Thursday, July 29, 2010

மனித கௌரவமும், மனித சோகங்களும்.

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது தவறு என்றும், அதே போல கழிவு ஒடைகளில் உழைக்கும் மக்களை இறக்கிவிட்டு ஆபத்துகளை எதிர்கொள்ளவிடுவது பிழையானது என்றும், இந்திய நாட்டின் தேசிய மனித உரிமை ஆணையமும், பல்வேறு நீதி மன்றங்களும் கூறியுள்ளன. ஆனாலும் கூட இந்த நாட்டில் நிலவுகின்ற சாதி பாகுபாடும், தீண்டாமை இழிவுபடுத்தல்களும், மனிதர்களை அது போன்ற பணிகளில் நிர்பந்தித்துவருகிறது. அவ்வாறு செய்வது மனித கௌரவத்தை கேள்வி கேட்கின்ற ஒரு போக்கு என்று மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்துப் போகின்றனர்.
ஏற்கனவே மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடிய வேலைகளை தடை செய்யக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தது. இந்திய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் அது போன்ற செயல்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்று ஆணையிட்டது. அதை அமுல்படுத்தாத ரயில்வே துறையை கடுமையாக ஆணையம் கண்டித்தது. அதே போல கழிவு நீர் சாக்கடைகளில் பூமிக்குள் இறங்கி பணியாற்றச் செல்லும் தொழிலாளர்கள், கழிவுகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களால் தாக்கப்பட்டு, மரணமடைகின்ற நிகழ்ச்சிகளும் நாடெங்கிலும் நிகழ்ந்து வருகிறது. இத்தகைய கொடூரமான செயலை செயல்படுத்திவரும் அரசாங்கத் துறைகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. கழிவு நீர் சாக்கடைகளில் கொல்லப்படுகின்ற தொழிலாளர்கள் பற்றிய சோகச் செய்திகளும் ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் இது போன்ற நிலைமை தொடர்கிறது. கழிவு நீர் சாக்கடைகளில் இதுவரை தமிழ்நாட்டில் மரணமடைந்த தொழிலாளர்களது எண்ணிக்கை 1000த்தை தாண்டும். மரணம் மட்டுமின்றி அத்தகைய தொழிலாளர்கள், கழிவு நீர்களுடனேயே கலந்து வாழ்வதால், பல விதமான தோல் நோய்களுக்கு உள்ளாகிறார்கள். அதன் மூலம் விரைந்து மரணத்தை பலர் சந்திக்கிறார்கள். பலர் நேரடியாக அரசாங்கம் மூலமாகவும், சிலர் தனியார் ஒப்பந்தகாரர்கள் மூலமாகவும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது.
சுகாதாரத் தொழிலாளர்கள் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களை, இப்படிப்பட்ட பணிகளில் நகராட்சிகள் ஈடுபடுத்துகின்றன. உதாரணமாக திருச்சி மாநகராட்சி இத்தகைய பணிகளுக்கு ஒப்பந்தகாரர்களிடம், கழிவு நீர் குழாய்களை பராமரிக்கும் வேலையை கொடுத்துள்ளது. அதில் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். திருச்சியில் உள்ள செந்தண்ணீர்புரம் என்ற இடத்தில் ஒரு கழிவு நீர் கிடங்கு உள்ளது. அதில் ஜுன் மாதம் 21ம் நாள் 2 தொழிலாளர்கள் வேலைச் செய்யும் போது, நச்சு வாயு தாக்கி மரணமடைந்துவிட்டனர். வேலையில் ஈடுப்பட்ட போது கீழ் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் சேறு படிந்திருந்தது. அவர்கள் வாயிலிருந்து ரத்தமும், திரவமும் வழிந்தது. மேற்கண்ட பரிதாபமான நிலைமை படங்களுடன் ஊடகங்களில் வெளிவருகிறது. இது போல எத்தனையோ விபத்துகள் சென்னையிலும் மற்ற மாநகராட்சிகளிலும் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனைதான் ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கத்தினாலும், மாநகராட்சி தரப்பினர் அசைவதாகவே இல்லை.
ஒவ்வொரு விபத்து நடக்கும் போதும், அரசுதரப்பு அதிகாரிகள் இனிமேல் கருவிகளைத் தான் கழிவு நீர் அகற்றலுக்கு பயன்படுத்துவோம் என்று ஊடக நேர்காணல்களில் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. 1993ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை மீறித்தான் அரசுத் துறைகள் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. 2008ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய வேலைகளுக்கு எதிராக ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதை மதிக்காமல் திருச்சி மாநகராட்சி தொழிலாளர்களுக்கு முழுகால்சராய், பாதுகாப்பு கவசங்கள், முகமூடிகள், பிராணவாயு குழாய்கள் ஆகியவற்றை அளிக்காமல் வேலைக்கு அனுப்பியுள்ளது.
மேற்கண்ட ஆணையை ஒட்டி 2009ம் ஆண்டு ஜுன் 16ம் நாளும், ஜூலை 10ம் நாளும், ஜூலை 24ம் நாளும், ஆகஸ்ட் 8ம் நாளும் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், தொடராணைகளை சட்டப் பிரிவு226,215 ஆகியவற்றின் கீழ் கொடுத்துள்ளது. அத்தகைய ஆணைகளை தமிழ்நாடு அரசின் நகராட்சி நிறுவாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை செயலாளர் கவனமாக எடுத்திருந்தால், மேற்படி விபத்துகளை தடுத்திருக்கலாம். அதேபோல சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரும் மேற்கண்ட உயர்நீதிமன்ற ஆணைகளை கவனத்துடன் அமுலாக்கியிருந்தால், விபத்துகள் தவிர்க்கப்படும்.
மேலே கூறப்பட்ட அரசுத் துறைகள், நீதிமன்ற ஆணையை மீறியதாக 2009ம் ஆண்டு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அதன்பிறகே மேலே கூறிப்பிடப்பட்ட 5 ஆணைகள் அதே ஆண்டில் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது. அதன் மீது நீதிமன்றம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட சென்னை பெருநகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரை தலைவராகப் போட்டு, ஒரு சிறப்பு குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. அந்த சிறப்பு குழு கழிவு நீர் குழாய் பராமரிப்பில் மேம்பாட்டை கொண்டுவந்து, மனிதர்கள் அந்த பணியில் பாதுகாப்பின்றி ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் வழிகாட்டலாக இருந்தது. அந்த சிறப்பு குழுவில் இத்தகைய வழக்கை தொடுத்தவரும் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
சுகதார தொழிலாளர்களை இத்தகைய கழிவு நீர் சாக்கடைகளுக்குள் நுழையவிடுவதை தடைச் செய்து கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் குறிப்பிடப்பட்ட சிறப்பு குழு 4 கூட்டங்கள் வரை கூட்டப்பட்டும், வழிகட்டல்கள் அமுலாக்கப்படவில்லை என்ற விமர்சனத்துடன் மீண்டும் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. அதற்கு ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் தெளிவான அறிக்கையை முன் வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கண்ட நீதிமன்ற விசாரணைகளும், வழிகாட்டல்களும் நமக்கு ஒன்றை உறுதியாக தெளிவுப்படுத்துகிறது. அதாவது எத்தனைச் சட்டங்கள் போட்டாலும், அவற்றை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மனிதர்கள் அதாவது அதிகாரிகள் அந்த சட்டங்களை கிரகித்துக் கொண்டால் தான், சிரமேற்றால் தான் அமுல்படுவார்கள் என்ற உண்மை தெளிவாகிறது. சமூகத்தில் சாதி வேறுபாடுகளும், சாதி இழிவுபடுத்தல்களும் இருப்பதனால், வேலைகளிலும் சிலவற்றை இழிவானவை என்று கருதும் போக்கு உள்ளது. உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத வேலைகளை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கும் போக்கும் நிலவுகிறது. அதனால் அத்தகைய தொழிலாளர்கள் மீது, ஆதிக்க மனோபாவம் கொண்ட அதிகாரிகளுக்கு அக்கறை இருப்பதில்லை. இத்தகைய பொறுப்பற்ற அதிகாரிகளின் போக்கை, சாதி மனோபாவமாக பார்த்து அதன் மீது அல்லது அவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகைய அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் அப்பாவி தொழிலாளர் உயிரை மட்டும் பறிக்கவில்லை; நீதிமன்ற அவமதிப்பு மட்டும் செய்யவில்லை; சமூக ரீதியான வன்முறையாகவும் காணப்பட வேண்டும். ஆகவே அவை தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையை கோரி நிற்கிறது.

Wednesday, July 28, 2010

மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டால், ஆயுதப் போரா?

சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும் ஒரு நீண்ட பயணம் என்பதாக வருகிற ஆகஸ்ட்15ம் நாளுக்காக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது கொல்கத்தாவிலிருந்து லால்கர் நோக்கி என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக சேவகர் மேதாபட்கர், கொத்தடிமை விடுதலை முன்னணியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளனர். இது அறவழியில் மக்களை அணிதிரட்டி நடத்தப்பட இருக்கின்ற ஒரு போராட்டம் என்பது புரிகிறது. இந்தியாவில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகள் இது போன்ற பல்வேறு மக்கள் போராட்டங்களை கோரி நிற்கின்றன.
ஐ.நா. சபை சமீபத்தில் வறுமை பற்றி கொடுத்த ஒரு புதிய புள்ளி விவரத்தில் 28 ஏழ்மைமிக்க ஆப்ரிக்க நாடுகளை விட, 8 இந்திய மாநிலங்கள் வறுமையில் அதிகமான மக்களை தள்ளியுள்ளன என்பதாக கூறியுள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய மக்கள் தொகையில் 38 விழுக்காடு ஏழ்மையில் உழல்கிறார்கள் என்று ஒரு செய்தி. தெற்காசியாவில் தான் உலகிலேயே ஏழ்மை மக்களில் பாதி பேர் வாழ்கிறார்கள் என்று ஒரு செய்தி. பீகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ஓரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 4 கோடியே 21 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பீகார் மாநிலத்தில் 81 விழுக்காடு ஏழை மக்கள். டெல்லியில் 15% ஏழைகள். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்படும் மக்கள், போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கை தான்.
மற்ற மாநிலங்களை விட 43 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய நாடாளுமன்ற இடது சாரி கட்சியின் ஆட்சி நடைபெறும் மேற்குவங்கத்தில் இந்த நிலைமை தொடர்வதற்கான காரணம் என்ன? மேற்குவங்கம் மாநிலத்தில் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடப் புறப்பட்ட மக்கள் இயக்கங்களை அரசு அனுமதித்ததா? அல்லது அடக்குமுறை செய்து நசுக்கியதா? சமீபத்தில் மேற்கு மிகினாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் வட்டார தளபதி சிதுசோரன் மற்றும் 5 பேரை காவல் துறை படுகொலைச் செய்தது. அதை வெளியிட்ட அரசு, காவல் துறையின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் குழுவின் சிதுகானு மக்கள் தொண்டர்கள் என்ற போராட்ட முன்னணியை சேர்ந்தவர்கள் என்று கொல்லப்பட்டவர்களை வர்ணித்தது. அதாவது பிரபலமான மக்கள் திரள் அமைப்பை சேர்ந்தவர்களை, மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் கொலைச் செய்ததை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு போராடும் மக்களமைப்புகளை நசுக்குவதும், அதன் முன்னோடிகளை கொலைச் செய்வதும் ஒரு அரசாங்கத்தின் வாடிக்கையாக இருப்பதனால் தான், போராட்ட முன்னோடிகளும், இளைஞர்களும் ஆயுதப் போராட்ட பாதையை நோக்கி செல்கிறார்கள் என்பதற்கு இதை விட போதுமான ஆதாரம் கிடைக்காது.
43 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை ஆளுகின்ற மார்க்சிஸ்ட் கட்சி, தனது கொள்கைகளை, மக்கள் ஜனநாயக புரட்சி என்று பரப்புரை செய்து, லட்சக்கணக்கான ஊழியர்களை திரட்டி வைத்திருந்தது. 1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சமரசவாதமாக செல்வதாக குற்றம் சாட்டி, புதிய கட்சியை சி.பி.எம். என்ற பெயரில் தொடங்கியது. அந்த கட்சி மக்களை திரட்டி புரட்சியை நடத்தப் போவதாக ஊழியர்கள் நம்பினார்கள். ஆனால் தன்னால் குற்றம் சாட்டப்பட்ட இ.க.க. தலைமையை போலவே தானும் சமரசவாத பாதைக்கு சென்றது. அதையொட்டியே 1967ல் டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் விவசாய புரட்சியை சாரு மஜும்தார் தொடங்கி வைத்தார். 1972ம் ஆண்டு அவரை ஜூலை 16ம் நாள் கைது செய்த மே.வங்க காவல் துறை ஜூலை 28ம் நாள் சிறையிலேயே மரணமடையவைத்தது. அதனால் தான் அவர் நினைவில் ஜூலை 28ம் நாளை புரட்சியாளர்கள் தியாகிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறார்கள். இப்போதும் மாவோயிஸ்டுகள் அதை அறிவித்துள்ளார்கள்.
சாருமஜும்தாரை திரிபுவாதத்திற்கு பதிலடி கொடுத்தவராக புரட்சியாளர்கள் பார்க்கிறார்கள். சி.பி.எம். கட்சி முன் வைத்த நாடாளுமன்ற பாதைக்கான ஐக்கிய முன்னணியை மறுத்து, மாவோ கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணியை முன் வைத்தார் என்கிறார்கள். இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற சி.பி.எம்.மின் வாதத்தை மறுத்து, பொருளாதார சுதந்திரம் கிடைக்காமல், அரசியல் சுதந்திரம் கிடைக்காது என்ற வாதத்தையும் சாருவிடமிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவை ஆள்வது பெருமுதலாளிகள் என்ற மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீட்டை மறுத்து, தரகுமுதலாளிகள் ஆள்வதாக சாரு கூறியதை ஏற்றுக் கொள்கிறார்கள். மாவோவின் மக்கள் போர்ப் பாதை, கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகர்ப் புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்வது தான் என்ற சாருவின் கொள்கையை பின்பற்றுகிறார்கள். இவ்வாறு சாருமஜும்தாரை தங்கள் வழிக்காட்டியாக கொண்டதால் தான், இந்திய புரட்சியாளர்கள் அவரது நினைவு நாளை, தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
அறவழியில், அமைதிப் பாதையில் மக்களைத் திரட்டி போராடக் கூடிய மக்கள் திரள் இயக்கங்களை முத்திரைக் குத்தி, அடக்குமுறை செய்வதனால் தான் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப்பாதைக்கு ஈர்க்கப்பட்டுள்ளார்கள். அது தான் இப்போது மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட படுக் கொலைகளிலும் நடந்துள்ளது. அதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சி 43 ஆண்டுகளாக ஆண்டு வரும் மாநிலத்திலும், வறுமை இன்னமும் தாண்டவமாடுகிறது. ஆகவே வன்முறையை கைவிட்டு, நன் முறையில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க கோரும் நீண்ட பயணம் பிரபலமாக எதிர் பார்க்கப்படுகிறது.
அவ்வாறு லால்கர் நோக்கி புறப்படுங்கள் என்ற மேதாபட்கரின், சுவாமி அக்னிவேஷின் நீண்ட பயணம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது. மக்களது வாழ்க்கைக்கும், அந்தஸ்த்திற்கும் உள்ள உரிமை என்பது எப்போதும் மனிதத் தன்மையற்ற வழிகள் மூலம் நியாயப்படுத்தப்பட முடியாது என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். வன்முறைக்கு முடிவுக் கட்டுவோம் என்கிறார்கள்.
நிலம், தண்ணீர், காடுகள், கனிமவளங்கள் ஆகிய மூலாதாரங்களை பெறுவதற்கான உரிமை மக்களுக்கு, குறிப்பாக ஆதிவாசி சமூகங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, ஆதிவாசிகளின் மூலாதாரங்களை தாரைவார்க்க சுடாது. லால்கர் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். வளர்ச்சி என்பது சமத்துவம், நீதி, ஜனநாயக முறை ஆகியவற்றின் மூலம் தான் எட்டப்பட முடியும். மக்களுக்காக அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். 1996ன் பஞ்சாயத்துச் சட்டம், வனச்சட்டம் ஆகியவை அமுல்படுத்தப்பட வேண்டும். மக்கள் போராட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை இந்த அமைதி வேண்டுவோர் முன் வைக்கிறார்கள்.
இதே கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் மக்கள் இயக்கங்களை அரசு ஒடுக்கும்போது தானே, இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கும் வழியை தேர்வுச் செய்கிறார்கள்? இந்த முறை மேற்குவங்க அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமா? அல்லது தன்னை தூக்கியெறிய மக்களை தூண்டிவிடுமா? இதுதான் இன்றைய கேள்வியாக எழுகிறது.

Tuesday, July 27, 2010

ஜூலை-28 தியாகிகள் தினம்.

