ஸ்டாலினை கவிழ்க்குமா நெல்லை திமுக?
திருநெல்வேலிக்கு திமுகவின் துணைப்பொது செயலாளர் மு.க.ஸ்டாலின் சென்றார். எல்லா தென்மாவட்டங்களையும் போல, நெல்லை திமுகவும் தலைமையில் உள்ள கோஷ்டிகளால் பிளவுப்பட்டு நிற்கிறது. நெல்லை மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஸ்டாலின் கோஷ்டியைச் சேர்ந்தவர். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, அழகிரி கோஷ்டியைச் சேர்ந்தவர். அமைச்சர் பூங்கோதை, கனிமொழி கோஷ்டியைச் சேர்ந்தவர். கருப்பசாமி பாண்டியன் கூட்டுகின்ற மாவட்ட கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு, அழகிரி கோஷ்டியின் தானைத்தலைவர் மாலைராஜா, ஆரம்பம் முதலே வருவதில்லை. நெல்லை மேயர் ஏ.எல்.சுப்ரமணியன், முறையாக மாவட்டச் செயலாளர் கூப்பிடும்போதெல்லாம் வந்துவிடுவார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான டி.பி.எம். மைதீன்கான், தொடக்கம் முதல், நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கருப்பசாமி பாண்டியனின் அலுவலகத்திற்கு வந்து ஆஜராகிவிடுவார். அந்த அமைச்சருக்கு அதனால் “முறைவாசல்” என்று பெயர். இப்படிதான் வழமையாக, கோஷ்டி முறைகள் போய் கொண்டிருந்தன. சமீபத்தில் கோஷ்டி சண்டையில் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன. தென்மண்டலத்திலும், தன் அதிகாரத்தை நிறுவிக்கொண்டதாக கருவிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் நெல்லை வந்தார். அதற்கான, ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தார். மேயர் பயந்துபோய் கலந்துகொண்டார். பூங்கோதை வேறு கோஷ்டி என்பதால் வரவில்லை. மாலைராஜா வழக்கம்போல் வரமாட்டார். முறைவாசலாக இருந்த அமைச்சர் மைதீன்கானுக்கு என்ன வந்துவிட்டது? “க”னா அழைப்புக்கு காணõமல் போய்விட்டார். விசாரித்தோம். ஓராண்டாகவே கைலாசபுரத்திற்கு மைதீன்கான் வருவதில்லை என்றார்கள். கங்கைகொண்டான் வட்டாரத்தை மாசுபடுத்தும் கோகோ கோலா நிறுவனம் கொடுத்த “நன்கொடை”யில், சுற்றுச்சூழல் அமைச்சர், “க”னாவிற்கு பங்கு கொடுக்கவில்லை என்பதால், மாவட்டம் கோபப்பட்டதாம். எத்தனை பேருக்குத்தான் மேலே உள்ளவர்களுக்கு பங்கு கொடுப்பது என்று அமைச்சர் நொந்துகொண்டாராம். அதனால் தான் ஓராண்டாக வரவில்லை என்றார்கள். ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில், பாளையங்கோட்டை தொகுதியில் தளபதி நிற்கவேண்டும் என்று சுப.சீத்தாராமன் மூலம் மாவட்டம் சொல்ல வைத்தார். இது மைதீன்கானுக்கு கொடுத்த ஆப்பு என்றார்கள். மாலைராஜாவுடன் சேர்ந்துகொண்டு, மைதீன்கான் அழகிரி கோஷ்டியிடம் சேர்ந்துவிட்டார். அழகிரியும் மைதீன்கான் பேத்தி திருமணத்திற்கும் வருகைப் புரிந்தார். மாவட்டமும் பெயரளவிற்கு விளம்பரம் கொடுத்து கொண்டார். ஆனால், கோஷ்டி சண்டை முறுக்கேறி வருகிறது என்பது தான் உடன்பிறப்புகளின் படப்பிடிப்பு. ஸ்டாலினை தெற்கே நிற்க வைத்தால், தென்மண்டல செல்வாக்கும் திசைமாறும் என்பது ஒரு கணக்கு. பாளையங்கோட்டை தொகுதிக்குள் மேலப்பாளையம் வருகிறது. சிறுபான்மை முஸ்லிம்கள் வாக்குகளும், தேவர்கள் வாக்குகளும், தேவேந்திரர் வாக்குகளும் தொகுதி வெற்றியை தீர்மானிக்கும். அதனால் திமுகவிற்கு சிறிதளவுகூட வாய்ப்பில்லை. அப்படியானால், ஸ்டாலினை கவிழ்க்கத்தான் இந்தத் திட்டமா என்று எதிர்தரப்பு பேசுகிறது. மைதீன்கான் நின்றால் முஸ்லிம் ஓட்டுக்களை கூட பெறமுடியாத சூழலில், டெப்பாசிட் இழப்பது உறுதி என்று “க”னா கோஷ்டி கூறுகிறது. மாலைராஜாவிற்கும் நெல்லை தொகுதியில் அதே நிலைதான் என்பது திருத்து ஊரைச் சேர்ந்த மாவட்டத்தின் கணிப்பு. எப்படியோ, நெல்லை திமுகவிற்குள் இருக்கும் குழப்பங்கள், பகிரங்கமாக வெளியே வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்கள் பதிவுகளுக்கு என்றும் நன்றியன்.
நா. கணேசன்
Post a Comment