்டத்தில் தேவைப்படுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து பெண்கள் அமைப்புகளின் தலைவர்கள், பிரபலமான பெண் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் விவாதத்திற்கும் பரிசீலனைக்கும் சுற்றுக்கு விடப்பட்டு தேசிய அளவில் பெண்கள் ஆய்வு செய்து விவாதித்து அதன் மூலம் இந்தச் சட்ட முன்வடிவு உருவாக்கப்படுவது தான் முழுமையானதாகவும் முறையானதாகவும் இருக்கும். அதை விடுத்து, அரசுக்கு ஏன் இந்த அவசரம்? நோக்கமே நீர்த்துப் போய்விடுகிறதே!

No comments:

Post a Comment