இந்திய புரட்சியின் தானைத்தலைவர், தத்துவ வழிகாட்டி, வசந்ததத்தின் இடிமுழக்கத்தை நக்சல்பாரி கிராமத்தில், விதைத்த புரட்சியாளன், மார்க்சிசத்தை திரித்த திரிபுவாதத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்த புதிய பூகம்பம், எட்டு கட்டுரைகள் மூலம் திரிபுவாதத்தின் அனைத்து முகங்களையும் அம்பலப்படுத்திய அரசியல் புயல், இந்தியாவின் இளைய தலைமுறைக்கு எழுச்சியை ஊட்டிய வங்காள சிங்கம், இளம் தலைமுறையினரை தியாகம் செய்ய ஊக்குவித்த உணர்வு ஏந்தல், எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த வரலாறு, தோழர் சாருமஜூம்தார், இந்த நாளில்தான் வங்காள சிறையில் எதிரிகளின் சதியால் படுகொலை செய்யப்பட்டார். அதனால்தான் எங்களுக்கு இன்று தியாகிகள் தினம். அன்று சாரு எழுதிய திரிபுவாத எதிர்ப்பு எழுத்துக்கள், எங்களுக்கு நாடாளுமன்ற இடதுசாரிகளின் திரித்தல் வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டின. அன்று மாவோவின் போர்த்தந்திரங்களை, அப்படியே மாற்றி தேர்தல் களத்தில், பங்களா காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்காக அதுதான் மாவோ சொன்ன ஐக்கியமுன்னணி தத்துவம் என திரித்து சொன்ன இடது சொரியர்களை அம்பலப்படுத்திய பதிவுகளில், சாருவை கண்டோம். இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டது என பொய்யான செய்தியை கூறி, தோழர்களை ஏமாற்றி வைத்த இடதுசாரிகளை அமபலப்படுத்தி, பொருளாதார சுதந்திரம் கிடைக்காமல் அரசியல் சுதந்திரம் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பியவர் சாருமஜூம்தார். இது அரைக்காலணி நாடு என்பதை எடுத்து சொன்னதில், நாங்கள் சாருவை கண்டோம். இந்தியாவில் உள்ளது நிலபிரபுத்துவ மிச்ச சொச்சம் என்று சொன்ன நாடாளுமன்ற இடதுகளை எதிர்த்து, அரை நிலபிரபுத்துவம் இருப்பதை அமபலப்படுத்தி எங்கள் கண்களை திறந்தவர் சாருமஜூம்தார்.
இந்திய முதலாளிகள் சுதந்திரமான பெருமுதலாளிகள் என்று சொல்லி எங்களை குழப்பிய நாடாளுமன்ற இடதுகளின் குழப்பவாதத்தை உடைத்தெறிந்து, தரகு முதலாளிகள் இந்த நாட்டை ஆள்வதை எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்கள்
கண்களை திறந்தவர் சாருமஜூம்தார். மாவோ சிந்தனை மகத்தானது என்று எங்கள் சிந்தைகளை தெளிவுபடுத்தி, புரட்சிக்கு வழிகாட்டியவர் சாருமஜூம்தார். மார்க்சிய- லெனினிய- மா-சே-துங் சிந்தனை என்ற தத்துவ வழிகாட்டல்தான் நமது வழிகாட்டும் தத்துவம் என எங்களுக்கு புரியவைத்தவர் எங்கள் சாருமஜூம்தார். கிராமப்புறங்களை விடுதலை செய்து நகர்ப்புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்வதே மாவோவின் மக்கள் யுத்த தந்திரம் என எங்களுக்கு விளங்க வைத்தவர் சாருமஜூம்தார். நிலபிரபுத்துவ கட்டுமானத்தை பாதுகாக்கும் ஏகாதிபத்தியத்தை லெனினை காட்டி எங்களுக்கு விளங்கவைத்தார் சாருமஜூம்தார். ஏகாதிபத்தியத்திற்கு அடிமை வேலை செய்யும் தரகு முதலாளிகளை அம்மணமாக எங்களுக்கு அடையாளம் காட்டியவர் சாருமஜூம்தார். தத்துவ வழிகாட்டல் மட்டுமின்றி, போர்த்தந்திரத்தையும் கற்றுத்தந்தவர் சாருமஜூம்தார். மாவோவின் போர்த்தந்திரங்களை கற்று வந்த சாரு, எங்களிடம் கொரில்லா போரின் துவக்கத்தை எளிமையாக எங்கள் கிராமங்களில் பொருந்தும் நிலையில் பொருத்தி கூறினார். விளங்கிகொண்டோம். கொடுமை மிகு பண்ணையார்களை அழித்தொழிக்கும் கொரில்லா போரின் துவக்கத்தை எளிமையாக புரிய வைத்தார். அழித்தொழிப்பு இல்லாவிட்டால் எதிரியான எங்கள் ஊர் பண்ணையார்கள் எங்களை அழித்து, எங்கள் படையணியான கூலி மக்களின் முன்னோடிகளை அழித்துவிடுவர் என்ற யதார்த்த உண்மையை புரிந்து கொண்டோம். வர்க்கப்போரின் உச்சகட்டம் அது என அழகாக சாரு எடுத்து சொன்ன அறிவுரையை புரிய முடியா அறிவுஜீவிகள், கிராமத்தில் கூலி மக்களுடன் இணைய முடியாமல் ஓடி போனதையும் நாங்கள் கண்டோம். ஓடிபோனவர்கள் சாரு பற்றி புரிதல் இன்மையால், புரட்சி பற்றிய பயத்தின் காரணமாய், தியாகம் செய்ய அஞ்சி நடுங்கியதால், கிராமங்களை விட்டு, கூலி மக்களை விட்டு ஓடிச்சென்றனர். ஓடுகாலிகள் எப்போதுமே அதிகமாக நியாயம் பேசுவர். அதனால் எங்கு நோக்கினும் சாரு பற்றிய விமர்சனகளை அள்ளிவிட்டனர். அவதூறு செய்தனர். அது எல்லா நாட்டு புரட்சியிலும் நடக்கின்ற துரோக வரலாறுதான்.சாருவை நம்பியவர்கள், சாரு கூற்றை ஏற்றவர்கள், சாரு வரிகளை உணர்ந்து கொண்டவர்கள், அதை கிரகித்தவர்கள், புரட்சியில் நின்றார்கள். சாருவை தரித்தது தத்துவம் பேசியவர்கள், ஓடிச்சென்று சமரச பாதையில் பயணம் ஆனார்கள். மக்கள் திரள் அமைப்பு பற்றி பேசிவிட்டு மக்களை திரட்டாமலே எழுதியும், பேசியும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சாரு நடைமுறையின், நடைமுறைக்கான தத்துவம். அதை விளங்கிகொண்டவர் மட்டுமே புரட்சிகர வாழ்க்கையை தொடர முடிந்தது. 1972 ஆம் ஆண்டு ஜூலை பதினாறில், மேற்குவங்க அரசு சாருவை கைது செய்தது. பன்னிரண்டு நாட்கள் சிறையில் இருந்தவரை, இருபத்திஎட்டாம் நாள் கொலை செய்தது. இதுதான் அரச பயங்கரவாதத்தின் செயல்பாடு. அதனால் இந்த நாள் இந்திய புரட்சியின் தந்தை கொல்லப்பட்ட நினைவு நாள். அதையே இந்திய புரட்சியாளர்கள் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.

அமெரிக்கர்களைக் கொல்ல அமெரிக்கப் பணம்

2008ம் ஆண்டு ஆகஸ்ட் ஆவணம் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் பல ரகசியங்களை நியூயார்க் டைம்ஸ் இணையத்தளத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. இங்லாந்தைச் சேர்ந்த கார்டியன் ஏடும், ஜெர்மனைச் சேர்ந்த தெர் ஸ்பிகல் ஏடும் இதேபோல செய்திகளை அம்பலப்படுத்தியது. அவையெல்லாமே பாகிஸ்தான் அரசின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. ஆப்கானிஸ்தானிற்கு எதிராகவும், இந்தியாவிற்கு எதிராகவும் சதி செய்ததாக ஆவண ரகசியங்களை வெளியிட்டிருந்தன. அதில் ஆப்கான் போர் பற்றி 92,000 அமெரிக்க ராணுவ ஆவணங்களை வெளியிட்டிருந்தன. அவை அனைத்துமே ரகசிய ஆவணங்கள். ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்த ஒரு அதிகாரி, தாலிபன் அதிகாரியுடன் சேர்ந்து ஆப்கான் அதிபர் ஹமீது கார்சாயை கொலை செய்ய சதி செய்ததற்கான ஆவணமும் இருக்கிறது.
பாகிஸ்தான் அரசுக்கு நேச நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் ஆப்கான் போருக்கு பாகிஸ்தான் அரசின் உதவியையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த போர் தாலிபனை எதிர்த்த போராக இருக்கிறது. அதே சமயம் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை, ஆப்கானிலிருக்கும் தாலிபன் சக்திகளுக்கு உதவி செய்தால் அதுவே அமெரிக்க ராணுவத்திற்கு எதிரான செயலாக அமைகிறது. இவ்வாறு அமெரிக்க ராணுவத்திற்கு எதிரான சதிச் செயல்களையும், அவற்றை அமெரிக்க அரசின் நேச நாடான பாகிஸ்தான் அரசே தனது உளவுத்துறை மூலம் செய்ததையும், அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தையும் கண்டு, அமெரிக்க அரசின் வெள்ளை மாளிகை கொதித்துப் போய்விட்டது. ஆனால் அதை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்காரர்கள் அது வெளிப்படைத் தன்மை கொண்டது என்பதாகவும், அதீத ரகசியத்திற்கு எதிரான போராட்டம் என்பதாகவும் விளக்கமளிக்கிறார்கள்.
ஆப்கான் தலைநகரான காபூல் நகரில் 2008ம் ஆண்டு ஜூலை 7ம் நாள் இந்திய தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது. அதில் 58 பேர் மரணமடைந்தனர். போலந்து நாட்டின் உளவுத்துறை இப்படிப்பட்ட தாலிபன் தாக்குதல் நடக்கும் என்று முன்கூட்டியே கூறியதாக, வெளியான அமெரிக்க ராணுவ ஆவணங்கள் கூறிப்பிட்டுள்ளன. சரியாக தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு இத்தகைய செய்தி கூறப்பட்டதாம். உடனடியாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் துணை இயக்குனர் ஸ்டீபன் ஆர். காப்பஸ், பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு சென்று அத்தகைய தாக்குதலுக்கு உதவி செய்வதாக ஐ.எஸ்.ஐ. உடன் சண்டையிட்டதாக அந்த அமெரிக்க ராணுவ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய தாக்குதல் பற்றி இந்திய அரசுக்கு கூறப்பட்டதா என்பது பற்றி அதில் தகவல்கள் இல்லை.
இப்போது ஆவணங்களில் உள்ள ரகசியங்கள் பற்றி வாய் திறக்காத அமெரிக்க அரசு, ரகசிய ஆவணங்கள் கசிந்தது எப்படி என்று ஆய்வு செய்கிறதாம். அதற்காக ஒரு விசாரணை தொடங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இந்த அம்பலப்படுத்தும் வேலையை செய்ததாகவும் தெரியவருகிறது. ஆப்கானில் நடக்கும் போரில் பல அப்பாவி குடிமக்களை நேட்டோ படைகள் கொலைச் செய்துள்ளன என்றும், அவை வெளியிடப்படவில்லை என்றும் இந்த ஆவணங்களிலிருந்து அம்பலமாகியுள்ளது. மேலும் ஆப்கானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடும் தாலிபன்களுக்கு, பாகிஸ்தானும், ஈரானும் உதவி செய்துள்ளன என்ற ஆதாரங்களும் அதில் உள்ளது. நேட்டோ படைகளின் தாக்குதலில், 195 அப்பாவி ஆப்கான் மக்கள் அனாவசியமாக கொல்லப்பட்டனர் என்றும், 174 அப்பாவி மக்கள் காயமடைந்தனர் என்றும், மோட்டார் சைக்கிள் ஒட்டிய அப்பாவிகள் அல்லது ஒட்டுநர்கள் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்கள் என்றும் அது கூறுகிறது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நேவடாவிலிருந்து, ரிமோட் மூலம் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கை குழுவிற்கு பணிக்குழு 373 என்று பெயர். அவர்கள் பயங்கரவாதிகளை தாக்கும் போது, அப்பாவி மக்கள் பலரையும் கொலைச் செய்திருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளியாகி உள்ளது. முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள கூட்டு செயல்பாடுகள் பட்டியல் என்ற பெயரில் 2000 மூத்த தாலிபன் மற்றும் ஆல்கெய்தா காரர்களை அமெரிக்கா குறிவைத்தது என்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஈரான் அரசும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக செய்திகள் உள்ளன. 100 ஆப்கான் தாலிபன்கள், ஈரானிலிருந்து தற்கொலைப் படைகளாக தாக்குதலுக்கு ஆப்கான் சென்றனர் என்ற செய்தியும் அதில் உள்ளது. இந்த அம்பலப்படுத்தலை செய்த விக்கிலீக்சின் நிறுவனர் ஜூலியன் அஸாங்கே கூறுகையில், ஆயிரக்கணக்கான போர் குற்றங்கள், ஆப்கானில் இழைக்கப்பட்டுள்ளன என்றும் அவை நீதிமன்றம் முன்னால் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் இந்த ஆவணங்களில் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
போர்க் குற்றங்கள் பற்றி இலங்கையிலும், இந்தியாவிலும் விவாதங்கள் நடக்கின்ற இன்றைய சூழலில் இத்தகைய ஆவண அம்பலப்படுத்தல் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆப்கானில் உள்ள பயங்கரவாத்தை எதிர்த்து போராடுவதற்காகவே, அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு பில்லியன் டாலர் கொடுத்துவருகிறது. அந்த பணத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் அரசு தனது உளவுத்துறையின் மூலம் தாலிபன்களுக்கு கொடுத்து வருகின்றது என்ற செய்தி இப்போது அம்பலமாகின்றது. அதன் மூலம் ஆப்கான் போரில் அமெரிக்க ராணுவ வீரர்களை கொலைச் செய்வதற்கு, அமெரிக்க நிதியே உதவிகரமாக இருந்துள்ளது என்ற அதிர்ச்சி செய்தி உலகத்திற்கு தெரிந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் போர் தந்திர செயல்பாடுகள், மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளன என்பது வெளிப்படையாக தெரிவருகிறது.
அதில் இங்கிலாந்து ராணுவம் செய்த கேள்விக்குறிய துப்பாக்கிச் சூடுகளும் அம்பலமாகியுள்ளன. 2008ம் ஆண்டின் பிரான்ஸ் நாட்டு ராணுவம் ஆப்கானில் குழந்தைகள் பயணம் செய்த பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, 8 குழந்தைகளை காயப்படுத்தியதையும் இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. அதேபோல அமெரிக்க ராணுவம் பொது மக்கள் சென்ற பேருந்து மீது சுட்டு, 15 பயணிகளை கொலைச் செய்ததும் குறிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் ஒரு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குள் நுழைந்த போலந்து நாட்டு ராணுவம் சுட்டதில் பிரசவ வேதனையுடன் ஒரு பெண் உட்பட கொலைச் செய்யப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளது. 2007 அக்டோபர்நவம்பர் மாதங்களில் காபூலில் தெருக்களில் இங்கிலாந்து ராணுவம் கண்டபடிச் சுட்டதும் பதிவாகியுள்ளது. ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஆங்கிலேயர்கள் விசாரணையை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டதால், அமெரிக்க ராணுவம் உண்மைச் செய்திகளை பெற முடியவில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது.
மேற்கூறியது போன்ற ஆதாரபூர்வமான செய்திகள், அனைத்து நாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவதற்கான பல போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ள ஆப்கான் போரை நம் முன்னே வெளிப்படுத்துகின்றன. ஆயுத வியாபாரிகளை ஊக்குவிக்கும் நேட்டோ அரசுகள், ஆயுதம் தாங்கிய தாலிபன்களுடன் ஊடுருவி செயல்பட, பாகிஸ்தான் உளவுத்துறையை உற்சாகப்படுத்தினார்கள். அது தான் எரிகின்ற கொள்ளியை வைத்து தலையை சொறிந்து கொள்ளும் அணுகுமுறையின் எதிர் விளைவை இங்கே காட்டியுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போர் என்ற பெயரில், பணக்கார நாடுகள் அதிபயங்கரவாதிகளாக மாறியுள்ள வரலாறுதான் இது.

பெருசு சுறு, சுறுப்பு நாடகமா?

அவர் அடிக்கடி அங்கும், இங்கும்
ஒவ்வொரு நாளும் போய் வந்தாரே?
அவ்வளவு வேகமா வேலையா?
அசந்து கேட்டோம். ஆமாம் ஆனால்
என்று சம்பந்தப்பட்டோர் குரல்.
அதென்ன ஆனால்? அவ்வளவு
சுறு, சுறுப்புன்னு சொல்லிட்டீங்களே
அதுக்குதான். அப்படின்னா? நடிப்பா?
அய்யா. வயசாயி போச்சு, விலகுனு
அந்த ஒபக்கம் எழுதிச்சா? அதுக்கு
பதில்தர பொண்ணு கூட்டம் போட
அய்யா அங்கீகரிக்க, அப்போ தொடங்கி
இதுதான் பிரச்னை. அதனாலே.............
புது சட்டசபையா? தினசரி போய்
பார்க்க. அய்யா நீங்க வரும்போதெல்லாம்
இரண்டு மணி நேரம் வேலை செய்ய
முடியல்ல.. இந்த உண்மையை யாரும்
சொல்லல்லே. ..மூவாயிரம் தொழிலாளியும்
ஒவ்வொரு வருகையிலும் முடங்கி போனாங்க.
பெருசுக்கு புளகாங்கிதம். தினசரி அய்யா
பார்த்தாருன்னு பேபர்ல வந்திச்சே....
படத்தோட வந்த்திச்ச்சே. போதும்,
போதுமுன்னு பெருசுக்கு பெருமை.
இப்போ நடு சாலையில் மக்கள்
தவிக்க பெருசு நடமாட்டம் ஒரே
தொல்லையா போச்சு......
சுத்தி இருக்கறவக பொரிஞ்சு
தள்ளறாக இரவுனா சினிமா
அதிகாலை கைபேசில ஒரே
தொல்லை. இதுதான் இன்றைய
மன்னர் நிலைமை. இப்போ
சொல்லுங்க. சுறு,சுறுப்புதானே

Monday, July 26, 2010

மதச்சார்பற்ற அரசியல் அதிகாரம் இதுதானா?

குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.பி.ஐ. வழக்கில், போலி துப்பாக்கிச் சண்டையில் ஷோராபுதின் என்பவரை 2005ம் ஆண்டு அகமதாபாத்தில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அது இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமித்ஷா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வலதுகரமானவர். அதனால் பா.ஜ.க. இது ஒரு அரசியல் சதி என்று கூற பிரதமர் மன்மோகன்சிங் அதை மறுக்க என்பதாக விவாதம் நீண்டு செல்கிறது.
இப்போது காவல்துறையின் முன்னாள் உதவி கண்காணிப்பாளர் எம்.கே. அமீன் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறியிருக்கிறார். அதனால் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு போலி துப்பாக்கி சூட்டை திட்டமிட்டு செய்த இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. ஷோராபுதின் மட்டுமின்றி அவரது மனைவி கவுசர்பீயும் கொலை செய்யப்பட்டார்கள் என்பது தான் அந்த வழக்கு.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் ஷோராபுதின் ஷேக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக காவல்துறை அவரை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத குழுவான லக்ஷர்இகொய்பா அமைப்பைச் சேர்ந்தவரென்று முத்திரை குத்திவிட்டது. அவர் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்வதற்காக வந்து இறங்கினர் என்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதவெறி படுகொலைகளில் 3,000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு பலி வாங்கத்தான் நரேந்திர மோடியை குறி வைத்து ஷோராபுதீன் வந்திறங்கியதாக அப்போது காவல் துறை கூறியது.
அதாவது, 2002ல் நடந்த முஸ்லீம்கள் மீதான படுகொலைகளுக்கு தங்கள் முதல்வர் மோடிதான் காரணமென அவர்களே ஒப்புக்கொள்வது போல அது இருந்தது.
2007 ஆம் ஆண்டு மார்ச் 23ம் நாள் உச்சநீதி மன்றத்தில் குஜராத் அரசு ஷோராபுதீன் மற்றும் கவுசர்பீ கொலைகளை ஒப்புக் கொண்டது. ஷோராபுதினின் அப்பாவி மனைவியான கவுசர்பீ கொல்லப்பட்டு, தடயங்களை மறைக்க அவரது உடல் எரிக்கப்பட்டது என்று குஜராத் அரசே ஒப்புக் கொண்டது. தங்கள் மாநில உயர் காவல் துறை அதிகாரிகள் அத்தகைய குற்றத்தில் ஈடுபட்டதாக அப்போது குஜராத் அரசு கூறியது. அதுவே, ஷோராபுதீனின் சகேதரரான ருபாவுதீன் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கை போட்டு கவுசர்பீயின் இருப்பிடம் தெரியவில்லையென்று கேட்டதையொட்டி, இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் தலையிட்ட காரணத்தால் நிகழ்ந்தது.
அதனால் தான் குஜராத் மாநில அரசாங்கம் இத்தனை உண்மைகளையும் ஒப்புக் கொண்டது.
ஊடகவியலாளர் பிரசாந்த்தயாள் 2006 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த வழக்கு பற்றிய செய்திகளை வெளிக்கொண்டு வந்தார். அதில் ஷோராபுதீன் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குண்டர் என்றும் அங்குள்ள மார்பிள் வியாபாரிகளுக்கும் பணக்கார கட்டுமான முதலாளிகளுக்கும் மிரட்டல் விடுபவராக இருந்தார் என்றும், அதையொட்டி ஷோராபுதீனை கொலை செய்வதற்கு ரூ. 2 கோடி கொடுக்க வந்த பணக்காரர்கள் தயாராக இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த நேரத்தில் ராஜஸ்தானிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஷோராபுதீனையும் அவரது மனைவியையும் மகாராஷ்டிரா மாநில எல்லையில் காவல் துறையினர் கைது செய்தனர்.
அகமதாபாத் அருகே பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று சித்ரவதை செய்தனர்.
ஷோராபுதீன் சுட்டுக் கொன்றுவிட்டு அதை வெளியே சொல்லி விடுவாரோ என்று கவுசர்பீயை சுட்டுக் கொன்றுள்ளனர்.
தடையங்களை மறைக்க அவரது உடலை எரித்துள்ளனர். இவர்கள் இருவருடனும் கைது செய்யப்பட்ட துளசி பிரஜாபதி என்பவரை காவல் துறை ஒற்றர் என்பதற்காக விட்டுவிட்டனர்.
இந்த போலி துப்பாக்கி சூடு அம்பலத்திற்கு வந்ததும், அந்த துளசியையும் காவல்துறை போட்டுத் தள்ளிவிட்டது. இந்த வழக்கை விசாரித்து உயர் காவல் துறை அதிகாரி கீதா ஜோரி இந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்தார்.
மூத்த காவல்துறை அதிகாரியான கீதாஜோரி போலி துப்பாக்கி சூடு பற்றி கொடுத்த புலனாய்வு அறிக்கையை தன் முன் வைக்குமாறு குஜராத் அரசை உச்ச நீதி மன்றம் கேட்டுக் கொண்டது.
அதற்கிடையில், இந்த போலி துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளான டி.ஐ.ஜி.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், இருவரும் குஜராத் அரசால் கைது செய்யப்பட்டனர்.
அதே சமயம் பா.ஜ.க. தலைவர்களான ஒம்மத்தூர், உள்துறை அளமச்சர் அமீத்ஷா மற்றும் முதல்வர் மோடி ஆகியோர் இந்த சதி திட்டத்திற்கு பொறுப்பாளர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார். குஜராத் அரசால் கைது செய்யப்பட்ட டி.ஐ.ஜி. வன்சாரா, மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மிகவும் நெருக்கமானவர். அதே போல 2004 ஆம் ஆண்டு இளம் கல்லூரி மாணவியான இஷராத் ஷேக்கும், மூன்று ஆண்களும் பிடித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அம்பலமானது. அவர்களையும் டி.ஐ.ஜி. வன்சாரா, மோடியை கொலை செய்ய வந்தவர்கள் என்று போலியான குற்றத்தை சாட்டி, அறிவிக்கப்பட்ட போலி துப்பாக்கி சூட்டில் கொலை செய்துள்ளார். அது 2009 ஆகஸ்ட் மாதம் அகமதாபாத் பெருநகர நீதி மன்றத்தில் அம்பலமானது.
ஷோராபுதீன் வழக்கை புலனாய்வு செய்த கீதாஷோரியை, மாநில ஆட்சியாளர்கள் எந்தக் காரணமும் கூறாமல் புலனாய்விலிருந்து நீக்கியிருந்தார்கள். அவரது ஆய்வில் மாநில அரசாங்கத்தையும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். அதேசமயம், அந்த போலி துப்பாக்கிச்சூட்டு விசாரணையை உடைத்து விட அமித்ஷா முயற்சி எடுத்தார். அதையொட்டியே கீதாஷோரியிடமிருந்து விசாரணை ஆவணங்கள் பறிக்கப்பட்டன. தனது அதிகாரத்தை மீறி அமித்ஷா புலனாய்வுதுறையின் கூடுதல் டி.ஜி.பியான ரெய்காரிடம் ஆதாரங்களையும், சாட்சிகள் பட்டியலையும் சட்ட விரோதமாக கேட்டிருந்தார். ஒரு முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்யக் கூடாதென அமித்ஷா, கீதாஷோரியிடம் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார். அதனால்தான் இந்த வழக்கை விட்டு ஷோரியை நீக்கியது பற்றி நீதிமன்றம் காரணம் கேட்டிருந்தது. நேரடியாக காவல்துறை ஐ.ஜி. கீதாஷோரியின் அறிக்கையை உச்சநீதி மன்றம் முன் வைக்க கோரியது. மீண்டும் கீதாஷோரியையே அந்த வழக்கை நடத்தச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையொட்டி தான் சி.பி.ஐ. இந்த வழக்கை துரிதப்படுத்தியது. ஆனால் இன்று வரை மோடி தலைமையிலான குஜராத் அரசங்கமும், பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையும் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராகவே தங்களது கருத்துக்களையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் தான் உச்சநீதி மன்றம் சி.பி.ஐ. கையில் 2005ஆம் ஆண்டின் ஷோராபுதீன் துப்பாக்கி சூடு வழக்கை கொடுத்தது.
அதையொட்டி 2002 ஆம் ஆண்டு நடந்த முஸ்லீம் மக்கன் மீதான மதவெறி கலவரம் பற்றிய சிறப்பு புலனாய்வில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வெறியைத் தூண்டும் உரைவிச்சுகளும், ஆய்வில் சேர்க்கப்பட்டன.
இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கும் இந்த வழக்கு விசாரணைகளும், அதையொட்டிய புலனாய்வும், கைதுகளும் சில கேள்விகளை எழுப்பியுள்ளன.
குஜராத் ஆட்சியாளர்களின் மதவெறிசார்பு படுகொலைகளையும், சதிகளையும் அம்பலப்படுத்தியிருப்பவர்களும், அரசு சாட்சியாக மாறியவர்களும், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான், அவர்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மதசார்பற்ற என்ற கொள்கையின் பொருள் விலங்கியிருந்தாலும் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு என் விளங்கவில்லை?
மதச்சார்பற்ற என்ற கொள்கை அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் போது, அதே அரசியல் சட்டத்தால் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அதற்கு எதிரான கொள்கை உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வர முடியுமா? தேர்தலில் வெற்றி பெற்றதனால் அப்படிப்பட்டவர்கள் மதச்சார்பற்ற கொள்கையை கொண்ட அரசியல் சட்டத்தின்படி நடப்போம் என்ற உறுதிமொழி ஏற்க முடியுமா?
உறுதி மொழி எடுத்த பிறகும் அதை மீறி மதவெறியை நடைமுறைப்படுத்த முடியுமா? இத்தகைய கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழ வேண்டும்.

நடுச்சாலையில் சாமியாடிய சப்-இன்ஸ்பெக்டர்

மஞ்சள் பக்கங்கள் நிறுத்தம்
எல்லோ பேஜஸ் என்று
அழைப்பார்கள். அங்கேதான்
அந்த விசித்திர நிகழ்வு.
நடுச்சாலையில் ஒரு
துணை ஆய்வாளர்.
இரண்டு கையையும்,
மாறி, மாறி, ஆட்டி
மேலே, கீழே, பக்கவாட்டில்,
பேருந்து நிறுத்தம் அருகே
நிற்காதே மேலே ஏறு.
பாதுகாப்பு பெண் காவலரை
ஒரு விரட்டு. வாகனங்களை
மறி. நிறுத்து. பத்து நிமிடம்
நடுத்தெரு ஆட்டம்.
சாமி ஆடினார் அந்த ஆய்வாளர்.
எதற்க்காக? யார் அவரை ஆட்டிவைத்தவர்?
சர்,சர், சர், என பறக்கும் வாகனங்கள்.
காவல்துறையின் இரும்பு வண்டிகள்.
பின்னால் மின்னல் வேகத்தில்,
வேடம் போட்டதுபோல ஒரேமாதிரி
உயர்ரக வாகனங்கள். பறந்துசெல்லும்
வாகனங்களில், நடு வண்டியில்,
ஆட்டிவைப்பவர்... ஆகா எங்கோ
அடிக்கடி பார்த்ததுபோல,
எந்த காட்சி ஊடகமானாலும்,
எந்த அச்சு ஊடகமானாலும்,
கண்டே ஆகின்ற அந்த பெரியவர்.
பெரிய வெளிநாட்டு வண்டியில்
மஞ்சள் துண்டுடன் அமர்ந்து இருக்கிறார்.
அதற்காக இப்படியா நடு வீதியில்
நர்த்தனம் ஆடுவது என்று கேட்டால்,
ஒவ்வொரு நாளும் அஞ்சு முறை
இதுபோல வந்து போவார். பக்கத்தில்
அவரது வீடு இருப்பதால் என்றனர்.
இது என்ன கூத்து? அவர் வீடு இருந்தால்
அந்த சாலையில் யாரும் நடமாட கூடாதா?
சாமி ஆடி அதிகாரியை ஆட்டுவிப்பவர்
சாமி ஆட்டியா? பகுத்தறிவு, சாமி ஆடலில்
நம்பிக்கை இல்லை என்றார்களே?
இந்த நடுத்தெரு சாமி ஆடலில்
நம்பிக்கை உண்டா?

Saturday, July 24, 2010

இங்கொரு போபால் இனியும் வேண்டாம்

கடந்த வெள்ளி இரவு சென்னை அருகே திருபெரும்புதூரிலிருந்து வந்த செய்தி, அதிர்ச்சியை தந்தது. அங்கே ஒரு ஆலையில் நச்சு கசிவு வெளியாகி, நூற்று இருபது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாந்தி எடுத்தனர். மருத்துவமனையில் காதிலிருந்து ரத்தம் கசிந்ததாக கூறுகின்றனர். விபத்து ஏற்ப்பட்ட ஆலை, சீனா நாட்டுக்காரர் ஆலை. சீனாவைச்சேர்ந்த அந்த பெரிய நிறுவனம், சீன நாட்டில் பெரிய அளவில் பெயர் பெற்ற ஆலை. அது ஒரு பன்னாட்டு மூலதன ஆலை என்று பிரபலம் அடைந்த நிறுவனம். சீன மக்கள் குடியரசுக்கு எதிரான சீன நாடாக உலகம் புரிந்துள்ள தைவான் நாட்டிற்கு சொந்தமான பன்னாட்டு மூலதன ஆலை அது. தைவானை சார்ந்த அந்த ஆலையில், ஹய்பேட் என்று கூறப்படும் காதில் வைத்து பாட்டு கேட்கும் இயந்திரம், அப்போலோ போன் என்ற பெயரில் உற்பத்தியாகிறதாம். அங்கு எப்படி நச்சு வாயு கசிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த செய்தியை ஊடகங்களுக்கு வரவிடாமல் செய்வதில், ஆலை நிர்வாகம் அதிக கவனம் எடுத்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட நூற்று இருபது தொழிலாளர் களும், அருகே உள்ள ஜெயா மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்ட தாகவும், அங்கே இருபத்தைந்து தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அதையொட்டி பூந்தமல்லி சுந்தர் மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவர்களை எடுத்து சென்றுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் ஆலை நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து செய்திகளின் தாக்கம் வெளிவந்துவிடாமல் தவிர்க்க, ஊடகங்களுக்கு முறையான செய்திகளை செல்லவிடாமல் இருந்தனர் என்ற கருத்தும் நிலவியது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் பற்றி கிடைக்கும் செய்திகள் ஆவலை அதிகப்படுத்துகின்றன. அதாவது இந்த குறிப்பிட்ட சீன நிறுவனம், ஏற்கனவே சீன நாட்டில் மிகவும் பெயர் பெற்ற கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.
உலகிலேயே அதிகமான அளவில் மின்னணு மற்றும் கணினி உறுப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை பெற்றதுதான் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம். மற்ற நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உற்பத்தியை முக்கியமாக இது செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு, மக்மினி, ஐபெட், ஐபாட், ஐபோன் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறது. அமெரிக்கா கணினி நிறுவனங்களான டெல்,போன்றவற்றுக்கு பல்வேறு பொருள்களை தயார் செய்து கொடுக்கும் நிறுவனம் இது சில பாகங்களை .மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், மோட்டாரோலா, நோக்கியா ஆகியற்றுக்கு செல்லுலார் போன்களையும் தயார் செய்து கொடுக்கும் நிறுவனம். 1974 ல் பிளாஸ்டிக் பொருள்களை தயார் செய்யும் நிறுவனமாக இது தொடங்கியது.தைவான் பங்கு சந்தையில் 1991 வரை இந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமாக இருந்தது. 1988 ல் தனது முதல் உற்பத்தி ஆலையை சீனாவில், ஷென்சென் பிராந்தியத்தில் தொடங்கியது. அதுதான் இப்போது இந்த நிறுவத்தின் மிகப்பெரிய ஆலையாக 420000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அந்த தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் இயங்குகிறார்கள். ஆனால் அனைவரும் தொழிற்சாலையின் வளாகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பாஃக்ஸ்கான் ஆலை, தனது ஷென்சென் ஆலை உட்பட, மக்கள் சீன குடியரசில் மொத்தம் 800000 தொழிலாளர்களை கொண்டதான ஆலையாக இயங்கி வருகிறது. 1994 முதல், இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவிலும், ஜப்பானிலும், வளர்ச்சி மையங்களை விலைக்கு வாங்கி தொழில் புரிந்து வருகிறது.
1997 லும், 1998 லும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கூடுதலான உற்பத்தி தொழிற்சாலைகளை இவர்கள் நிறுவினார்கள். 2007 ஆம் ஆண்டில், செக் குடியரசிலும், ஹங்கேரியிலும், மெக்சிகோவிலும், பிரேசிலிலும்,இந்தியாவிலும், வியட்நாமிலும், இந்த நிறுவனத்தின் ஆலைகளும், துணை ஆலைகளும் காணப்பட்டன. சமீபத்தில் இந்த நிறுவத்தின் மீது, அதன் தொழிலாளர் விரோதப் போக்குகளை பற்றிய பொதுமக்கள் விசாரணை என்பது வெளிவந்தது. சீனக்குடியரசில் இதுதான் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்றாலும், இதன் தொழிலாளர் விரோதப்போக்கு கம்யூனிஸ்ட் சீனா என்ற அந்த நாட்டிலேயே அதிகமாக இருந்தது என்பதே இந்த ஆலை பற்றிய ஒரு சித்திரத்தை நமக்கு தந்துவிடும்.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டிலேயே, ஐந்து மாதங்களுக்குள் இந்த ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்கள், ஆலையின் சுவர்கள் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், அதே சமயம் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பாஃக்ஸ்கான் ஆலை பற்றிய ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உடனே இந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை நூறு விழுக்காடு கூட்டி அறிவித்தது. இந்த அளவுக்கு இந்த ஆலையின் தொழிலாளர் நிலைமை இருக்கிறது என்பது இதிலிருந்தே வெளிப் படுகிறது.
இந்த பாஃக்ஸ்கான் ஆலை தனது வளாகத்திற்குள், தொழிலாளர்களை கொத்தடிமை போல வைத்திருந்ததாலேயே, அவர்கள் சுவர் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது புரியப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஆலையில்தான் இங்கே திருபெரும்புதூரில், இதே ஆலையின் கிளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லையில்லா பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கையும், அதை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகங்களுக்கு எதிரான போக்கையும் வெளிப்படுத்தி இருந்தது இவர்களை அம்பலப்படுத்திய சீனா வணிக செய்திகள் என்ற இதழாளர்களுக்கு எதிராக பாஃக்ஸ்கான் நிறுவனம் வழக்கு தொடுத்து அவர்களுக்கு நாற்பது லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதிக்கச் செய்தார்கள். இதன் மூலம் ஊடகங்கள் இந்த நிறுவனம் கண்டு அஞ்சத் தொடங்கின.
சீன குடியரசில் இருக்கும் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனத்தில், 2007ம் ஆண்டு ஜூன் 18ம் நாள் ஹூ என்ற 19 வயது பெண் தொழிலாளி, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே கழிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் 21வயது ஆண் தொழிலாளி லியூபிங், வேலையிலிருந்து நீக்கப்பட்ட 2மணி நேரத்தில் திடீரென இறந்து போனார். 2008ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் 28 வயது லீ என்ற ஆண் தொழிலாளி வேலை பளுவின் காரணமாக மரணமடைந்தார். 2009ம் ஆண்டு ஜூலை 16ல் சன் டன்யங் என்ற 25 வயது ஆண் தொழிலாளி தான் தங்கியிருந்த 12 வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 2009 ஆகஸ்ட் 20ல் 23வயது சென் சின் சாங் என்ற ஆண் தொழிலாளி ஆலையின் குளத்தில் இறந்து கிடந்தார். அதன் பிறகே 2010ம் ஆண்டு 5 மாதத்திற்குள் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ள ஆலை சுவற்றிலிருந்து கீழே குதித்தனர் என்ற செய்தி வெளி வந்தது. இந்த அளவுக்கு கொடுமையான தொழிலாளர் விரோத போக்கை மேற்கொண்ட இந்த பாஃக்ஸ்கான் ஆலை, ஆஸ்திரேலிய இணையதளத்தில் இந்த உண்மைகளை வெளியிட்டதற்காக, வழக்கு போட்டது. 2010 பிப்ரவரி 17ம் நாள் சீனாவில் உள்ள இதன் ஆலையில் ஒரு வெளிநாட்டு நிருபர் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஆலைதான் திருபெரும் புதூரில் நச்சு வாயு கசிவை ஏற்படுத்தி விட்டு, இப்போது அதை மறைக்கப் பார்க்கிறது.
சீன நாட்டினர் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொடியதொரு பாத்திரத்தை வகுத்தப் பின்பு, இப்போது தமிழ்நாட்டு தொழிலாளர் களை அழிப்பதற்காக வந்திருக்கிறார்களா என்று தமிழின உணர்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை போபால் நகரில் 26 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நிறுவனம், நச்சு வாயுவை அவிழ்த்துவிட்டு இந்திய மக்களை கொன்றது போதும். நமக்கு மீண்டும் ஒரு போபால் வேண்டாம். மேற்கண்ட விபத்தை முன்வைத்து, இங்கொரு போபால் இனியும் வேண்டாம் என்ற குரலை எழுப்ப வேண்டாமா?

Thursday, July 22, 2010

அங்கொரு கருணா, இங்கொரு...?

இதுதான் போராடும் எல்லா
இனங்களுக்கும் உள்ள நிலையா?
யூலை படுகொலை என்றவர்
அழைத்தார். கருப்பு யூலை
என்றும் அழைக்கிறார்.
சிறுபான்மை தமிழனை
ஆதிக்க சிங்களவன் வன்முறை
செய்து படுகொலை நடத்திய
கொடூர நாளை அப்படி குறித்தனர்.
அங்கே விடுதலை விழுதுகள்
எழுந்தன. சரணடைவு தத்துவம்
வீழ்ந்தது. ஆயுதம்தான் இனி என
தமிழ் இளைஞர் தன்நிலை உணர்ந்தனர்.
அந்த சிந்தனையை யூலை
இருபத்திமூன்று பதிவு செய்தது.
இங்கே
தாமிரபரணி படுகொலைகள் இதே
நாளில் திட்டமிட்டு நடத்தப்பட்டன.
மாஞ்சோலை தொழிலாளர்
மலையக தமிழரின் வாரிசுகள்
இங்கே திருநெல்வேலியில்
ஆதிக்க சக்திகளின் ஆயுத
காட்டாட்சிக்கு பலி ஆகினர்.
பதினேழு தோழர்கள்
பச்சிளங்குழந்தை உட்பட
ஈவிரக்கமின்றி அடித்து
தூக்கி, ஆற்றில் போட்டு
ஆபடியே அமுக்கி கொன்று
குவித்த அரசுதான் இப்போதும்
இங்கே அரியணை சுகத்தில்...
தமிழன் எங்கே இருந்தாலும்,
அவனுக்கு எதிராய் ஆலவட்டமிடும்
பருந்து கூட்டம், ஆளுகையில்....
அங்கொரு கருணா, அதனால்
தோல்வி என்றால், இங்கொரு.......

ஜூலை--23, இனப்படுகொலை நினைவு நாள்.

27 ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கைத் தீவில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழினத்தின் மீது, சிங்கள காடையர்களும், காவல் துறையும் சேர்ந்து நடத்திய கொடூரக் கொலைகள், இந்த நாளில் நினைவுப்படுத்தப்படுகின்றன. 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாள் காடையர் கும்பலின் தாக்குதல் நடத்தப்பட்டது. 4000 தமிழர்கள் படுக்கொலைச் செய்யப்பட்டனர். பல்லாயிரம் தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. கூட்டம் கூட்டமாக ஈழத் தமிழர்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஒடினர். அந்த நாள் கறுப்பு ஜூலை நாள் என்று குறிக்கப்பட்டது. அதுவே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்குவதற்கு நிர்பந்தித்தது.
1948ம் ஆண்டு இலங்கைக்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அறிவித்த போது, சிங்கள தேசம், தமிழர் தேசம் என்ற இரண்டையும் ஒரே தீவிற்குள் அடைத்து, சிங்களர் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தனர். ஆனால் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள், மற்றும் படித்தவர்கள் தமிழர்களாக இருந்தனர். இந்த பிளவுபடுத்தி ஆட்சி நடத்தும் ஆங்கிலேயரது தந்திரம், இரண்டு இனங்கள் மத்தியிலும் பகைமையை ஏற்படுத்தியது. 1956ம் ஆண்டு தமிழையும், ஆங்கிலத்தையும் புறம் தள்ளிவிட்டு, சிங்களம் மட்டுமே என்பதற்கான சட்டத்தை, பெரும்பான்மை மனோபாவம் கொண்டு வந்தது. தமிழர்களின் அறவழி எதிர்ப்பு 1958ல் கலவரத்தின் மூலம், சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டது. 60கள் தமிழர்களின் தொடர்ந்த எதிர்ப்பை பதிவு செய்தன. 1971ம் ஆண்டு தரப்படுத்தல் என்ற பெயரில், அரசு பணிகளுக்கு தமிழர்களை வடிக்கட்டும் முறைக்கு கொண்டு சென்றது. 1977ல் மீண்டும் இனக் கலவரம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1981ல் உலகப் புகழ் பெற்ற யாழ்பாணத்தின் தமிழ் நூல் நிலையம், சிங்கள வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டது. 83ம் ஆண்டு வரை தீவிற்குள் ஆங்கங்கே தமிழர்கள் மீதான வன்முறைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞர்கள் சிலர் கொந்தளித்து பதிலடி கொடுத்தனர். உச்சக்கட்டமாக 1983 ஜூலை 23ல் சிங்கள காடையர்களின் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய சிங்களப் படையினர் யாழ்பாணம் அருகே தாக்கப்பட்டனர். அவர்களது சடலங்கள் மறுநாள் கொழும்பில் புதைக்கப்படும் போது, சிங்கள வன்முறைக் கும்பல் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது.
கொழும்பில் வசித்து வந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன. அவர்களது அங்காடிகள் தீ வைக்கப்பட்டன. தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாட்டை விட்டே வெளியேறினர். சிங்கள வன்முறையாளர்களின் தாக்குதல்களிலிருந்து, அப்பாவித் தமிழர்களை பல சிங்களர்களும், தமிழ் பேசும் முஸ்லீம்களும் பாதுகாத்தனர். முஸ்லீம் வீடுகளிலும், சிங்கள வீடுகளிலும், கோயில்களிலும் அரசாங்கக் கட்டிடங்களிலும் தமிழர்கள் அடைக்கலம் தேடினர். அரசு நெறுக்கடி நிலையை அறிவித்தது. சிங்கள காவல் துறை ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த விரும்பவில்லை. கண்டி, மாத்தளை, நாவலபிட்டியா, பதுல்லா, நுவரெலியா உட்பட கணிசமாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கும் சிங்கள காடையரின் வன்முறை வெறியாட்டம் நீடித்தது.
ஜூலை 25ம் நாள், வெளிக்கடை சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் தாக்கப்பட்டனர். சிங்கள கைதிகள் வெளியிலிருந்து கொடுக்கப்பட்ட கத்திகளையும், கட்டைகளையும் வைத்து நிராயுதபாணியான தமிழ்க் கைதிகளை தாக்கினார்கள். அதில் 37 தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல ஜூலை 28ம் நாள் மீண்டும் அதே சிறைச்சாலையில் அதே பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 15 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஜூலை 26ம் நாள் நாடு தழுவிய அளவில் சிங்கள காடையர்களின் தாக்குதல்கள் தமிழர்கள் மீது பற்றிப் படர்ந்தன.
சிங்களர்களின் வன்முறைகளை அரசப்படைகள் வேடிக்கைப் பார்த்தன. பிரேமதாசா அப்போது பிரமராக இருந்தார். கொழும்பில் 20,000 தமிழர்கள் வீடற்றவர்கள் ஆனார்கள். பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டர்கள். தமிழ் அகதிகளின் எண்ணிக்கை 50,000 ஆனது. சிங்களர்கள் அதிகம் வசிக்கும் காலி, மாத்தரா, கம்போலா, நாவலப்பிட்டியா, புசெல்லவா, கீனிகத்தேனா, ஹட்டன், கன்டி, நுவெரெலியா, பதுல்லா, அனுராதபுரா ஆகிய இடங்களில், தமிழர்கள் தாக்கப்பட்டனர். 3,000 தமிழர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் அதில் அடங்குவார்கள். வெளிக்கடை சிறையில் மட்டும் 53 தமிழ் கைதிகள் கொடூரமாக படுக்கொலைச் செய்யப்பட்டனர். 18,000 தமிழர் வீடுகள் நெறுக்கப்பட்டன. ஆயிரக்காணக்கான தமிழர்கள் ஐரேப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு பறந்த சென்றனர். பல்லாயிரக்கணக்கனோர் இந்தியாவிற்கு கடல் வழியாக தப்பி வந்தனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களில் இணையத் தொடங்கினர்.
27 ஆண்டுகள் கழித்து இந்த கொடூரமான இனப் படுக்கொலையை கண்டித்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் நினைவு கூர்கிறார்கள். மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள். கனடா, ஸ்விட்சர்லாந்து, நார்வே, டென்மார்க், ஜெர்மனி, பிரான்சு, லண்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் நினைவு கூர்கிறார்கள்.
லண்டனில் நடைபெறும் பேரணியில், இப்போது 2009ம் ஆண்டு 4வது வன்னிப் போரில், போர்க் கைதிகளாக பிடிப்பட்டுள்ள தமிழர்களை சந்திக்க அனைத்து நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என கோருகின்றனர். இங்கிலாந்திலிருந்து, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தை நோக்கி நடைப்பயணமாக, சிவந்தன் என்ற தமிழ் இளைஞர், போர்க் குற்றவாளிகளை விசாரிப்பதற்கான கோரிக்கையுடன் இதே நாளில் புறப்படுகிறார். அனைத்து நாட்டு அரங்கில் இலங்கையில் நடந்த இன அழிப்பை பகிரங்கப்படுத்துவதற்கு, உலகத் தமிழர்கள் ஒன்றுப்பட்டு குரல் கொடுப்பதற்கான, அடையாள நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
போர்க் கைதிகளாக 2009 மே18ல் சரணடைந்த விடுதலைப் புலியின் போராளிகள் கருதப்பட வேண்டும். இலங்கை அரசின் கண்க்குப்படி 11,000 போராளிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 3,000 பேர் விடுவிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர்களான பாலகுமாரனும், யோகியும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் இருவரின் மனைவிகள் விதவைகளாக உதவிக் கேட்டு வந்துள்ளனர் என்று இலங்கை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் பொருள் சரணடைந்த இரு தலைவர்களும் போர் விதிகளுக்கு எதிராக கொலைச் செய்யப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பகிரங்கமான போர்க் குற்றம். இது போன்ற போர்க் குற்றங்களை இழைத்து வரும் போர்க் குற்றவாளிகளை விசாரிக்க வேண்டும் என்ற குரல், இன்றைய நாளில் உலகமெங்கும் தமிழர்களால் எழுப்பபடுவது பொருத்தமாக இருக்கிறது.

கோபம் கொள்ளல் ஆகாது பாப்பா.

கோபத்தை கட்டுப்படுத்தவா?
அது எப்படி? சமாளிக்கத்தான்
முடியும். எதிராளி புண்படுத்தினால்,
கோபம் வருவது இயற்கைதான்.
புண்பட்ட நெஞ்சம் புயலாக மாறும்.
புயலாக மாறினால், கோபமாய்
வெடிக்கும். வெடிப்பதால் வெற்றி
கிட்டுமா? வெடிப்பதால் நரம்பு
தளரும். நம் உடல் உடையும்.
புண்படுத்தியது திருந்துமா?
நீ புண்படுத்தினாய் என்பதிலும்,
உன் செயல் புண்படுத்தியது
என்பதிலும், எத்தனை வேற்றுமை?.
தண்ணீர் குடி உடனே. வெடிப்பது
உடன் அடங்கும். இது புதிய குறுந்தகடின்
அறிவுரை. அது என்ன குறுந்தகடு?.
வேகமா? விவேகமா? என்ற ஒரு
புது தகடு. சிந்தித்து பேச சொல்லும்
ஒரு தகடு. கோபம் அதிகமானால்,
உச்ச கட்டம் போகும்போது,
உணர்ச்சிகளே வெளிப்படும்.
அறிவார்ந்த பதில் அறுந்து போகும்.
ஆத்திரமாக அதுவே மாறும்.
அதுவா சிறந்தது?
சிந்தித்து பேச இடைவெளி வேண்டாமா?
அதற்காக தண்ணீர் குடி. இது கலாசேத்ரா
கொடுக்கும் குறுந்தகடு.
புண்படுத்த நான் எண்ணவில்லை.
புண்படுத்தியதும் எனக்கு தெரியவில்லை.
ஆனால் வெடிகளை சுமக்கும்
கழுதை நான்.

Wednesday, July 21, 2010

தமிழ் நிலத்தை அபகரிக்கும் சிங்கள ராணுவ வெறியர்கள்.

10 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற ஈழத்தின் வடக்கு மாகாண மாவட்டங்களில், 4 லட்சம் சிங்கள ராணுவக் குடும்பங்களின் சிங்களர்கள் குடியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்மந்தன், ம.வெ. சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மா.அ.சுமந்திரன் ஆகிய 5 பேரும், டெல்லி சென்று இந்திய அரசின் தலைவர்களை சந்தித்தனர். அதன் பிறகு தமிழக அரசின் முதல்வரையும் சந்தித்தனர். அப்போது அங்கே நிலவுகின்ற நிலைமைகள் பற்றி புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜியையும், வெளி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவையும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும், தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனையும் மேற்கண்ட இலங்கை நாடாளுமன்ற குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர். இந்திய தலைவர்களில் சிதம்பரம் தவிர அனைவருமே அக்கறையுடன் அவர்களது பேச்சை கேட்டுள்ளனர். உள்ளதில் குறைவான நேரத்தை பேசுவதற்காக கொடுத்தவர் ப. சிதம்பரம் மட்டுமே.
இலங்கையில் நடந்த நாலாவது வன்னிப் போரில், அதிகமான அளவு தமிழின அழிப்பு நடந்ததற்கு பொறுப்பு இந்திய அரசு தான் என்ற செய்தியும், இந்திய அரசியல் தலைவர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் அப்படிப்பட்ட கருத்து இருப்பதும் டெல்லி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு, இந்தியாவின் செல்வாக்கிற்கு சவால்விட்டு வருவதை இந்திய தலைவர்கள் உணர்ந்துள்ளார்கள். இப்போது சீனாவின் செல்வாக்கினால், ராஜபக்சே அரசு இந்திய அரசின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்ற புரிதலும் டெல்லிக்கு வந்துள்ளது. இந்தியாவிலிருந்து சிறப்பு தூதரை, இலங்கை அனுப்பி அங்கு நடைபெறும் தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வு ஏற்பாடுகளை பார்வையிட மத்திய, மாநில அரசுகள் திட்டமிடும் நேரத்தில், ராஜபக்சே அரசு அதை மறுத்துள்ளது. அதே சமயம் தமிழர் புனர்வாழ்வு பணிகளுக்காக ரூ. 500 கோடியை இந்திய அரசு ஏற்கனவே ராஜபக்சே அரசிடம் ஒப்படைத்துள்ளது. அப்படியிருந்தும் கூட தாங்கள் கொடுத்த நிதியின் செயல்பாட்டை தாங்களே பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்பது டெல்லிக்கு கொழும்பு கொடுத்திருக்கும் ஒரு சாட்டையடியாகத்தான் பார்க்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்றைய நிலையில் 10 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கிளிநொச்சியில் சமீபத்தில் சிங்கள ராணுவ தளபதி ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார். அதில் அந்த வட்டராத்தின் அரசாங்க தமிழ் அதிகாரிகள் பங்கு கொண்டுள்ளனர். அவர்களிடம் அந்த சிங்கள தளபதி பேசவில்லை. மாறாக கொக்கரித்திருக்கிறார். ரத்தம் சிந்தி சிங்களர்களாகிய நாங்கள், புலிகளிடமிருந்து இந்த நிலத்தை கைப்பற்றியிருக்கிறோம் என்று கொக்கரித்திருக்கிறார். அதனால் அந்த நிலம் சிங்களர்களுக்கு சொந்தமானது என்று அந்த ராணுவத் தளபதி கொக்கரித்துள்ளார். இது வெறும் கொக்கரிப்பாக மட்டும் நிற்கவில்லை. மாறாக செயல்பாட்டிற்கும் சென்றுள்ளது.
வவுனியாவிலிருக்கும் மாணிக் பண்ணை என்ற முள்வேலி முகாம்களிலிருந்து, வெளியே கொண்டுவரப்பட்டு மீள்குடியேற்றம் என்ற பெயரில் கிளிநொச்சியில் உள்ள இடைக்கால முகாம்களில் இருக்கும் மக்கள் தங்களது பழைய வீடுகளை பார்வையிட சென்றுள்ளனர். உடைந்து போன பழைய வீடுகளை பார்த்துவிட்டு தற்காலிக முகாம்களுக்கு திரும்பிய மக்கள், இந்திய அரசு கொடுத்த 4 தகரங்கள், மற்றும் சிமெண்ட் ஆகியவற்றுடன் மீண்டும் தங்களது இடிந்த வீடுகளுக்கு சென்றபோது, அவை ரா ணுவத்தினரால் சுத்தமாக புல்டௌசர் மூலம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கிறார்கள். அந்த இடங்கள் ராணுவத்தரால் அபகரிக்கப்படுள்ளன என்பதை அறிந்திருக்கிறார்கள். இது போல முல்லைத் தீவு மாவட்டத்தில் இந்துபுரம், திருமுறிகண்டி, சாந்தப்புரம் ஆகிய இடங்களில் உள்ள 4,811 ஏக்கர் நிலங்களை ராணுவம் அபகரித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 2,500 ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது. வடக்கு மாகாணம் முழுமைக்கும் 10,000 ஏக்கர் நிலங்களை ராணுவம் அபகரித்துள்ளது.
இப்போது வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர் நிற்கிறார்கள். அவர்களது குடும்பத்தினரை கொண்டு வந்து நிரந்தரமாக குடியேற்ற, குடியிருப்புகளை சீன அரசின் உதவியுடன் செய்யத்தொடங்கியுள்ளனர். அதில் ராணுவத்தினரின் குடும்பத்தினர் உட்பட குறைந்தபட்சம் 4 லட்சம் சிங்களர்கள் நிரந்தரமாக வடக்கு மாகாணத்தில் குடியேறப் போகிறார்கள். 10 லட்சம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் நிலத்தில், குறைந்தபட்ச 4 லட்சம் சிங்களர்கள் ஆயுதபாணியான பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட இருப்பது தான், உடனடியாக இருக்கின்ற ஆபத்தான பிரச்சனை.
யாழ் நகரில் இருக்கின்ற முக்கிய இரண்டு விடுதிகளையும், ராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்குள் தென்னிலங்கையின் சிங்கள மக்கள் 30 லட்சம் பேர், சுற்றுலா பயணிகளாக வடக்கு மாகாணத்திற்கு வருகை புரிந்தததாக, இலங்கை அரசே தெரிவித்துள்ளது. அப்படி வருபவர்களுக்கு தங்குவதற்கு கூட, யாழ்பாணத்தில் விடுதிகள் இல்லாத சூழ்நிலையில் தமிழ் மக்கள் வீடுகளில் தங்கிச் செல்கிறார்கள். சிங்களர்களின் இந்த சங்கடங்களை போக்குவதற்காக, யாழ் நகரில் உள்ள சுபாஸ் விடுதியில் தங்கியுள்ள 51வது சிங்களப் படையணியின் தலைமையகம், கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றப்படுகிறது என்பதாக செய்தி வந்துள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களை உடைத்தெரிவது என்பது ஒரு ஆதாரபூர்வமான போர்க் குற்றம். யாழ்பாணத்தில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லங்கள், ராணுவத்தால் உடைத்தெரியப்பட்டுள்ளன. இறந்த பிறகும் தமிழர்களை அமைதியாக உறங்க அனுமதிக்காத ஒரு இனவெறிபிடித்த சிங்கள ராணுவம் தமிழர் நிலத்தில் ஆட்டம்போட்டு வருகிறது. இத்தகைய நில அபகரிப்பும், தமிழர் நில அடையாள அழிப்பும் செய்து வரும் ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு, மூக்கணங்கயிறு இடுவதற்கு தமிழ் நாட்டு தமிழர்கள் தயாரா? தமிழக முதல்வர் முயல்வாரா? இத்தகைய கேள்விகள் தான் நமக்கு எழுகிறது.

Tuesday, July 20, 2010

மோசடி மூலதன நிறுவனங்களுக்கு, மன்மோகனின் அரசியல் ஆதரவா?

இப்போது புதிய ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பன்னாட்டு மூலதன நிறுவங்களை கண்டபடி அனுமதிப்பது என்ற போக்கு நமது நாட்டில் நடைபெற்றுவருவதாக, ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே பன்னாட்டு மூலதன நிறுவனங்களில், அமெரிக்காவை சேர்ந்த கோகோகோலா, பெப்சிகோலா, ஆகியவை இந்தியாவில் நாடாளுமன்றத்திலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு, பிறகு மொரார்ஜிதேசாய் ஆட்சியில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் வலியுறுத்தலில், இந்தியாவை விட்டே விரட்டப்பட்ட வரலாறும் உண்டு. அதற்குபிறகு, அதே நிறுவனங்கள் இந்திய மக்களின் தாகத்தை போக்க வல்லவை என்று அரசு கண்டுபிடித்ததன் விளைவாக, மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தன. எல்லா இடங்களிலும் இந்திய மக்களின் தாகத்தை போக்க ஏற்கனவே இருந்துவந்த இளநீரையும், வட்டார குளிர்பானங்களையும், காலி செய்து விட்டு அந்த இடங்களை இந்த பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பிடித்துக்கொண்டன. அதேபோல அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான யூனியன் கார்பைடு எத்தனை மக்களை கொல்ல காரணமாக இருந்தாலும், அதற்கு தனியான சிவப்பு கம்பள வரவேற்பு என்பதே இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. அதேபோல அமெரிக்காவின் இன்னொரு பன்னாட்டு மூலதன நிறுவனமான டூபாண்டு உலக அளவில் மாசுபடுத்துவதில் மிகப்பெரிய பெயரை பெற்றிருந்தாலும், அதற்கு தமிழ்நாடு சிவப்பு கம்பளம் விரித்து கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை அமைக்க உதவியது என்பது வரலாறு.
இப்போது ஒரு புதிய கொள்ளை அம்பலத்திற்கு வந்துள்ளது.அதாவது உலகமயமாக்கலின் பெயரில், மன்மோகன் தலைமையிலான அரசாங்கம், அடிக்கும் கொள்ளையை அம்பலப்படுத்தியுள்ளார்கள். எட்டு ஆண்டுகளாக உலகமயமாக்கலின் பெயரில், 500 இந்திய பெரும் நிறுவனங்களுக்கும், 300 பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், கொள்ளை அடிக்கவும், கண்டபடி சட்டவிரோதமாக செயல்படவும் அனுமதித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் மௌரிஷியஸ் மூலம் 40 % மூலதனத்தை இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு, கள்ளபணமாக இறக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்குசந்தையிலிருந்து மட்டும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10000 கோடி கொள்ளையடிக்க, மூலதனமிட ரூ.பத்து லட்சம் டாலர்களை அவ்வாறு கள்ள பணமாக பெற்றுள்ளனர் என்ற செய்தி வெளிவந்துள்ளது. உதாரனத்திற்க்கு நெசில் நிறுவனத்தை கூறுகிறார்கள். அவர்கள் 200 கிராம் பால்பவுடரை 56 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதாவது ஒரு கிலோ கிராமுக்கு ரூ.280 என்பதாக விற்கிறார்கள். வரி சேர்த்து ஒரு கிலோகிராமுக்கு ரூ.2800 என விலைக்கு விற்கிறார்கள். கார்பரேட்டுகள் தங்களது உற்பத்தியின் மூலமோ, தொழிநுட்பம் மூலமோ, லாபத்தை அடைவதில்லை. மாறாக தங்களது கொள்ளையின் மூலம் மட்டுமே லாபத்தை அடைகிறார்கள். மின்னணு ஆலைகள் மட்டுமே தங்கள் தொழில்நுட்பம் மூலம், தங்களது லாபத்தை பெறுகிறார்கள். அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் உள்ளதுபோல,இந்தியாவில்உற்பத்தியாகும் பொருளின் தரத்தை கண்காணிக்கவோ, அல்லது விலையை நிர்ணயிக்கவோ எந்த ஒரு அரசு ஏற்பாடும் கிடையாது. அதனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம், தனது விருப்பப்படி தரத்தையும், விலையையும் நிர்ணயித்து கொள்கிறது. இதுதான் அந்த நிறுவனங்கள் அதிகமாக பெறுகின்ற கொள்ளைகளுக்கு காரணமாக இருக்கிறது. எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறையை இந்த நாட்டில் ஆலைகளுக்கு பயன்படுத்துகிறோம் என்றால், அது எந்த முன்மாதிரி என்பதுதான் கேள்வி. ஊழலையும், கொள்ளையையும் ஒரு முன்மாதிரியாக பின்பற்றுகிறோமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவிற்கு என்று ஒரு தேசிய விலை நிர்ணய ஆணையம் ஏன் இல்லை? இப்படிப்பட்ட நியாயமான கேள்விகளும் எழுகின்றன.
இந்தியாவின் தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே இந்திய மக்களின் வரிப்பணம்தான், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மூலம், கடன் என்ற பெயரிலோ, பங்கு என்ற பெயரிலோ, சென்று மூலதனமாக மாறி உள்ளது. அப்படி மாறிய மக்களது பணத்தை வைத்துக்கொண்டு இந்த மன்மோகன் அரசு, எந்த ஒரு கட்டுப்படும் அந்த நிறுவனங்களுக்கு விதிக்காமல், விலை நிர்ணயத்தில் கூட ஒரு தேசிய நிர்ணயத்தை ஏற்படுத்தாமல், அவர்களை கொள்ளையடிக்க அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளபடியே மிகவும் பெர்ய விசயமாக பார்க்கப்படவேண்டும். அதே சமயம் இந்த நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்த மன்மோகன் அரசு எந்த நிதி அளிப்பையும் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இணைந்தே எழுந்துள்ளது. ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு போடப்படும் வரவுசெலவு திட்டத்தில், நீதி துறைக்காக ஏன் ஒரு இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கமுடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்காவில் நீதித்துறையை வலுவானதாக வைத்திருக்கிறார்களே, அத்தகைய மாதிரியை வழமையாக எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவை பின்பற்றும் மன்மோகன் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்வியும் சேர்ந்து எழும்புகிறது. மன்மோகன் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு சில்லறை பொருட்களின் விலைகள் 300 % அதிகமாகி உள்ளது. அதேபோல சொத்துக்களின் விலைகள் 600 % அதிகமாகி உள்ளது. என்றைக்குமே இந்த ஏறிய விலைவாசி இறங்கவே இல்லை. மத்திய, மாநில அரசுகள் சுரண்டும் அதீத வரிகள் எல்லாமே பலவீனமான திட்டங்களான தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், போன்றவற்றிற்கு வீணாக செலவிடப்படுகின்றன. பல லட்சம் கோடி பணம் உலகமயமாக்கல் என்ற பெயரில், இந்தியாவிற்கு வெளியே எடுத்து செல்லப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 70 % உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை, இருபத்தாறு ஆப்பிரிக்க நாடுகளை விட,.அதிகமாக இருக்கிறது. இதுவே மன்மோகனின் பொருளாதார கணக்கின் லட்சணம். இநத்தகைய நிலையில் நாட்டை வைத்துக்கொண்டு இதற்க்கு வல்லரசு என்று பெயர் கூறி அழைப்பதிலும் ஆள்வோர் சளைக்கவில்லை. இந்தியாவிற்குள் இறக்கியுள்ள வெளிநாட்டு நிதியான ரூ.10000 கோடியை வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்ப எடுத்துவிட்டார்கள் என்றால், இங்கே உள்ள பங்கு சந்தை நிலைமை என்ன ஆகும்? இவ்வாறு நூற்றி இருபது கோடி இந்திய மக்களை ஏமாற்றி அவர்களை கொள்ளை அடித்து, அதன்மூலம் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை வலுப்பெறச்செய்யும் வேலையை மன்மோகன் செய்து வருகிறார். இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியை கொண்டுவருவோம் என்றும், இரட்டை இலக்கத்தில் பணவீக்கத்தை குறைப்பேன் என்றும் பீற்றி வரும் மன்மோகன், நாளுக்கு நாள் கூடிவரும் வறுமையின் எல்லைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கைபற்றிகவலைப்படுவதாக தெரியவில்லை..
இதுபோன்ற கேள்விகளை இப்போது இந்தியாவில் உள்ள நாட்டுப்பற்றுள்ள பொருளாதார மேதைகள் கேட்கத்தொடங்கியுள்ளனர். பேராசிரியர் ஆர்.கே.குப்தா போன்றவர்கள் இதுபோல கேள்வி கேட்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் மன்மோகன் போன்றோருக்கு இந்த கேள்விகள் எல்லாம் காதில் கேட்பதாக நமக்கு தெரியவில்லை. மாறாக பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் நலன்கள் தான், அவர்களுக்கு பெரிதாக படுகிறது. இது இந்தியாவை எங்கே கொண்டு விடப்போகிறது என்ற கவலை நாட்டு பற்றாளர்களுக்கு ஏற்படுகிறது. ஊடகத்துறையினர் அதே கவலையை பகிர்ந்து கொள்கிறார்களா?

கருணாநிதி வருகிறார்.

கருணாநிதி வருகிறார்.
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழர் எம்.பி.மாரை
சந்தித்த பின்னாலே ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழரை படுகொலை
செய்த போரிலே குற்றவாளி
பெயர்பட்டியலில் இருந்தவர்
வருகிறார். இப்போ ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஐ.நா.முயற்சித்த ஆய்வில்
போர் குற்றவாளிகளை
விசாரணை செய்யவந்தால்
தனக்கும் வருமோ என
அஞ்சிய கருணாநிதி
வருகிறார். இப்போ
ஆதரவு குரல் கொடுக்க
வருகிறார். கொழும்பு
தொடங்கியுள்ள விசாரணையே
போதுமென்று ஐ.நா.
சொன்னதனால்,
ஆனந்தம் அடைந்தார்
அதே குடிமகன்.
போர்க்குற்றவாளிகளை
கணக்குபார்த்தால் தன்
பெயர் வந்துவிடுமோ
உண்மை உலகுக்கு
தெரிந்துவிடுமோ
என்ற அச்சம் கொண்டவர்
அப்படித்தான் என்ன முடியும்.
அதனால்தான் வருகிறார்.
இன்றைக்கு வருகிறார்.
மத்திய அரசு கை
காட்டியபின் வருகிறார்.
ஈழத்தமிழருக்கு குரல்
கொடுக்க வருகிறார்.

Sunday, July 18, 2010

பெல்காம் மொழியால், இனத்தால் எந்த பக்கம்?

இந்தியா ஒரே தேசம். நம்புங்கள் என்றனர். தமிழன் ஏதாவது பிரச்னையை பேசினால் இப்படி சொல்வார்கள். இந்தியாவில் பல தேசிய இனங்களிருக்கின்றன என்று மத்திய அரசு சொல்லத்தயாராயில்லை. அதேசமயம் நாடாளுமன்றத்திலேயே இந்தியா பல மொழிகளையும், பல பணபாடுகளையும், பல பழக்கவழக்கங்களையும், கொண்டது என்று பெருமையாக ஆள்வோர் கூறுகிறார்கள். இதை அதிகமாக ஏக இந்தியா பேசிவரும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும்போது, வாஜ்பாய் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடந்தபோது, ஆட்சிக்கு ஆதரவாக பேசவந்த அமைச்சரும், தி.மு.க. முக்கிய தலைவருமான முரசொலி மாறனே, நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அப்போது அதை நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியிலே ஒளிபரப்பு செய்தனர். அதில் தெளிவாக இந்தியா பல பண்பாடுகளை, கொண்ட நாடு என்பதால் அதன் ஒருமைப்பாடு பல பண்பாடுகளைக்கொண்ட இனங்களையும் இணைத்தே செல்ல வேண்டும் என்றார். அதுதான் இந்தியாவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதற்கும் அர்த்தம். ஆனால் என்ன காரணத்தாலோ பல தேசிய இனங்களிருப்பதை போட்டு உடைக்க இந்திய ஆளும் கூட்டம் தயாராக இருப்பதில்லை. அதேசமயம் பல மொழிகளும், பல இனங்களும், இருப்பதை மறுக்கவும் அவர்களால் முடியவில்லை. மராத்தி மொழி பேசும் மகாராஷ்டிராகாரர்களுக்கு, சமீபத்தில் பீகார்காரர்களுடன் மோதல் வந்தது. அது ரயில்வே பணிகளில், மகாராஷ்ட்ராவில் பீகார்காரர்களை கொண்டுவந்து இறக்குவதை எதிர்த்து தங்கள் வாழ்வியலுக்காக மகாராஷ்டிராகாரர்கள் போராடிய ஒரு வாழ்வாதார பிரச்சனை. ஆனால் அப்போதே இந்தியாவின் ஊடகங்கள், பீகார்காரர்களை எப்படி இந்தியாவிற்குள்ளேயே மகாராஷ்டிராகாரர்கள் தாக்கலாம் என்று இந்திய ஒற்றுமை பேசி, யதார்த்தத்தில் எழுந்துள்ள ஒரு பிரச்சனையில் இருக்கும் நியாயங்களை புரியவிடாமலே செய்து விட்டனர். ஒரு தேசிய இனத்தின் பிரச்சனைகளை சரியாக வெளிப்படுத்தாமல், வெறும் வார்த்தை அளவில் இந்திய ஒற்றுமையை பேசினால் ஒற்றுமை வந்துவிடுமா என்ற விசயம்தான் அவர்களால் புரியப்படவில்லை. எல்லா தேசிய இனங்களுக்கும் ஒரு நாட்டில் அவரவர் பிரச்சனை உணரப்பட்டு அது தீர்க்கப்படவேண்டும் என்ற பார்வை இல்லாமல் இருப்பதால்தான் மீண்டும், மீண்டும் இதுபோன்ற தேசிய இனங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒற்றுமை என்பது சொல்வதன் மூலம் வருவதல்ல. மாறாக அந்தந்த தேசிய இனங்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவுவதன்மூலமே ஒன்றுபட்ட ஒரு நாடு உருவாக முடியும்.
சமீபத்தில் காட்சி ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது ஒரு அடிதடி நிகழ்ச்சி. அதாவது மும்பையில் இருக்கின்ற பிரபல காட்சி ஊடகமான ஜி தொலைக்காட்சியில் ஒரு நேரலை நிகழ்ச்சி நடந்தது. அதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் மன்சூர், மும்பை ஊடக நிலையத்தில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பெல்காம் பிரச்சினையின் மீது அவரது சூடான விவாதத்தின் இடையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை விமர்சிக்கிறார். உடனடியாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், குண்டர்கள் ஊடக நிலையத்திற்குள் நுழைந்து மன்சூரை தாக்குகிறார்கள். அவரது சட்டையை கிழித்து முடித்து விட்டு, பனியனைக் கூட விடாமல் கிழிக்கும் காட்சி உலகம் முழுமைக்கும் காட்டப்படுகிறது. இவ்வாறு இரண்டு எல்லை மாநிலங்களுக்குள் ஒரு பிரச்சினை சுதந்திரம் அடைந்த பின் 62 ஆண்டுகள் கழித்து உருவாகிறது என்று சொன்னால் இதற்கு என்ன காரணம்?
இப்போது கிளம்பியிருக்கும் பிரச்சினை பெல்காம் பகுதியைப் பற்றியது. இந்த வட்டாரம் கர்நாடக மாநிலத்திற்குள் உள்ளது. அதன் எல்லையில் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. மராத்தி மொழி பேசக்கூடிய மராத்தியர்கள் அதிகமாக எல்லை பகுதியோரத்தில் கர்நாடக மாநிலத்திற்குள் வாழ்கிறார்கள். இது இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு செய்திதான். ஒவ்வொரு மாநிலத்தின் எல்லையோர கிராமங்களிலும், அடுத்த மாநிலத்தின் மக்கள் வாழ்வது என்பது வழமைதான். மொழிவாரி மாநிலங்களை பிரிக்கும் போது இத்தகைய சிக்கல்கள் வராமல் பிரிக்காதது தவறா? அல்லது அதில் அக்கறை இல்லாமல் எல்லாமே இந்தியாதானே என்ற புரிதலில் மேலோட்டமாக மாநிலப் பிரிவுகள் செய்யப்பட்டனவா? அல்லது இந்தியா முழுமையும் ஒன்றுதான் என்ற புரிதல் மேலே அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கும், அவர்களைச் சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டும் தான் இருக்கிறதா? அதாவது அடித்தளத்தில் இருக்கும் வெவ்வேறு மொழி பேசும் மக்களுக்கில்லையா? அல்லது ஒன்றுபட்ட இந்தியா என்று இருந்த புரிதல் காலப்போக்கில் கரைந்துபோய், ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் மாற்று மொழி பேசும் மக்களுடன் நல்லிணக்க வாழ்வை இழந்துவிட்டார்களா? அல்லது திணிக்கப்பட்ட பொருளாதார, அதிகார சுமைகளால் பாதிக்கப்படும் மக்கள் தங்கள் மொழி மற்றும் இனம் பேசும் மக்களை மட்டுமே நம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்களா? இப்படிப்பட்ட கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
பெல்காம் என்ற வட்டாரத்திற்குள் மராத்தி மொழி பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் வாழ்கிறார்கள். அதன் வடக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் வாழும் மக்கள் மராத்தி மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். தெற்குப் பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மேற்குப் பகுதியிலும் கூட கன்னடம் பேசும் மக்கள் இருக்கிறார்கள். 100% ஒரே மொழி பேசும் மக்கள் பெல்காம் வட்டாரத்தில் இல்லை. பெல்காம் நகரில் 1955ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எம்.ஈ.எஸ் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிரா எக்கிகரன் சமிதி தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. அவர்கள் தேர்தல்களில் நிற்கும் போதெல்லாம் மராத்தி மொழி பேசக்கூடிய 865 கிராமங்களை மகாராஷ்டிராவிற்கு, திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள்.
பெல்காம் நகரிலிருந்து 5 பெரிய மராத்தி மொழி நாளேடுகள் வெளியிடப்படுகிறது. பெல்காம் வட்டாரம் முழுக்க மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. மாறாக, 95% மராத்தி பேசக்கூடிய எல்லூர் போன்ற கிராமங்கள் தான் தங்கள் மாநிலத்துடன் சேர வேண்டும் என்று கோருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும்போது, முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் மேற்கண்ட கிராமங்கள் கர்நாடகாவிற்கு சென்று விட்டன என்கிறார்கள். இது சம்மந்தப்பட்ட மோதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்காக கருப்பு நாள் கடைபிடிக்கப் பட்டுள்ளது. மராத்தி மொழி பேசும் கிராமங்களிலும் மராத்தி மொழிக்கு சமமான உரிமைகூட கொடுக்கப்படுவதில்லை. அதுவே, அந்த மக்கள் மத்தியில் மாற்றுச் சிந்தனையை உருவாக்கியுள்ளது. மாநில அரசாங்க மொழியாக உள்ள கன்னட மொழியிலும், அதிகாரிகளின் முதலாளி மொழியான ஆங்கில மொழியிலும் மட்டுமே மராத்தி கிராமங்களுக்கு அரசாங்க செய்திகள் செல்கின்றன. இதுவே, மராத்தி பேசும் மக்களை அந்நியப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் உருது மொழியில் புழக்கம் இருக்கிறது. அதுபோன்ற அணுகுமுறையைக் கூட மராத்தி மக்களுக்கு அரசு தரவில்லை. மகாஜன் அறிக்கை என்ற ஒரு அறிக்கை இந்தப் பிரச்சினையின் மீது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையையே அரசாங்கம் தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறது. அந்த அறிக்கையின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில கிராமங்கள், கர்நாடக மாநிலத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் இருபுறமும் இப்படிப்பட்ட நிலைமை இருப்பது தெரிகிறது. இப்போது கர்நாடக அரசாங்கத்தின் அணுகுமுறையில், மராத்தியர்களுக்கு எதிரான செயல்பாடு தொடங்கியது. அதையொட்டி பால்தாக்கரே கன்னடர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். உடுப்பி என்ற பெயரில் அங்காடிகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் இருக்கின்றன என்றும், ஆகவே கன்னடர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்றும் மிரட்டினார். இதையொட்டி எழுந்த விவாதத்தில்தான், மும்பையில் உள்ள தனியார் காட்சி ஊடக நிலையத்தில் பேச வந்த கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் மன்சூர் தாக்கப்பட்டிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரசும் இணைந்து ஒரு தந்திரமான நிலைப்பாட்டை முதலில் எடுத்தார்கள். பெல்காம் வட்டாரத்தை யுனியன் பிரதேசமாக அறிவித்துவிடலாம் என்ற பாதுகாப்பான கோரிக்கையை முதலில் வைத்திருந்தார்கள். இப்போது நிலைமை மாறி விட்டது. மக்கள் மத்தியில் மராத்திய கிராமங்களை கேட்கும் மனோநிலை மகாராஷ்டிராவில் வளர்ந்துவிட்டது. அதையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல், தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்து அந்த கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிறார். கடந்த புதன்கிழமை பிரதமரை சந்தித்த மகாராஷ்டிரா மாநிலத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளில் ஒருவரான சிவசேனா தலைவர் திவாகர் ரவோடே, முதலமைச்சர் அசோக் சவானை குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் சவான் மேலவையில் பெல்காம் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இருக்கும் நிலை தொடரட்டும் என்றும் இரண்டு நிலைப்பாடுகளை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய தடுமாற்றமான முடிவுகள் புதிய ஒன்றல்ல. ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும், இப்போது அறிவிக்க வேண்டாம் என்றும் இரண்டு நிலைப்பாடுகளை மாநில மற்றும் மத்திய காங்கிஸ் தலைமை எடுத்த தடுமாற்றத்தை நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். இந்தியாவில் இருக்கின்ற மக்கள் தொகைக்கு ஏற்ற முறையில் ஒரு சரியான, பொருத்தமான பொருளாதார திட்டத்தை முன்வைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி அனைவருக்கும் வேலை கொடுக்க திட்டமிடுவதற்கு வக்கில்லாத காங்கிரஸ் கட்சி, அதன் மூலம் எழுகின்ற இதுபோன்ற பிராந்திய பிரச்சினைகளையும், மொழி சார்ந்த பிரச்சினைகளையும் கையாள்வதில் தடுமாற்றத்தை சந்திப்பது அதிசயம் அல்ல.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இருக்கின்ற ஆந்திர மாநிலத் தேவைகளையொட்டி ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. மகாராஷ்டிரா எல்லையில் ஆந்திர மாநிலத்திற்குள் பாயக்கூடிய கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்ளி அணை என்ற ஒன்றை மகாராஷ்டிர அரசு கட்டி வருகிறது. அந்தப் பகுதி ஆந்திராவில் உள்ள அடிலாபாத் என்ற ஆதிவாசிகள் அதிகம் உள்ள மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளது. அணைகட்டும் பணிகளை ஆந்திர மாநிலத்தார் எதிர்த்து வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன் பாப்ளி அணை பகுதிக்கு சென்று பார்த்து வர புறப்பட்டார் அவரை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சி காங்கிரஸ்தான். ஆந்திர மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து, மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கெதிராக பிரச்சினையை கிளப்பி விடுவார்கள் என்ற அச்சம் இருந்தாலும், ஆந்திர முதல்வர் ரோசய்யா பாப்ளி அணைக்கட்டை பார்வையிட நாயுடுவை அனுமதிக்குமாறு கோருகிறார். இந்த நிகழ்ச்சி கூட அண்டையில் உள்ள இரு மாநிலங்களுக்கு மத்தியில், இயற்கை ஆதாரங்களை பயன்படுத்துவது சம்மந்தமான பிரச்சினைதான். இதே போன்ற பிரச்சினையைத்தான் தமிழ்நாடு அரசு ஒகேனக்கல் அணை கட்டும் பிரச்சினையில், கர்நாடகாவின் தலையீடுகளை எதிர்கொள்கிறது. காவிரி நீரை நியாயமாக பெறுவதற்கு அனைத்து தீர்மானங்களையும் மீறி கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தரப்பட வேண்டிய தண்ணீரைக் கூட கேரள அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்குள் ஓடும் பாலாறு ஆந்திர மாநிலத்தில் இருந்து வருவதால், அங்கேயே தடுப்பணைகள் கட்டி அந்த தண்ணீர் தடுக்கப்படுகிறது. இவ்வாறு இந்தியா முழுமையிலும் ஒவ்வொரு மாநிலமும், மாநில மக்களும், அண்டை மாநிலத்துடன் இயற்கை ஆதாரங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்து கொண்டே யிருக்கின்றன. இவையெல்லாம் இந்தியா ஒரே தேசம் என்ற சொற்றொடரை நியாயப்படுத்துகிறதா?
பல தேசிய இனங்களை தன்னகத்தே கொண்ட இந்தியா, அவற்றை அவற்றிற்கே உரிய அங்கீகாரத்துடன் ஏற்றுக் கொள்வது மட்டுமே எழுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், இந்திய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் உதவும் என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் தவறாக இருக்குமா?

Saturday, July 17, 2010

டெல்லி தொ(ல்)லைப் பேச்சால் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை உடைந்ததா?

இந்திய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பாகிஸ் தானில் கூடினார்கள். தலை நகர் இஸ்லாமாபாத்தில் ஜூலை 15ம் நாள் 6 மணி நேரம் இரு நாட்டு அமைச் சர்களுக்கும் மத்தியில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்திய வெளிவிவாகாரத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தான் வெளிவிவாகாரத் துறை அமைச்சர் ஷா மெகமுது குரேஷி ஆகிய இருவரும் தொடக்கத்தில் பேச்சுவார்த் தைப் பற்றி ஊக்கமான செய்திகளை வெளியிட் டார்கள். பாகிஸ்தான் நாட்டு மக்களும், இந்திய நாட்டு மக்களும், சமாதா னம் விரும்பும் உலக நாட்டு மக்களும் இந்த பேச்சுவார்த்தையின் முன் னேற்றத்தை அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். திடீர் என பேச்சுவார்த்தை தோற்றுவிட்டது என்ற செய்தியும், அதையொட்டி இரு நாட்டு அமைச்சர் களும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த வண் ணம் இருக்கிறார்கள்.
ஏப்ரல் 2829 நாட்களில் பூட்டான் நாட்டின் தலை நகர் திம்புவில், இந்தியா வின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் நாட்டு தலைமை அமைச்சரும் தங்களுக்குள் பேசி, பல்
வேறு பிரச்சினைகளின் மீது ஒரு ஒத்த கருத்தை ஏற் படுத்துவதற்கான சூழ் நிலையை இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்படுத்தினார் கள் என்பதாக இருநாட்டு அரசாங்கங்களும் செய் தியை வெளியிட்டன. இரண்டு நாட்டு அரசாங் கங்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கையான அடிப் படை உருவானது என்பதாகவும் தெரிவித்தார் கள். அதை தொடர்வதற் காக இருநாட்டு அரசாங் கங்களும் தொடர்ந்து தங் களுக்குள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், அது தந்திரமாக இருக்கக் கூடாது என்றும், பாதக மான பார்வை கொண்டதாக அது அமையக்கூடாது என்றும் அப்போது தங்க ளுக்குள் முடிவு செய்வதாக வும் உலகுக்கு தெரிவித்தார் கள்.
அதன் பிறகு ஜூன் மாதம் 24ம் நாள் இரு நாட்டு வெளிவிவகாரத் துறை செயலாளர்களும் கூடி பேசினார்கள். ஜூன் 25,26 தேதிகளில் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கும் சந்தித்துப் பேசி நல்ல முடிவுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிறைவு பெறவில்லை. அதையொட்டி இப்போது ஜூலை 15ம் நாள் இரு நாட்டு வெளிவிவகாரத் துறை அமைச்சர்களும் நடத்திய பேச்சு வார்த்தை வெற்றியைக் கொடுக்க வில்லை.
நம்பிக்கையை இருநாடு களுக்கும் மத்தி யில் ஏற்படுத்துவதற் காக பல்வேறு பிரச்சினை களின் மீது பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கு பதிலாக, உடனடியாக செயல்பட வேண்டிய தந்திரங்கள் பற்றி பேச்சு வார்த்தையின் கவனம் திரும்பியதால், அது வெற்றிக்கு இட்டுச் செல்ல வில்லை என்றும் தெரி கிறது. அதாவது 26/11 என்ற மும்பை பயங்கரவாத தாக்குதல் நடத்தியதற்கு காரணமாக இருந்ததாக இந்தியாவால் குற்றம்சாட் டப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்கள் மீது பாக். அரசு எடுக்கும் நடவ டிக்கை மட்டும்தான், இந்தியாவிற்கும், பாகிஸ் தானிற்கும் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் ஒரே வழியாக இருக்கும் என்று ஊடகயியலாளர் களிடம் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட அணுகு முறை ஏற்கனவே ஒப்புக் கொண்ட பல்வேறு பிரச்சி னைகள் மீதான பரஸ்பர பரிமாற்றத்தின் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தல் என்ற நிலையை மீறுவதாக அமைந்துள்ளது.
இந்திய அரசாங்கத் துடன் ஏற்கனவே முன் னாள் பாகிஸ்தான் அரசாங் கம், ஜம்மு காஷ்மீர் பற்றிய விவகாரத்தில் ஒரு பரஸ்பர புரிதலை ஏற்படுத்துவது, இரு நாடுகளுக்கும் மத்தியில் நம்பிக்கை அடித்தளத்தை ஏற்படுத்தும் என்ற புரிதல் வைத்திருந்தது என்பதாக, பாகிஸ்தானின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குரேஷி கூறியி ருந்தார்.
அதே போல காஷ்மீர் விவகாரத்தில் எல்லைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமலேயே, அரசி யல் தன்மையுள்ள சில நடவடிக்கைகளை எடுத்து அதன் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கலாம் என்றும், பாகிஸ்தான் தரப்பு கூறி யது. பாக் முன்னாள் அதிபர் முஷாரப்பின் பெயரை உச்சரிக்காவிட்டா லும், அவரது காலத்தை சுட்டிக்காட்டி, குரேஷி மேற்கண்ட கருத்தைக் கூறியிருந்தார். அதாவது பின்கதவு வழி பேச்சு வார்த்தையின் மூலம் இரண்டு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சினையில் ஒரு அரசியல் தன்மை கொண்ட தீர்வை நோக்கி செல்வதற்காக திட்டமிட்டி ருந்தன என்பது குரே ஷியின் வெளிப்படுத்தல்.
சமீபத்திய மத்திய அரசின் காஷ்மீர் விவகார அணுகுமுறைகள் இத்த கைய கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதாக அமை கின்றன. இரு நாடுகளுக் கும் நட்பாகவும், அதே சமயம் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருக்கின்ற அமெரிக்க அரசின் முயற்சிகளின் மூலம் இத்தகைய நிலைப் பாட்டை இரு அரசுகளும் எடுத்திருக்க வாய்ப்புண்டு. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் காஷ்மீர் பயணமும், அதையொட்டி அங்கே இருக்கும் துணை ராணுவத்தை திரும்பப் பெறுவது என்ற அறிவிப்பும், காஷ்மீர் காவல்துறையே அந்த மாநிலத்தின் முதன்மை யான படையாக இயங்கும் என்ற டெல்லியின் அறிவிப்பும் மேற்கண்ட கருத்துகளுக்கு நடைமுறை யில் வலுச்சேர்த்தன.
ஆனால் காஷ்மீரத்தில் தொடர்ந்து நடந்த செயல் பாடுகள் அதற்கு எதிராக சென்றுவிட்டன. துணை ராணுவத்தின் அட்டகாசங் களும், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் நிலை குலைவும், ஹூரியத் மாநாடு அமைப்பினருக்கு பின்னால் பல்லாயிரக்க ணக்கான காஷ்மீர் மக்கள் அணி திரண்டதும், நிகழ்ச்சி நிரலை வேறு ஒரு பக்கம் திருப்பி விட்டது. ராணு வத்தை காஷ்மீருக்குள் அனுப்பும் அளவுக்கு மத்திய அரசின் அணுகு
முறையில் மாற்றம் ஏற்பட் டது.
இப்போது நடந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் பேச்சு வார்த்தை வெற்றியை எட்டாததற்கு காரணமாக வெளிவந்திருக்கும் பாகிஸ் தானின் குற்றச்சாட்டு, பல விஷயங்களை யும் தீவிரமாக கவனிக்கத் தூண்டுகிறது. அதாவது முதலில் நல்லமுறையில், எதிர்பார்ப்புடன் பேசத் தொடங்கிய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, பேச்சு வார்த்தைக்கு இடையி லேயே தொடர்ந்து டெல்லி யிலிருந்து தொலைபேசி வழிகாட்டல்கள் வந்து கொண்டிருந்தன என்பதாக பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மூத்த அனுபவமுள்ள அமைச்சரான கிருஷ்ணாவிற்கு, எதற்காக தொலைபேசி வழிகாட்டல்கள் தொடர்ந்து டெல்லியிலி ருந்து வரவேண்டும் என்ற சந்தேகத்தையும் குரேஷி எழுப்பியுள்ளார். இதுதான் பேச்சு வார்த்தை தொடரா ததற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
எல்லா பிரச்சினைகளை யும் மேசை மீது போட்டு விவாதிக்க தயார் என்று அறிவிக்கப்பட்ட ஒரு பேச்சுவார்த்தையில், பயங்கரவாதம் பற்றிய பிரச்சினை மட்டுமே, அதி லும் குறிப்பாக மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானியர்கள் மீதான நடவடிக்கை என்ற பிரச் சினை மட்டும் தேர்ந்தெடுக் கப்பட வேண்டிய அவசி யம் என்ன என்பதே குரேஷியின் வாதம். பயங் கரவாதத்தால் இந்தியா மட்டுமின்றி, பாகிஸ் தானும் கூட தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது என் கிறார் குரேஷி. வியாழக் கிழமை நல்ல முறையில் சென்ற பரந்து பட்ட பேச்சு வார்த்தை, அதன் பிறகு ஜம்முகாஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி திரும்பிய போது, அதுவே முட்டுக்கட்டை யானது. அதே போல பயங்கரவாதிகளாக சுட்டிக் காட்டப்பட்டவர்கள் மீது, பாகிஸ்தான் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உறுதி கூற வேண்டும் என்ற இந்தியாவின் வற்புறுத் தலும் முட்டுக்கட்டையாக அமைந்தது. ஒருவரை ஒருவர் மேற்கண்ட முறைகளில் குற்றம் சொல் லிக் கொண்டாலும், மீண்டும் ஊடகங்களை சந்திக்கும் போது, அவநம்பிக்கையையும், நம்பிக்கையையும் மாறி, மாறி அளிப்பவர்களாக இரண்டு அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
நம் நாட்டின் தொடர் அமைதி சூழலுக்கு மிகத் தேவையான இத்தகைய பேச்சு வார்த்தை வெற்றி பெறாததற்கு டெல்லியின் தொடர் தலையீடுகள் காரணமா என்ற சந்தேகம் பொதுவாக எழுகிறது. ஆகவே மத்திய அரசு பேச்சு வார்த்தை பற்றிய, மற்றும் டெல்லியின் வழிகாட்டல் பற்றிய முழு விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்திய மக்களுக்கு எழத்தான் செய் யும்.

Friday, July 16, 2010

அவள் பேசுவாள்.

அவன் சுடப்பட்டான்.
அப்போது எம்.பி. என
அவனை அழைத்தார்கள்.
யாழ் நகரில் வெறும்
எம்.பி.யாக இருந்தால்
உயிர் போயிருக்காது.மனித
உரிமை பேசினார். மனோவுடன்
சேர்ந்து காணாமல் போனவர்
பட்டியல் எடுத்தார். விடுமா அரசு.
உயிரை எடுத்தது. இரத்தமும்,
சதையுமாய் வாழ்ந்த மனைவி
மறுகவில்லை. எம்.பி.க்கு நின்றார்.
வென்றார். வந்தார் மன்றத்திற்கு.
பேசத்தெரியாது என்று நினைத்தனர்.
பேசினார். அவள் பேசினாள்.
அவள் பெயர் விஜயகலா மகேஸ்வரன்
நாடாளுமன்றத்தில்
பகிரங்கமாக தன் கணவரை கொன்றது
இன்னாரென அந்த அமைச்சரை
காட்டி பேசினார். சென்னை
திருவள்ளுவர் நகரில் வெளியே
விட்ட தோட்டாக்களை அனுப்பிய
அதே கைகள்தான் தன் கணவருக்கும்
தோட்டா அனுப்பியது என்பதை
எடுத்து கூறினார். இதுதானே தமிழ்
பெண்ணின் துணிச்சல். முறம்
எடுத்த தமிழ் பெண்ணுக்கு
பின்னால் இப்போது எதிரியின்
சிங்கமுக குகையிலேயே
கொலைகாரனை காட்டிய
தமிழ் பெண் ஆனாள்

Thursday, July 15, 2010

வார்த்தை போர் நடக்கிறதா?

கருணாநிதிக்கும், மன்மோகனுக்கும்,
கடிதப்போக்குவரத்து
துரிதப்பட்டுள்ளதாக
தகவல்கள் வந்துகொண்டே
இருக்கின்றன
கடிதங்களா? அவை நெருக்கல்களா?
தமிழர் அழிப்பை செய்ததில்
ஒத்துப்போன இருதலைவர்களுக்குள்
இந்த நேரம் மோதல் வர
யார் காரணம்?
காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரம்
கூட்டணி மாற முயலலாம் என்று
தமிழக முதலவர் சந்தேகம்
செம்மொழி மாநாட்டில் பேசிய
வார்த்தைகள் தமிழை வைத்து
மோதுவாரோ என அவர்களுக்கு
ஒரு சந்தேகம்.
மாநாடு வராத சோனியாவும்,
மன்மோஹனும் விலகி நின்றது
ஏன் என்ற கேள்வியை நாடு இங்கே
கேட்கிறது. இப்போ மன்மோகன்
எழுதுகிறார்.
என்ன தீர்வை கொடுப்பதுன்னு
எழுதிகாட்டு கருணாநிதியே
தமிழீழம்தான் தீர்வு என்று
ஊடகங்களுக்கு சொல்லலாம்.
டில்லிக்கு அதையே முடியுமா?
மாட்டிக்கொண்டார் முதல்வர்
என்றால் பதில் தந்தார் கருணாநிதி.
எதுவும் முன்னேற்றம் நடக்கலையே?
நீ சொன்னியே? நடக்கலையே?
என்பதுபோல ஒரு கேள்வி.
சிறப்பு பிரதிநிதி அனுப்புங்கள்
மன்மோகனுக்கு ஒரு கடிதம்.
இந்த ஆட்டம் எதற்க்காக?
தமிழர் பிரச்சனை வந்திட்டால்
யார்மீது பழிபோட என்ற நாடகம்
நடக்கிறதா? சீமானை பாதுகாப்பு
சட்டத்தில் போட்டு மத்திய அரசை
சரிப்படுத்த இன்னொரு புறத்தில்
ஏற்பாடு. விசுவாசம் நான்
காட்டிவிட்டேன் என்று அதிலே
முறைப்பாடு. நாளை கூட்டணி முறிந்திட்டால்
நீ தமிழருக்கு செய்யல்ல என்று சொல்ல
இப்படி ஒரு கூப்பாடு.
மராத்திகாரன் கர்நாடகத்தானை
பேசினாலே அடிக்கின்றான்
அடித்தவனுக்கு எம்.எல்.ஏ.
தலைமை தாங்கி வருகின்றான்.
இன விவகாரம் இப்படியே
இந்தியாவில் வெடித்து சிதறி
போகும்போது சிங்களவன்
கடலிலே தமிழ் மீனவரை தாக்குவதா?
என்று கேட்டு எழுந்துவந்த
சீமான் பேச்சில் சிங்களனை
தாக்குவோம்னு சொல்லியதால்
தேசிய பாதுகாப்பு சட்டத்தை
பயன்படுத்திய கருணாநிதியை
எந்த வகையில் சேர்ப்பது நாம்?
டில்லிக்கான விசுவாசமா?
கூட்டணி தக்கவைக்க தந்திரமா?
பிள்ளைகளுக்கு போட்டியாக
சீமான் வருவான்னு பயத்திலா?.
.

Wednesday, July 14, 2010

நமக்குள்தானே என்றாயே.....

அது என்ன அப்படி சொன்னாய்?
நமக்குள் ஒன்றும் நடக்கலையே?
நமக்குள் பரஸ்பரம் பேசலையே?
நமக்குள் திட்டம் போடலையே?
நமக்குள் காதலை சொல்லலையே?
நாம் இருவரும் சேர்ந்து எங்கும்
போகலையே?
நமக்குள் ரஹசியம் பேசலையே?
எல்லாம் உனக்குள் பேசிவிட்டால்
நமக்குள் தானே சொல்லுவதா?
நான் புரிந்துகொள்ளணும் அப்படின்னு
நமக்குள் தானே சொன்னாயா?
நமக்குள் வேணுமின்னு
நினைப்பதனால் இத்தனை கேள்வி
கேட்கின்றேன்.
நமக்குள்தானே என்றிட்டால்,
வெளியே காதலை மறைப்பதுவா?
நமக்குள்தானே என்றிட்டால்
ஊருக்கு நடிப்போம் எனப்பொருளா?
நமக்குள்தானே எனச்சொன்னால்,
நாலு பேருக்கு மத்தியிலே
நெருக்கம் தெரியா ஒரு நட்பா?
நமக்குள்தானே என்றால்
வெளியே தெரியா விவகாரமா?
நமக்குள்தானே என்று சொல்லி
கட்டிபிடித்தால் பரவாயில்லை.
நமக்குள்தானே கேட்டுவிட்டு
பேசாமல் போனால் என்ன பயன்?

Tuesday, July 13, 2010

அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றமும், இன அழிப்பும்.

.
அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருந்தாலும், சமீபத்தில் உலக தமிழர்கள் மத்தியில் அதிகமாக அங்கலாய்க்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு போர் பற்றிய குற்றச்சாட்டுக்களும், அந்த இனவாதப் போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மிறல்களும், அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நிற்கிறது.
கடந்த திங்கட்கிழமை அனைத்து குற்றவியல் நீதிமன்றம் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அது சுடான் நாட்டினுடைய அதிபரான ஒமர் அல்பஷீர் பற்றியது. ஒரு குழுவினரது உடல் ரீதியான அழிவை ஏற்படுத்துவதற்கான ஒரு வாழ் நிலையை திட்டமிட்டு அவர்கள் மீது நடத்திய கொடுமை அவரால் இழைக்கப்பட்டது என்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அதுவே இன அழிப்பு என்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ புண்படுத்தி அதன் மூலம் இன அழிப்பை செய்வது என்பதையும், கொலைகளின் மூலம் இன அழிப்பை செய்வது என்பதையும் அதிபர் பஷீர் இழைத்ததாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதனால் அவரை கைது செய்வதற்கான ஒரு வாரண்டை பிறப்பித்துள்ளது. ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் மீது இது போன்ற இன அழிப்புடப குற்றச் சாட்டை சாட்டுவது இதுவே முதல் முறையாகும்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் போர்க் குற்றங்களுக்காக பஷீர் மீது இன அழிப்பு குற்றச் சாட்டையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக, அதற்கான ஒரு வாரண்டையும் கூடுதலாக கையில் வைத்திருக்கும் அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம் இப்போது மேலும் பல தூதரக நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பஷீர் இலங்கையின் மகிந்த ராஜபக்சே போல அனைத்து குற்றச் சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
2000மாவது ஆண்டில் ரோம் நகரில் உருவான ஒரு தீர்மானம், அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் வழிகாட்டுதலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ரோம் தீர்மானத்தில் அடிப்படையில் 2009ம் ஆண்டு ஆரம்ப கட்ட விசாரணையில் சூடான் நாட்டு அதிபர் பஷீர் மீது இன அழிப்பு என்ற குற்றச் சாட்டு, அனைத்து நாட்டு நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மேல் முறையீட்டில், நீதி அரசர்கள் 3 விதமான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பஷீர் பொறுப்பானவர் என்பதாக நம்புவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார். இத்தகைய இன அழிப்புக் குற்றச்சாட்டு, அனைத்து நாட்டு நீதிமன்றத்தை அரசியல் நோக்கோடு செயல்படுவதாக சூடான் அமைச்சர்கள் குறை சொல்வதற்கும் வழிவகுத்தது. இது தான் இன்றைக்கு இலங்கை அரசாலும், உலக சமூகத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டு.
தர்புரி என்ற மக்களுக்கும், மானுடம் முழுமைக்கும் கிடைத்த வெற்றி என்பதாகவும், பாதிக்கப்பட்ட அந்த இனத்தின் குரல் வெளிவந்தது. ரோம் தீர்மானத்தின் 58வது பிரிவின் படி மேற்கண்ட விசாரணை முறை நடத்தப்பட்டுள்ளது. சூடான் நாடு ரோம் தீர்மானத்தில் ஒரு பங்குதாரராக இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதனால், நீதிமன்ற முடிவுப்படி, பஷீரை ஒப்படைக்க முடியாதென மறுத்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆண்டு ஐ.நா. வில் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சூடான் தேர்தலில் பஷீர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதே நிலைமைதான் இலங்கைக்கும் பொருத்தமாக அமையும். இலங்கை அரசும் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை ரோம் ஒப்பந்தத்திற்கு ஆதாராவாக அறைகூவல் விடுப்பதற்கு இலங்கை அரசு மறுத்துவிட்டது.
2009ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் வரை, அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக 110 நாடுகள் மட்டுமே இருக்கின்றன. தெற்காசிய நாடுகளில் ரோம் தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்து இணைந்திருக்கும் முதல் நாடாக வங்காளதேசம் இருக்கிறது. அதன் மூலம் போர்க் குற்றங்கள் பற்றிய சாட்சிகளையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் கண்டுபிடிக்க உதவுவது, தேசிய விசாரணைகளை நடத்துவது, குற்றம் சாட்டப்படும் தனி நபர்களை சரணடைய வைப்பது ஆகியவற்றை செய்ய ஊக்கமாக இருக்கிறது. ஆசியா கண்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், கம்போடியா, மங்கோலியா, கொரியா குடியரசு, தைமூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரோம் தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்த 7 நாடுகளாகும்.
ஒரு நாட்டு அரசு தனது நாட்டிற்குள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தாலோ, போர் குற்றங்களை இழைத்தாலோ, அந்த நாட்டு அரசின் மீதும், அந்த அரசில் பொறுப்பில் இருக்கும் அதிபர்கள் மீதும் அத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக பொறுப்பேற்க வைத்து, அவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிப்பதற்கான அதிகாரத்தை பெற்றது தான், இந்த அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் முறைகளை முன் வைப்பது தான், ரோம் தீர்மானம். ஆகவே ரோம் தீர்மானத்தின் நீயாயங்களை ஏற்று, அதில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் ஒப்புதல் கொடுத்து கையெழுத்திட வேண்டும். இது உலக மனித உரிமை தளத்தில் எதிர்பார்க்கப்படும் ஒரு நியதி. இத்தகைய ஒப்புதலை இது வரை கொடுக்காத இலங்கை அரசையும், இந்திய அரசையும் அந்தந்த நாட்டு மக்கள் நிர்ப்பந்தம் கொடுத்து, கையெழுத்திட வைக்க வேண்டும்.
இப்போது குறிப்பாக உலகத் தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக உலக மனித உரிமை ஆர்வாளர்கள் மத்தியிலும் தீவிரமாக விவாதிக்கப்படுவது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை சிங்கள அரசு நடத்திய கொடிய ஒரு போர் பற்றியது. அந்த இனவாதப் போரில் மானுடத்திற்கு எதிரான குற்றங்களும், ஜெனிவா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் விதிகளை மீறிய குற்றங்களும் இப்போது ஆதாரபூர்வமாக பட்டியலிடப்படுகின்றன. ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் குற்றங்களுக்கு, போர்க் குற்றங்கள் என்று பெயர். அத்தகைய போர்க் குற்றங்களை நடத்திய பொறுப்பாளர்கள், தலைவர்கள், அரசாங்கம் ஆகியவை இங்கே குற்றம் சாட்டப்படுகின்றன.
சூடான் அதிபர் பஷீருக்கு எப்படி அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம், விசாரித்து தண்டனை வழங்குவதற்காக, கைது வாரண்டை பிறப்பித்தது போல, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கும், இன அழிப்புக்கும் உரிய தண்டனையை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பெறவேண்டும் என்பதே, தமிழ் கூறும் நல்லுலகின் எதிர்பார்ப்பு.

கருணாநிதி வழுக்கி, வழுக்கி விழுகிறாரா?

ஈழத்தமிழர் விவகாரம் அதீதமாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எதிரொலிக்க தொடங்கியதிலிருந்து, கருணாநிதி தொடந்து அதை பிடித்து மேலே ஏற முயல்வார்; வழுக்கி விழுவார்; என்பதாக ஒரு கதை அரங்கேறி வருகிறது. ஈழப்போர் நடந்தபோதும், நின்ற போதும், அது கணக்கு பார்க்கப்ப்படும்போதும், முள்ளிவாய்கால் ஆனாலும், முள்வேலிமுகாம் ஆனாலும், ஐ.நா. சபை ஆனாலும், போர்குற்றம் ஆனாலும், மீனவர் சாவு ஆனாலும், கருணாநிதி தொடர்ந்து தமிழர் தலைவராக ஆவதற்கு முயல்வார், மீண்டும், மீண்டும், விழுவார் என்பதாக வரலாறு எழுதப்பட்டு விட்டது. முதலில் வன்னிப்போர் காலம் கருணாநிதி கூட்டணி தலைமையான காங்கிரசை ஆதரிக்கவேண்டிய கட்டாய நிலைமை. தமிழ், தமிழர் என்பதை விட கூட்டணி, அதை காப்பாற்றினால்தான் வீட்டணி என்ற நிலைமை அவருக்கு. இந்திய அரசோ தனது பண்புகளின்படி எந்த ஒரு தேசிய இனத்தையும் ஆதரிக்கமுடியாத நிலைமை. ஏற்கனவே காஷ்மீரால், நாகாவால், அஸ்ஸாமால்,மிசோரத்தால், சீக்கியரால், தனது இறுப்புக்கே ஆபத்து விளையுமென இந்திய அரசு அஞ்சிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ் இனம் தனது தேசிய அடையாளத்தை நிறுவிக்கொள்ள முன்வந்தால் எப்படி இந்திய அரசு அதை ஏற்றுக்கொள்ள முடியும்?
தற்காலிகமாக ஒரு வங்காள தேசத்தை, பாகிஸ்தானை பிரிப்பதற்காக இந்திய அரசு ஆதரிக்கலாம். தற்க்காலிகமாக ஒரு இலங்கையை தன் கைக்குள் வைத்து கொள்வதற்காக ஈழத்தமிழருக்கு ஆயுதம் கொடுக்கலாம், பயிற்சி கொடுக்கலாம். அதற்காக ஈழத்தின் விடுதலையை, அருகே இருக்கும் இந்திய பேரரசு ஏற்றுக்கொள்ளமுடியுமா என்ன? அதனால் அங்கெ ஈழத்தில் விடுதலை பெரும் நிலைக்கு தமிழர்கள் செல்வார்கள் என்றால், வல்லாண்மை குணம் கொண்ட இந்திய அரசு அதை ஒடுக்கியே ஆகவேண்டும் என்பதுதானே அவர்களது சிந்தனையாக இருக்கமுடியும்? அதுதானே அமெரிக்கா இந்திய அரசிடம் விரும்புவதும்? ஆகவே இந்திய அரசு தெளிவாக ராஜபக்சே ஆதரவு நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்து விட்டது. இதை உணராமல் என்றுமே கருணாநிதி அரசியல் நடத்தவில்லை. அதனால் இந்த ஈழத்தமிழர் விசயத்தில், கருணாநிதி தொடக்கம் முதலே மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிந்தே வைத்திருந்தார் என்பதும், அதை ஆதரித்தே வந்தார் என்பதும் கவனிக்கப்படவேண்டும். அதை அவ்வப்போது கருணாநிதியே சொல்லியும் வந்தார். தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்று அவ்வப்போது இலங்கை தமிழர் பற்றிய நிலையில் கூறிவந்துள்ளார்.
அவரது எதிர்ப்பார்ப்புக்கு மீறி ஈழத்தமிழர் போர் சென்றுவிட்டது. அதாவது எம்.ஜி.ஆர். காலத்தில், அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று பெயர் பெற்று இருந்தார். அதாவது எம்.ஜி.ஆர்.தான் பிரபாகரனுக்கு நெருக்கம் என்பதாகவும், எம்.ஜி.ஆர்.தான் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்பதாகவும், ஒரு கருத்து இருக்கிறது. சமீபத்தில்கூட, யாழ்ப்பணத்தில், பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில், இருந்த எம்.ஜி.ஆர். சிலையை, சிங்கள ராணுவத்தினர் இந்த கைதானே புலிகளுக்கு பணம் கொடுத்தது என்று கூறி, எம்.ஜி.ஆர்.சிலையின் கையை வெட்டினார்கள் என்பதாக கூறுகிறார்கள். அதேபோல ஜெயலலிதா ராஜபக்சே எதிர்ப்பு அறிக்கை விட்டதற்காக, அதே ராணுவத்தினர் எம்.ஜி.ஆர். சிலையை முழுமையாக உடைத்தனர் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பிரபாகரன், எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்ற கருத்து இருக்கிறது. அப்படியானால் கருணாநிதி இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அன்றே எம்.ஜி.ஆர். இருக்கும்போதே கருணாநிதி, டெலோ தலைவராக இருந்த ஸ்ரீ சபாரத்தினத்திற்கு நெருக்கமானவர் என்பது ஒரு உண்மை. அப்போது டெலோ என்ற அமைப்பை ஆரம்பிக்க ரா என்ற இந்திய வெளிவிவகாரதுறையின் உளவு அமைப்பு முழுமையாக உதவியது என்பதும் வரலாறு. அகவே டெலோவையும்,ஸ்ரீ சபாரத்தினத்தையும், புலிகள் அழிக்கும்போது அது எம்.ஜி.ஆர். ஆட்கள், தனது ஆட்களை அழித்தார்கள் என்பதாக கருணாநிதி எடுத்துக்கொள்வார் அல்லது எடுத்துக்கொண்டார் என்பது சிதம்பர ரகசியம் அல்ல. அதே சமயம் அதை பகிரங்கமாக கருணாநிதியால் சொல்லமுடியவில்லை. காரணம் டெலோ அமைப்பு மத்திய அரசுக்கு வேண்டிய ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதேசமயம் பிளாட் தலைவர் உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டபோது, கொன்றது ரா அமைப்பின் நெடுங்காலத்திட்டம் என்று தெரியாத கருணாநிதி, உமாவை கொன்றது புலிகள் என்று எண்ணி தனது அறிவாலய வளாகத்திலேயே ஒரு கண்டனக்கூட்டத்தை நடத்தினார். புலிகளுக்கு எதிராக செயல்படுவதாக எண்ணி, உமா சார்பாக அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்ற புரிதலில், அந்த கூட்டத்தை கருணாநிதி ஏற்பாடு செய்தார். இவ்வாறு தொடக்கம் முதலே புலிகளை தனக்கு எதிரான அமைப்பாக் எண்ணி வளர்ந்தவர் கருணாநிதி.
நாலாவது வன்னிப்போர் நேரம்.இங்கே ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தோன்றி கூட்டங்கள் போடத்தொடங்கியது. அதுவும்கூட, தன்னை ஈழத்தமிழர் என்ற பெயருடன் வெளிவரத்தயாராய் இல்லை. அதற்கு என்ன அரசியல் காரணமோ தெரியவில்லை. எல்லாம் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற அரசியல் விளையாட்டு. அவர்கள் நடத்திய கூட்டங்களுக்கு, தமிழ் நாட்டு மக்களது கவனம் செல்லத்தொடங்கியது. ஏன் என்றால் அதுமட்டுமே ஈழத்தமிழர் பற்றி பேசியது. கருணாநிதி சிந்தித்தார். மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி சிந்தித்தார். ஒரு புதிய மைப்பை உருவாக்க திட்டமிட்டார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு எதிராக ஒரு புதிய அமைப்பை உருவாக்க சிந்தித்தார். சுப. வீரபாண்டியனை கூப்பிட்டு பேசினார். அவரோ காங்கிரசுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்காக அமைப்பை உருவாக்குவதில் உடன்படவில்லை. ஆனாலும் கருணாநிதி முடிவு செய்தார். ஒரு அமைப்பு உருவானது. இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்று அதற்கு பெயர் வைத்தார். அதுவும் ஈழத்தமிழர் என்ற பெயரை மறைத்து எழுப்பப்படும் அமைப்பே. காங்கிரசு கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டு ஈழத்தமிழர் என்று இந்திய அரசு நடத்தும் நாலாவது வன்னிப்போர் காலத்தில், கருணாநிதி ஒரு அமைப்பை நடத்த முடியுமா? அதனால்தான் அது இலங்கை தமிழர் என்று ஆனது. இரண்டு பக்கமும், ஈழத்தமிழர் இல்லாமல் போயினர். இலங்கை தமிழர் என்றால், இந்திய வம்சாவழியான, மலையக தமிழரா? அல்லது இங்கிருந்து சென்ற தமிழ் பேசும் முஸ்லிம்களா? அல்லது ஈழத்தமிழர் என்ற பெயரை தாங்கியுள்ள வடக்கு, கிழக்கு மாகாண தமிழரா? என்று யாரும் குழம்ப வேண்டாம். அந்த வார்த்தைதான் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்படும் தமிழர் என்பதை நிரூபித்துக்கொண்டே, புரட்சி பேசுவதற்கு லாயக்கான வார்த்தைகள். ஆகவே இங்குள்ள நாடாளுமன்ற கட்சிகள் இலங்கை தமிழர் என்ற பெயரில், போராடும் ஈழத்தமிழருக்கு ஆதரவு என்று இங்கே அரசியல் நடத்தவே விரும்பினார்கள்; விரும்புகிறார்கள் எண்பது கண்கூடு. ஆகவே கருணாநிதியும் தனது தி.மு.க. கட்சியின் செயற்குழுவை கூட்டி, 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்மானம் போட்டு, அதன்மூலம் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அதில் தி.மு.க., தி.க., காங்கிரசு, த.மு.மு.க. ஆகிய அன்றைய தனது கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டார். அதாவது பச்சையாக தேர்தலுக்காக இந்த அமைப்பை ஒரு கூட்டணி அமைப்பாக உருவாக்கினார் என்பது தெரிந்தது.
ஈழத்தமிழர் பிரச்சனை நாடாளுமன்ற தேர்தல் முடிவை பாதிக்கும் என்று அனைவரும் அல்லது கருணாநிதியை எதிர்த்தவர்கள் எண்ணினார்கள். காங்கிரசு கட்சிதான் ஈழத்தமிழரை போரின் மூலம் கொல்லுவதற்கு துணை செல்கிறது என்பதை உலகமே புரிந்திருந்தது. அதை ஒட்டி, காங்கிரசு கட்சியின் கூட்டணிக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று எல்லோரும் அல்லது எதிர்கருத்தாளர்கள் எண்ணினார்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் அப்படி எண்ணவில்லை. அதற்கு காரணம் கருணாநிதி எடுத்த இந்த தந்திரம் தான். அதாவது ஈழத்தமிழருக்காக பேசுவதில், நெடுமாறன் தலைமையிலான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை போலவே, கருணாநிதியின் இலங்கை தமிழர் நல உரிமை பேரவையும் கூட்டம் போட்டு பேசத்தொடங்கியது. அதில் காங்கிரசுகாரர்களும் பேசினார்கள். அவர்களும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசினார்கள். அதற்கு தி.மு.க. மேடை போட்டு கொடுத்தது. அதில்கூட த.மு.மு.க. தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசிய அளவுக்கு கூட யாரும் பேசவில்லை. ஜவாஹிருல்லாஹ் மத்திய அரசு இலங்கை அதிபர் ஆட்சிக்கு செய்துவரும் ஆயுத உதவி பற்றி வெள்ளை அறிக்கையை வைக்க வேண்டும் என பேசினார். இதுபோன்ற பேச்சுக்கள் கருணாநிதி குடும்பம் கையில் உள்ள சன்டி.வீ.யிலும், கலைஞர் டி.வீ.யிலும், தொடந்து காட்டப்பட்டது. மானாட மயிலாட, தொடர் நாடகங்கள், சினிமா பாட்டுகள், மற்றும் செய்திகளை இந்த இரண்டு தொலைக்காட்சியிலும்தான் தமிழ் நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். அப்போது அவர்கள் கருணாநிதி நடத்தும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை கூட்டங்களையும் பார்கிறார்கள். அதுமட்டுமல்ல. தனது அமைப்புமூலம் கருணாநிதி இலங்கை தமிழருக்காக எல்லா மாவட்டங்களிலும் ஊர்வலங்கள் நடத்தி காட்டினார். அது எதிர் தரப்பினர் செய்துவந்த கூட்டங்களை விட அதிக கூட்டத்தை காட்டியது. அதை அவர்களது தொலைக்காட்சிகளும் காட்டின. அதைத்தான் பெருவாரியான தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அப்படியானால் அவர்களுக்கு எப்படி கருணாநிதியின் கூட்டணி ஈழத்தமிழருக்கு எதிரானது என்ற சிந்தனை அந்த தேர்தல் நேரத்தில் வந்திருக்கும்? வரவில்லை. மாறாக ஈழத்தமிழர் பிரச்சனை தேர்தல் பிரச்சனையாக தமிழ் நாட்டு மக்களால் பார்க்கப்படவில்லை. அதற்கு தமிழ் மக்கள் உணர்வற்றவர்கள் என்று பொருள் அல்ல. அவர்கள் இரண்டு குழுக்களுமே ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்கள் என்பதாக இந்த நாடகம் நம்ப வைத்தது அதனால் ஈழம் தேர்தல் விவாதமாக பின்தங்கிய மக்கள் மத்தியில் இல்லை. அதனால் மீண்டும் கருணாநிதி தரப்பு வென்றது.
ஆனால் நாலாவது வன்னிப்போர் தமிழருக்கு ஒரு தற்காலிக தோல்வியை ஏற்படுத்திய பிறகு, விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதாக அரசு தரப்பு அறிவித்தபிறகு நேற்றுவரை போரை நிறுத்த முயற்ச்சித்ததாக கருணாநிதி நடித்து வந்ததை தமிழர்கள் சந்தேகப்படத்தொடங்கி விட்டார்கள். அந்நேரம்பார்த்து புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குறிப்பாக ஈழத்தமிழர் மத்தியில் கருணாநிதி ஒரு இனத்துரோகி என்ற சொற்றொடர் பிரபலமாகத்தொடன்கியது. ஏனென்றால் தமிழ்நாடு உட்பட உலகம் எங்கும் பிரபாகரனை தமிழர் தலைவராக என்றுக்கொண்டார்களே தவிர கருணாநிதியை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவே இவர் பற்றிய துரோகி பெயர் வலுவாக உதவியது. அதை எப்படியாவது துடைக்க எண்ணிய கருணாநிதி அடுத்த சதியில் இறங்கினார். அதுதான் முதலில், 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் உலக தமிழர் மாநாடு என்று அறிவித்தார். உடனே ஜெயலலிதா தமிழ் ஆராய்ச்சி இல்லாமல் உலக தமிழர் மாநாடா என்றவுடன், தமிழ் ஆராய்ச்சியாளர்களை தொடர்பு கொண்டார். எல்லோரும் கை விட்டுவிடவே, உலக தமிழ் செம்மொழி மாநாடு என்ற புது பெயரில் மாநாடு அறிவித்தார். அதுவும் புலம் பெயர் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் அதை பயங்கர அளவில் செலவு செய்து, ஐந்து நாட்கள் திருவிழா போல நடத்திவிட்டார். துரோகி பட்டத்தை இதன்மூலம் துடைத்துவிட்டோம் என எண்ணி அவர் மகிழ்ந்து வந்த நேரத்தில், ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார். அது இவரை போர்க்குற்றவாளி என முத்திரை குத்தியது. அதில் மீண்டும் கருணாநிதி உடைந்து போனார். இது எதிர்பாராத தாக்குதலாக அவருக்கு ஆகியது. உலகத்தமிழர் மத்தியிலும் கருணாநிதியை தாக்குவதற்கு ஒரு புதிய ஆயுதம் கிடைத்துவிட்டது. போர்க்குற்றவாளி என்ற சொல் உள்ளபடியே கருணாநிதிக்கு வழக்கையிலேயே கிடைக்காத கிடைக்கமுடியாத ஒரு சொல். அது அழகாகவே இருக்கிறது. இந்தநாள்வரை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் வாழ்ந்ததாக உரக்க கூவி வந்த ஒரு தலைவருக்கு, அவரது வாழ்நாள் காலத்திலேயே எண்பத்து ஏழு அகவையில், இப்படி ஒரு அவப்பெயர் என்றால் அது ஒரு சரித்திர நிகழ்வாக ஆகிவிட்டது.
வரலாற்றில் தமிழ் பயிற்று மொழிக்காக செவி மடுக்காத ஒரு தலைவர் தனது கடைசி காலத்தில் தன் மீது விழுந்த துரோகி பட்டம் நீங்குவதற்காக தமிழ் பயிற்றுமொழியை, பொறியியலுக்கும், அடுத்து மருத்துவத்திற்கும் கொண்டுவர எடுக்கும் முயற்சி உள்ளபடியே நல்ல முயற்சி ஆனாலும் அதன் பலனை அவர் பெறமுடியாமல், மீண்டும் ஒரு முத்திரை அதாவது போர்க்குற்றவாளி முத்திரை விழுந்துவிட்டது. அதை திசை திருப்ப இன்னொரு முயற்ச்சியை கருணாநிதி செய்தார். அதுதான் மீனவர் ஒருவர் வேதாரண்யத்தில் சிங்கள கப்பல்படையினால் அடித்து கொல்லப்பட்டபோது, உடனே தனது கட்சியின் மீனவர் அணி மூலம், ஒரு ஆர்ப்பாட்டத்தை இலங்கை தூதரகம் முன்பு நடத்த வைத்தார். அது ஒரு திசை திருப்பும் முயற்ச்சியாக அவர் எண்ணி செய்தார். ஆனால் அதிலும் மீண்டும் தோற்றுபோனார். ஏன் என்றால் அதே நேரம் சீமான் சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த, அதில் சீமான் சிங்களரை கொல்லவேண்டும் எனக்கூறியதாக கைது செய்யப்பட, அதுவே கருணாநிதியின் அடுத்த தமிழ் முகமூடியையும் கிழித்து விட்டது. சீமானை இப்போது தேசிய பாதுகாப்புசட்டத்தின் கீழ் கருணாநிதியால் .அடைத்துள்ளார்.அதன்மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கருப்பு சட்டங்களை கருணாநிதி தமிழர் உணர்வுகளுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்பது அம்பலமாகி உள்ளது.இவ்வாறு நாளுக்கு நாள் தான் எடுக்கும் ஒவ்வொரு தந்திரமுயற்ச்சியிலும் கருணாநிதி தோற்று வருவது இன்றைய தமிழ்நாட்டு அரசியலாக இருக்கிறது.

Monday, July 12, 2010

கோரக் கொலைக்கு கௌரவப் பெயரா?

கடந்த 2 வாரங்களாக ஊடங்களில், குடுப்பத்தாரே செய்யும் கௌரவக் கொலைகள் என்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியா எங்கும் இவ்வாறு கௌரவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தான் செய்தி. பஞ்சாப் மாநிலத்திலும், அரியானா மாநிலத்திலும், மேற்கு உத்திரபிரதேச மாநிலத்திலும் இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று தெரியவருகின்றது. அப்படி நடைபெறும் பல கொலைகள் வெளி உலகத்திற்கே தெரியாமல் போய்விடுகின்றது. அதாவது ஊடகங்களிலும் வருவதில்லை. அரசாங்கத்திற்கும் தெரிவாதில்லை. கிராமங்களில் சீக்கிய குடும்பங்களிலும், இந்து, முஸ்லிம் குடும்பங்களிலும் இது போன்ற கொலைகள் நடந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் மட்டுமே 900 கௌரவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், மீதமுள்ள இந்தியா முழுமையும் 200 கொலைகள் வரை நடந்துள்ளதாகவும் ஒரு அறிவிக்கை கூறுகிறது. கௌரவக் கொலைகளை நடத்தாமல், சில குடும்பங்களில் பலாத்காரத் திருமணங்களை செய்து வைக்கிறார்கள். எல்லாமே திருமண உறவுகளை ஒட்டித் தான் இத்தகைய கோரச் சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு பலாத்காரத் திருமணத்திற்கு சம்மதிக்காத மணப்பெண், அதையொட்டி கொலைச் செய்யப்படுகிறார். அல்லது தனது குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாத ஒரு மாப்பிள்ளையை தேர்வு செய்யும் ஒரு மணப்பெண், அந்த குடும்பத்தாராலேயே கொலை செய்யப்படுகிறார். அதன் மூலம் தங்களுடைய பாரம்பரியத்தை அல்லது பாரம்பரியத்தின் கவுரவத்தை காப்பற்றியதாக அந்த குடும்பத்தினர் எண்ணுகிறார்கள். இது தான் சமூகத்தின் அவலமான ஒரு முகம்.
மேற்கண்ட செயல்களால் அல்லது பாரம்பரிய கவுரவங்களால், இளம் பெண்கள் தங்களது மனித உரிமையை இழந்து தவிக்கின்றனர். ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் நடைபெறும் திருமணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் தான் பெறுப்பு என்பதாக ஒரு பண்பாடு இங்கே பழக்கமாக ஆகியிருக்கிறது. பழக்கம் தனில் ஒழுக்கம் இல்லையேல், கழுத்துப் போயினும் கைக்கொளல் வேண்டாம் என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனுடைய சொற்கள் இங்கே எடுபடுவதில்லை. இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை பங்காளியை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்ற நடைமுறை சில நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறது. நிச்சயிக்கப்படும் திருமணங்கள் என்ற நிலையிலிருந்து, பலாத்காரமான முறையில் திருமணங்களை நடத்தி வைப்பது என்ற போக்கு, அத்தகைய கிராமங்களில் நிலவிவருகிறது. திருமணம் செய்து கொள்ளும் ஆண்களிடமும், பெண்களிடமும் அவர்களது ஒப்புதலை பெறுவது என்பது பழங்காலத்தில் சுத்தமாக இல்லாமல் இருந்தது. நிகழ்காலத்தில் அதுவே ஒப்புக்காக செய்யப்படுகின்றது.
இதுவரை நடந்து வந்த இத்தகைய இழிவான கொலைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பிறகு திடீரென விழித்துக் கொண்டது போல, மத்திய அரசு போசத்தொடங்கியுள்ளது. எல்லா பிரச்சனைகளையும் ஒப்படைத்தது போல, இந்த பிரச்சனைக்கும் ஒரு அமைச்சக குழுவிடம் ஒப்படைப்பது என்று மத்திய அரசு கூறுகிறது. இதற்காக ஒரு சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. காவலில் அடைக்கப்படும் குழந்தைகள், திருமணம், தத்து எடுத்தல் போன்ற பிரச்சனைகளின் மீது இரண்டு சட்ட நிபுணர்கள் கொடுத்த அறிக்கைதான், மேலே குறிப்பிட்ட செய்தியான ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1000 கோரக் கொலைகள், கௌரவத்தின் பெயரால் நடத்தப்படுகின்றன என்ற உண்மையை வெளியே கொண்டுவந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் மேற்கண்ட கொலைகளை, கௌரவக் கொலைகள் என்று விளக்கி ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதற்காக மத்திய அரசு முயற்சிக்கிறது. இது மிகவும் கொடூரமான குற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய குற்றத்தை செய்வதற்கு தளமாக இருக்கின்ற சாதி மற்றும் மத பஞ்சாயத்துகளையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பதற்காக மேற்கண்ட சட்டத்திருத்தம் வழிவகை செய்யும். சமீபத்தில் லண்டனில் நடந்த அனைத்து நாட்டு சட்ட நிபுணர்களும் ஒரு மாநாட்டில் இத்தகைய பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் இது போன்ற பலாத்கார திருமணங்களை தடை செய்ய 2007ம் ஆண்டிலேயே ஒரு குடியுரிமை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அப்போது தெரியவந்தது.
தமிழ்நாட்டிலும் இது போன்ற போலி கௌரவக் கொலைகள் நடந்துள்ளன என்ற செய்தி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது. அதைப்பற்றி ஊடகங்களும் தலையங்கங்கள் எழுதி வருகின்றன. அவற்றில் காதலை எதிர்க்கின்ற பெற்றோர்கள் பற்றியும், போலி கௌரவத்திற்காக கொலைகள் செய்வது பற்றியும் விலாவாரியாக எழுதுகிறார்கள். அதேசமயம் ஒரு ஊடகத்தில் கௌரவக் கொலை இங்கு வேண்டாம் என்ற தலைப்பிட்டு, அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம் என்று தங்களது பார்வையை எழுதியிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய சமூக வன்முறைகள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டத்தில் மாத்திரமல்ல, உலகம் எங்கிலும் இருக்கக் கூடாது என்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும்.
மேற்கண்ட போலி கௌரவக் கொலைகள், சமூகத்தின் வன்முறையால் நிகழ்த்தப்படுகின்றன. அதாவது சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியாத இத்தகைய சமூகக் கேடுகள், சமூகத்தின் வன்முறைகள் என்பதாக அழைக்கப்படவேண்டும். சாதி பகைமையும், சாதி இழிவுபடுத்தலும், பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக காண்பதும், சமூகத்தின் வன்முறைகள் என்பதாக காணப்படவேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமூக வன்முறைதான், குடும்பம் என்ற கட்டமைப்பின் மூலம், பலாத்கார திருமணங்களையும், போலி கௌரவக் கொலைகளையும் செய்து வைக்கிறது. ஆகவே இத்தகைய இழி செயல்களை நிறுத்துவதற்கு, சமூகத்தின் பார்வை மாற்றப்படவேண்டும்.
எப்படியும் இது போன்ற போலி கௌரவக் கொலைகள் அல்லது பலாக்காரமாக நடத்தப்படும் திருமணங்கள் அதிகமாக அல்லது முழுமையாக பெண்களை தான் பலியாடுகளாக ஆக்குகின்றன. அதனால் இவை எல்லாமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தான் அடிப்படையான உண்மை. ஆகவே சமூக வன்முறை மனப்பான்மையை, போக்குவதற்கு குறிப்பிட்ட குற்றங்களை செய்யாமல் இருக்கும் மனேபாவத்தை சமூகத்திற்கு ஏற்படுத்தவேண்டும் என்பது இது பற்றிய உடனடி புரிதலாக இருக்கலாம். ஆனால் நிலவும் சமூகங்களில், பெண்களை பற்றிய பார்வை என்பதுதான், இதற்கான அடிப்படை மனோபாவம் என்பதை நாடு உணரவேண்டும். பெண்களை பெற்றோர்களது அல்லது குடும்பத்தினரது ஒரு உடைமையாக பார்ப்பது என்பது தான் அந்த மனோபாவம். அதுவே குறிப்பிட்ட சாதியினுடைய, அல்லது மதத்தினுடைய அல்லது கிராமத்தினுடைய உடைமையாக பெண்களை காண்பது என்ற மனோபாவத்திற்கும் வழிவகை செய்கிறது. அதுதான் இத்தகைய போலி கௌரவக் கொலைகளை அங்கீகரித்து, அனுமதிக்கும் போக்கை சாதிக்கும், மதத்திற்கும், கிராமத்திற்கும் கொடுக்கிறது.
அதனால் இனி நாம் கௌரவக் கொலைகளை, கோரக் கொலைகள் என்று அழைக்கலாம். மானுடத்தின் சரிபாதியான பெண்கள் மனித உயிர்கள் என்பதையும், அவர்கள் எவருடைய உடைமையும் அல்ல என்பதையும் நாம் இந்த சமூகத்திற்கு உரைக்கும் அளவிற்கு உரத்தக்கூவுவோம்.

Thursday, July 8, 2010

பெண்கள் பெயரில் நிலப்பட்டா அதிகார மேம்படுத்தலை ஏற்படுத்துமா?

இந்திய துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு முற்போக்கான கோரிக்கைகள் முதன்மையாக எழுப்பப்பட்ட வரலாறு உண்டு. தந்தை பெரியார் காலந்தொட்டு, மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, வகுப்பு வாரி உரிமைக்கு ஆதரவாக, பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்காக, மாநில சுயாட்சி கோரிக்கைக்காக, தலித் மக்களின் நில உரிமைக்காக, மீனவ மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்காக என்று பல்வேறு நியாயமான பிரச்சனைகளும் தமிழ்நாட்டிலிருந்து எழுப்பப்பட்ட வரலாறு இருக்கிறது. அந்த பாணியில் இப்போது பெண்கள் பெயரில் நிலப்பட்டாக்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, பெண்கள் முன்னணி என்ற அமைப்பு எழுப்பியுள்ளது. இது நிலவும் ஆணாதிக்க சமூகத்தில், பெண்களை அதிகார மேம்படுத்தல் செய்வதற்காக எழுப்பப்படும் கோரிக்கை.
பெண்களை அரசியல் மயப்படுத்துவது என்பதன் மூலம், அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்துவது, மற்றும் மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக, பெண்களே பெண்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட பெண்கள் அமைப்புத் தான் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்து மாநிலமெங்கும் பெண்கள் பேரணியை நடத்தயிருக்கிறார்கள்.
மனிதகுல வரலாற்றில் புராதன காலம் என்பதாக ஒன்றை வரையறைச் செய்கிறார்கள். வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற சித்தாந்த அடித்தளத்தை எழுதிய காரல் மார்ஸும், மார்க்சியவாதிகளும் அதை புராதன பொதுவுடைமை சமுதாய அமைப்பு என்று அழைக்கிறார்கள். அதாவது மனிதன் வேட்டையாடும் காலத்தில் வாழ்ந்து வந்த வரலாற்றை அவ்வாறு தொகுத்துள்ளார்கள். காடுகளிலும், மலைகளிலும் பழங்குடி மக்களாக, இன்றைக்கு நாம் காணும் அறிவியல் வளர்ச்சிகள் உருவாகாத ஒரு காலகட்டத்தில், விலங்குகளை வேட்டையாடும் குழுக்களாகவும், பழங்களையும், இயற்கை வாய்ப்புகளையும் பயன்படுத்தும் பழங்குடிகளாகவும் மனிதர்கள் வாழ்ந்ததை அதில் விவரிக்கிறார்கள். அதையே ராகுல சாகிர்த்தியன் என்ற எழுத்தாளர், ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதில் காணப்படும் விவரங்களிலிருந்து, புராதன பொதுவுடைமை சமுதாய அமைப்பில், பெண்களுடைய தலைமை ஒவ்வொரு வேட்டையாடும் குழுவிற்கும் கட்டாயமாக தேவைப்பட்டது என்ற புரிதலுக்கு நாம் வரமுடியும்.
அன்றைய கட்டத்தில் விலங்குகளை எதிர்த்தும், இயற்கையின் பாதிப்புகளை எதிர்த்தும் மனிதன் வாழ்வதற்கு தனது வேட்டையாடும் குழுவின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை, முதன்மையாக இருந்தது என்று தெரிகிறது. அதற்காக தங்களுடைய குழுவின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு, பெண்ணான தாயை குழுவின் தலைமை பொறுப்பில் வைத்து, மானுட உற்பத்தியை அதிகப்படுத்தினார்கள் என்பதையும் அறிய முடிகிறது. வேட்டையில் கிடைக்கின்ற பலன்களையும், தங்களுக்குள் தேவைக்கேற்றப்படி பிரித்துக் கொண்டார்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. அதன் மூலம் மட்டுமே தங்களது குழுவின் ஒற்றுமையை சாதித்தார்கள் என்று அறியமுடிகிறது. அதன் பிறகே புதிய நவீன கருவிகள் வருகையும், நிலம் சார்ந்த விவசாய உற்பத்தியின் கண்டுபிடித்தலும், தனிச்சொத்துரிமையை கொண்டு வந்தது என்ற புரிதலுக்கு நாம் வர முடிகிறது. அப்போது தான் ஆண்களது தலைமை அல்லது அதிகாரம் மானுடக் கூட்டத்தில், நிறுவப்படுகிறது என்பதையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நாம் பார்க்கும் உலகில் எல்லாவுடைமைகளும், எல்லா இயக்கங்களும் ஆண்களின் தலைமையில் தான் செயல்படுகிறது என்பதை காண்கின்றோம். சொத்துக்கள் அனைத்துமே ஆண்களின் பெயரில் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதை பார்க்கின்றோம். குடும்பங்களுக்கு தலைவர்களாக ஆண்களை மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. ஆண் இல்லாமல் பெண் தலைமையில் இருக்கின்ற குடும்பங்களுக்குக் கூட, குடும்ப அட்டைகள் வழங்கும் போதும், வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளை அங்கீகரிக்கும் போதும், அரசு அதிகாரிகளுக்கு இணக்கமில்லாமல் இருப்பதையும் நேரில் அனுபவிக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு சூழலில், பெண்கள் பெயரில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுங்கள் என்பதாக ஒரு கோரிக்கை எழுப்பப்படுகிறது.
நிலமும், வீடும் பெண்களின் அடிப்படை உரிமை என்றும், மறுக்கப்பட்ட இந்த உரிமைகளை பெறுவதற்காக கோரிக்கை வைக்கிறோம் என்பதும் அவர்களது குரலாக இருக்கிறது. வீடு இல்லாத பெண்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை பெண்கள் பெயரில் வழங்க வேண்டும் என்கிறார்கள். அதை விளக்கும் போது பெண்கள் மட்டுமே பொறுப்பேற்றிருக்கும் குடும்பங்கள், தனித்து வாழும் பெண்கள், சீற்றம் அல்லது அசாதாரண சூழலினால் வீடு இழந்தோர், திருநங்கையர் மற்றும் தனித்தோ குடும்பமாகவோ வாழும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய பெண்களுக்கு அவர்கள் பெயரிலேயே வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது தான் அதன் விளக்கம். அதேபோல விவசாயம் சார்ந்த பெண்களுக்க அவர்கள் பெயரிலேயே விவசாய நிலங்களை அல்லது விவசாயம் செய்வதற்கான நிலங்களை பட்டாவாக போட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்கின்றனர். அப்படி நிலம் வழங்கும் போது, பாசனத்திற்கான நீராதாரத்திற்கும், இடு பொருள்களுக்கு தேவையான நிதி ஆதாராத்திற்கும் அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயம் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உணவு உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்ற அரசு, பெண்கள் கைகளில் விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும் போது தான், அத்தகைய பாதுகாப்பு ஏற்படும் என்ற அவர்களது வாதம் ஏற்புடையதாக இருக்கிறது. விவசாயம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டு நிகழ்வாக நமது நாட்டில் நிலைத்து வருகிறது என்று ஆக்கப்பூர்வமான ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். நிலம் அன்னியமாதல் என்ற நிகழ்வுக்குப் பிறகு தான், பண்பாட்டுச் சீரழிவு துரிதப்படத் தொடங்கியது என்ற அவர்களது வாதமும் இயல்பான நிலைமையை எடுத்துச் சொல்கிறது. அதனால் பண்பாட்டு அடையாளங்களை நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும் என்றால், பெண்கள் கைகளில் நிலங்களைக் கொடுங்கள் என்று வாதிடுகிறார்கள். இப்போது தமிழக அரசு கொடுத்து வருகின்ற சிறிதளவு இலவச நிலப்பட்டாக்களும், கூட்டுப்பட்டா முறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இணைத்துக் கொடுக்கப்படுகிறது. அதை பெண்கள் பெயரிலேயே பதிவு செய்து கொடுப்பது எளிதாகயிருக்கும் என்றும் கூறுகிறார்கள். அதன் மூலம் நிலம் சம்மந்தப்பட்டு ஆண்கள் மத்தியில் எழுகின்ற வன்முறைகள் குறையும் என்பதும் ஒரு வாதம்.
ஐ.நா.சபையின் விளக்கப்படி 50% இருக்கும் பெண்கள் உலகமெங்கிலும் 70% உழைப்பை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் கைகளில் 1% கூட சொத்துரிமை இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் இப்போது பெண்கள் மத்தியிலிருந்து எழுகின்ற முழக்கமான, பெண்கள் பெயரில் நிலப்பட்டா வழங்கு என்பது பொருத்தமான, புரட்சிகரமான முழக்கமாக இருக்கிறது. அதேசமயம் இந்திய அரசியலில் நாடாளுமன்ற அரசியல் தான் முதன்மை வகித்து வரும் வேளையில், அரசியல் கட்சிகள் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளன. அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையாக ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இங்கே பெரும்பான்மை அரசியல் என்ற ஒன்று நிலவி வரும் சூழலில், சாதியால், மதத்தால், பாலினத்தால் அதுவே அரசியல் கட்சிகளிலும் எதிரொலிக்கிறது. அதனால் தான் சுதந்திரமான பெண்கள் இயக்கங்கள் அரசியல் அரங்கில் தோன்றி, வளர வேண்டிய தேவை, கட்டாயமான ஒன்றாக ஆகிவிட்டது. இதுவே மலர்ந்து ஒரு பெண் தலைமை சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதற்கு வித்திடுமா என்ற தொலைநோக்கு பார்வையும் தவறல்ல என்று தான் நமக்குப்படுகிறது.